ஒரு காலத்தில் ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்
இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான் அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்.
அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக்கொண்டிருந்தது.
எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது.
நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது, கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது, வருமானம் நாளுக்குநாள் குறைந்துகொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது.
கொல்லனுக்கோ ஊடலிலும், காதலிலுங்கூட நாட்டம் இல்லாமல் விரக்தி மனதில் குடிகொண்டது சோகமே உருவாகிவிட்டான்,,,
ஒருநாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலைசாய்த்து வானத்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான்.
மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் கரைந்தோடியது, அதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள், “ஐயா எஞ்சாமி எதுக்கு கலங்குதீக, இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே, அதை வெச்சு ராசாவாட்டம் வாழலாமே” என்றாள்.
புது நம்பிக்கை புது உற்சாகம் உள்ளத்தில், கொல்லன் விறகுவெட்டி ஆனான்
அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது. வீட்டில் தினமும் சோளக்கஞ்சி, கொள்ளுத் துவையல் கூடவே மனைவியின் சிரித்த முகமும் கனிவான கொஞ்சலும் அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும், சற்றே சோகமும் இழையோடி இருந்தது.
ஒருநாள் ஊடலோடு இருந்த வேளையில் மனைவி கேட்டாள் “மாமோய்,,, இன்னும் ஒங்க மனசுல ஏதோ சோகமிருக்காப்ல தெரியுதே, என்ன அது?”
விறகுவெட்டியான நம்ம கொல்லன் சொன்னான் “பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில் நம்ம வீட்டில் தெனந்தெனம் நெல்லுச்சோறும் கறிக்கொழம்புமாய் இருக்கும்.
இப்போ இப்படி வயித்தக்கட்டி வாழுறோமே, அதுதான்டி குட்டிம்மா மனசுக்கு என்னவோ போல இருக்கு இப்படி விறகு சுமந்துகிட்டு ஊர் ஊரா சுத்தினால் கிடைக்கிற வருமானம் நமக்கு நல்லபடியா வாழ பத்தலயே”என்றவனுக்கு கண்கலங்கவும் தவித்துப் போனாள் அவள் “வேணாஞ்சாமி வேணாம், நீக ஏங் குலசாமி, கண்ணு கலங்காதீக.
என்னோட நகை நட்ட வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே,,, அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வச்சிரலாம், காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம், கடைன்னு ஆயிட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாக, நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும” என்றாள்.
மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில், விறகுவெட்டியானவன் விறகுக்கடை முதலாளியானான், வருமானம் பெருகியது, அப்புறமென்ன வீட்டில் கறிசோறுதான். ஆனால் வாழ்க்கை அடுத்தடுத்த சோதனைகளை ஏற்படுத்தாமல் விட்டுவிடுமா என்ன, வந்தது கெட்ட நேரம், விறகு கடையில் தீ விபத்து அத்தனை முலதனமும் கரிக்கட்டையாகி விட்டது.
தலையில் அடித்துக் கொண்டு அழுதான் விறகு கடை முதலாளி. நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள், கலங்காதே நண்பா மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து, எதிர்காலத்தில் எதாவது நல்லது நடக்கும் என்றார்கள் மனைவி வந்தாள்.
கண்ணீர் துடைத்தாள் அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியனைத்தாள்,கண்ணீர் மல்க சொன்னாள்;
“இப்போ என்ன ஆயிடுச்சுனு எஞ்சாமி அழுதீக,
விறகு எரிஞ்சு வீணாவா போய்ட்டு, கரியாத்தானே ஆகியிருக்கு, நாளைலயிருந்து கரி யாவாரம் பண்ணுவோம்” தன் தலை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தவனுக்கு மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal