எமது வரலாறுகள் சிதைந்து செல்வதையும், மறந்து போவதையும் நாம் கண்கூடாக காணமுடிகின்றது. வரலாறு என்பது ஒரு இனத்தின் அடையாளம். அடையாளங்களைத் தொலைத்த இனம் வரலாற்றில் இருந்தும் நீக்கப்பட்டுவிடலாம். நாம் ஒவ்வொருவரும் எமது அடையாளங்களை அறிந்துகொள்வதும் பகிர்ந்துசெல்வதும் அவசியமாகும். அந்த வகையில் தமிழ் மாமன்னன் எல்லாளன் பற்றிய சிறு குறிப்பு இது.
மன்னன் எல்லாளனின் ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் இருந்ததென மாகவம்சமே குறிப்பிடுகின்றது. மகாவம்சத்தின்படி எல்லாளன்தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ இளவரசனாவான். ஆனால் எல்லாளன் ஈழவூரின் உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்தவன் ஆவான். அதற்கான ஆதாரங்கள் உண்டு. உத்தரதேசத்தில் குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் கட்டியுள்ளான். ஆங்கிலேய நாட்டவரான எச்.பாக்கர் மகாவம்சத்தில் அநுராதபுரத்திற்கு வடக்கேயமைந்த பெபிலாபியை பூநகரியின் தென்னெல்லையிலுள்ள பாலியாறு என அடையாளம் கண்டு இங்குள்ள வவுனிக்குளத்தின் ஆரம்பத்தோற்றம் எல்லாளனின் சாதனைகளில் ஒன்றாக இருக்கலாமெனக்கூறியுள்ளார்.
.கி.மு 177 ஆம் ஆண்டு ஈழசேனன் (சேனன்) ,நாககுத்தன் (குத்திகன்) ஆகிய ஈழத்தமிழ் மன்னர்களால் அனுராதபுர அரியணை சூரத்தீசன் எனப்படும் சிங்கள மன்னனிடமிருந்து கைப்பற்றப்பட்டது. அரியணையை இழந்த சூரத்தீசன் தப்பி ஓடினான். அரியணையை கைப்பற்றிய ஈழசேனன் தான் சைவன் எனினும் எந்த மதத்திற்கும் எதிரானாவனோ அல்லன் எனவும் தனது ஆட்சியில் மொழி,மத வேறுபாடில்லை. சேர்ந்தே உழைப்போம்; சேர்ந்தே உண்போம், என்றான். பெளத்த பிக்குகளும் அவனை ஆதரித்திருந்தனர். 22 வருடங்களின் முடிவில் கி.மு 155 ஆம் ஆண்டு தைமாதத்து வைகறை சிங்கள இளவல் அசேலனின் சேனை அனுராதபுரத்தினை கைப்பற்றிக்கொண்டது. அசேலன் என்பவன் சூரத்தீசனின் தமையனான மகாசிவனின் ஒன்பதாவது மகன் ஆவான். நீண்ட கால ஆட்சியும் அனுராதபுரத்தில் நிலவிய அமைதியும் மன்னனைத் தன் படைகளை தளர்த்த வைத்திருந்ததே தோல்வியை தளுவ காரணமாகியது. ஆட்சி மாற்றம் தேவைப்படாது என்றே மன்னன் எண்ணியிருந்தான். ஆனால் அசேலனின் படையெடுப்பின் போது அனுராதபுரத்து சிங்கள மக்களும் பிக்குகளும் காட்டிய ஆதரவும் படைநடவடிக்கை மீதான விருப்பும் மன்னனை நிலைகுலைய வைத்தது. இவை திடீர் மாற்றமல்ல என்பதும் நீண்டகால சதி என்பதையும் மன்னன் புரிந்துகொண்டபோது காலம் கடந்திருந்தது. நாககுத்தன் உத்தரதேசத்தில். ஈழவூருக்கு செய்தியனுப்ப கால அவகாசமில்லை. மன்னனின் படையிலிருந்த சிங்கள வீரர்களெல்லாம் அசேலனின் பக்கம். இருபத்தியிரண்டு வருடகால ஆட்சியின் அஸ்தமனம் ஆரம்பமாகிவிட்டதை மன்னன் புரிந்துகொண்டான். கலவரமடைந்த வேளக்கார வீரரிடம் மன்னன் ‘ஆட்சியென்பது இவ்வாறானதுதான். அதற்காக எதிரிகளுக்கு அஞ்சி இராச்சியத்தை தூக்கிக் கொடுத்துவிட்டுப் பேடி போல ஓடிவிட முடியாது. வாளேந்திய கடைசி வீரன் இருக்கும் வரை எதிரியை எதிர்த்தே சாவோம்.’ வேளக்கார வீரர்களின் தலைவன் மறுத்தான். ‘நாங்கள் சம்மதமே, ஆனால் அரச வம்சம் அழிந்து விடக்கூடாது. இளவரசரையும், இளவரசியையும், மகாராணியையும் உடனடியாக ஈழவூருக்கு அனுப்பவேண்டும்’ மன்னன் சம்மத்தித்தான். அரச வம்சம் காப்பாற்றப்பட்டது. மன்னனும் வீரர்களும் வீரகாவியம் படைத்தனர். மன்னனின் சிரசை கொய்த அசேலன் மூங்கில் கழியில் குத்தி கோட்டை வாசலில் வைக்க உத்தரவிட்டான்.
செய்தியறிந்த நாககுத்தன் தன் சேனையுடன் அநுராதபுரம் சென்று தானும் மன்னன் வழியை தொடர்ந்தான். ஈழவூர் வந்த மாகாராணி பொன்னம்மைதேவி இளவரசர் எல்லாளன் எனப்படும் ஈழராஜாவையும் நாககுத்தனின் மகன் திக்கஜனையும் போர்க்கலைகள் கற்று வருவதற்காக சோழ நாட்டிற்கு அனுப்பி வைத்தார். சோழதேசத்தில் பலகலைகளையும் கற்ற இவ்விளவல்கள் கி.மு 145 ஆம் ஆண்டு ஈழவூர் திரும்பினர். நீதிநெறி தவறாது ஆட்சி புரிந்த தன் கணவனைக்கொன்று தமிழர்களை ஈழவூருக்கு துரத்தி விட்டதால் கோபமுற்றிருந்த மகாராணி பொன்னம்மைதேவியார் உத்தரதேசத்தில் பெரும் சைனியத்தை தயார்ப்படுத்தி வைத்திருந்தார். காலம் கனிந்தது. அநுராதபுர இராச்சியம் மீண்டும் தமிழர் வசமானது
எல்லாளன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். மகாவம்சம் கூறுகின்ற ஒரு கதை எல்லாளன் பெளத்த மதத்தை ஆதரவளித்து போற்றிப்பாதுகாத்தான் என்பதையும் நிரூபிக்கின்றது. தன் தாய் மரணித்ததை அறிந்த எல்லாளன் தேரிலேறி சேத்தியகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, தேரின் அச்சு தாதுகோபமொன்றில் பட்டு தாதுகோபத்திற்குச் சேதத்தை ஏற்படுத்தியது. மன்னன் தேரினின்றும் கீழே குதித்து, தனது தலையை உடனடியாகச் சீவிவிடுமாறு, அமைச்சர்களிடம் கூறினான். ‘தெரியாமல் நிகழ்ந்தது அமைதியடைக. தூபத்தைத் திருத்தி விடுவோம்’ என்றனர் அமைச்சர்கள். பதினைந்து கற்களே சிதைவடைந்திருந்தன. அப்படியிருந்தும் அந்தத் தாதுகோபத்தை புனரமைக்க எல்லாளன் பதினையாயிரம் கஹாப் பணங்களைச் செலவிட்டதுடன் தன் தாயின் இறுதிக்கிரியைக்குச் செல்லாமல் தாதுகோபம் புனரமைக்கும் வரை அங்கேயே தங்கியிருந்தான்.
.
காக்கவண்ணதீசனினதும் விகாரைமகாதேவியினதும் மூத்தமகன் காமினி அபயன் ஆவான். இவன் தந்தையின் சொல்கேளாது இருந்தமையால் பிற்காலத்தில் துட்டகாமினி என அழைக்கப்பட்டான். துட்டகாமினி கருவிலிருந்தே தமிழருக்கெதிராக உருவாக்கப்பட்டவன். துட்டகாமினி ஒருமுறை கட்டிலில் கால்களை முடக்கிப்படுத்திருந்தபோது தாய் ஏன் என வினாவினாள், அதற்கு ‘வடக்கே தமிழரும் தெற்கே சமுத்திரமும் நெருக்கும்போது எப்படியம்மா கால்களை நீட்டி படுக்கமுடியும்’ என்றான். இவ்வாறு கருவிலிருந்தே இனவெறியூட்டப்பட்டு வளர்த்த துட்டகாமினி தன் தந்தையின் மறைவிற்குப்பின் பெரும்சேனயுடன் எல்லாளனின் மீது படையெடுத்தான். நீண்ட நாள் தொடர்ந்த போர் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் சலிப்படைந்த துட்டகாமினி இறுதியில் வயது முதிர்ந்த நிலையிலிருந்த ‘கிழப்புலி’ எல்லாளனை தனிச்சமருக்கு வரும்படி வஞ்சக அழைப்பை விடுத்தான். எல்லாளனின் அமைச்சர்களோ ‘உங்களின் தனிப்பட்ட வீரம், வெற்றி என்பவற்றுடன், தமிழ்க்குடி மக்களின் வீரம், வெற்றி, நல்வாழ்வு என்பனவற்றைத் தொடர்புபடுத்துவதால், இத்தனிச்சமர் தமிழ்க்குடி மக்களின் தோல்வியாக மாறிவிடும், மன்னா. வரலாறு உங்களை சிலவேளை மன்னிக்காது’. என்றனர். மன்னன் முகத்தில் வியப்பும் கவலையும் படர்ந்து பரவின. ‘மக்களின் எதிர்காலத்தை நினைத்து தனிச்சமரை மறுப்பதா? அல்லது தமிழர் வீரத்திற்கேற்ப எதிரியின் அழைப்பை ஏற்று தனிச்சமர் புரிவதா?’ மறு கணமே தெளிந்தான். மறுப்பதற்கு நாம் ஒன்றும் பேடிகளல்லர். கோட்டை வாயில் திறக்கப்பட்டது. இரு சேனைகளும் சூழ கிழப்புலியும் இனவாத சிங்கமும் போரிட்டன. போர் நீண்டது. எல்லாளனின் போர் வலிமை விகாரைமகாதேவியை திகைப்படைய வைத்தது. நிலைமையை புரிந்த விகாரமகாதேவி கூட்டத்திலிருந்து வெளியே வந்து ‘மகாராஜா… எலாரா…’ எனக் கூக்குரலிட்டாள். குரல் வந்த பக்கம் எல்லாளன் திரும்பினான். ‘என் மகன்… மகாராஜா’ கூப்பிய கரங்கள் கூறின. திகைத்து நின்ற துட்டகாமினி மறுகணமே தன் தாயின் ‘யுத்த தந்திரத்தை’ புரிந்து கொண்டான். எல்லாளனின் மார்பை வேல் துளைத்து நிலை கொண்டது. கி.மு. 101 ஆம் ஆண்டு, 44 ஆண்டுகால ஆட்சியின் அஸ்தமனத்துடன், எந்த மதத்தை போற்றிப்பாதுகாத்தானோ அம்மதத்தினாலேயே வெட்டி சாய்க்கப்பட்டான்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal