
வாழ்க்கை ஒரு வரம்,
வாழ்தல் ஒரு கலை,
சவால் நிறைந்த வாழ்வில்
வாழ்வது ஒரு நிறை.
வெற்றிக்கான உழைப்பில்
ஆணின் பங்கு அதிகூடுதல்.
ஆணென்பது இறையியலின்
அற்புத படைப்பென்பர்.
பற்றுக்கோலாய்
தாங்கு தூணாய்
ஆணினத்தின் வேரது
படர்ந்து கிடக்கிறது
நானிலம் எங்கும்.
சவால் என்று வந்துவிட்டால்
சாதிக்கத் துடிப்பவன் ஆண்.
சாதனைப் பாதையிலே
போரிடும் குணம் கொண்டவன் ஆண்.
அணைப்பதில் தாயாகிறான்,
அடங்கிடும் சேயாகிறான்,
கொடுப்பதில் வகை பாரான்,
சுமப்பதில் கனம் பாரான்,
உளம் தவித்த வேளையிலும்
வலி வந்த போதினிலும்
துளி நீரைச் சிந்திடாது
துக்கத்தை அடக்கிவைப்பான்.
விதை முளைத்து மரமாவது போல்
வீறுகொண்டு எழுந்து நின்று
சாதனைக்கு வழி திறப்பான்.
அப்பாவாக, அண்ணனாக
கணவனாக, மகனாக
அத்தனை வியூகத்திலும்
உழைப்பினால் உயர்த்துகின்ற
உன்னத சக்தியாக
சிறப்பவன் ஆண்.
குடும்பம் நலிந்துவிட்டால்
தூக்கி நிறுத்துவது
ஆண்சக்தி.
மனங்கள் உடைந்துவிட்டால்
தோள் சாய்ப்பதும்
ஆண் சக்தி.
உலகிலே ஒப்பற்றவன்
ஆண் என்றால் மிகையில்லை.
பெண்ணைக் காக்கும்
போர்வீரனாய் புவியினில் வந்தவன்,
வலிகளை மிதித்தே நடக்கும்
ஆற்றலோன் ஆணே,
வாழ்க்கையை வென்று
சிறப்பவனும் அவனே…..
கோபிகை