
வெயில், தலையில் இறங்கி உடல் முழுவது தன் அனல் தாக்கத்தை பரப்பியது. இதுவொன்றும் முதல் வெக்கையள்ள…சமீப காலமாய் அனுதினமும் வெளியில் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒன்றுதான், தயவுதாட்சன்யமின்றி மரங்களை வெட்டு,வெட்டுவென தரை மட்டமாக்கினால் இப்படி வெட்டவெளியில் சுட்டு கருகத்தானே வேணும், அக்னி நட்சத்திரத்தில் அடிக்க வேண்டிய வெயில் இப்போது எல்லா நாட்களிலும் வாடிக்கை போலாகிவிட்டது.
குனிந்து கையைப்பார்த்தேன், சனல் பையைப் பார்த்தேன்… சட்டென உதட்டோரம் வந்த புன்முறுவல் முகமெங்கும் விரிந்தன… மூன்று ரக மரக்கன்றுகள் இலைக்கைகளை நீட்டி நாளைய தங்களது மகத்துவம் சொல்லவது போலிருந்தது…
வியர்வை நசநசப்பு… துண்டெடுத்து முகம், வழுக்கைத்தலை, கழுத்தோரமெல்லாம் ஒற்றிக் கொண்டதும் கைக்கடிகாரம் பார்க்க, நேரம் பதினொன்று இருபது…
இன்னும் பத்து நிமிட நடையில் பரமு சாரின் அபார்ட்மெண்ட் வந்து விடும். அவர், அரசுத்துறையில் ஆடிட்டராக இருந்து ஓய்வு பெற்றவர். மேலூரில், பணியிலிருந்தபோது அலுவலகச் சந்திப்பு வழியாகப் பழக்கமானவர். தற்போது மதுரையில் மகனுடன் தங்கி இருக்கிறார். கடந்த வாரம் இங்கே வந்தபோது அடுத்து வருகையில் நல்ல தகவல் இருக்குமென சொல்லியிருந்தார்!
அது, மெய்ப்பித்திருக்கவேண்டும்… நொடிப்பொழுது இமைகள் மூடி மனதார மனைவி தனத்தை நினைத்துக்கொண்டேன்.
அவளின் கனவுதானே..?
வந்து விட்டது…
மூன்றாவது தளம் செல்ல வேண்டும், மின் தூக்கியை தவிர்த்துப் படியேற முயற்சிக்கையில், செக்யூரிட்டி ஒரு மாதிரியாகவே பார்க்க, ‘உடல் இயக்கத்துக்கு இந்த நடை தான் நல்லது…’ என்ற அர்த்தத்தை வழக்கம் போல் அவருக்கு சொல்லியதும், படிகளேறினேன்.
வாசக்கதவு திறந்து வைத்து எதிர்பார்த்திருந்தார் பரமு சார்.
நான், நேரம் கடைப்பிடிப்பவன் என்பதை உணர்ந்து. கொண்டு வந்த மரக்கன்றுகளை ‘யாருக்கு?’ எனக் கேட்டார், ‘முந்தாநாள் ஓய்வுபெற்று, விளாங்குடியில் தங்கியிருக்கும் போஸ் சாருக்கு’ என்றேன்.
‘ம்…இப்பவே பசுமை புரட்சி ‘விதை’ ஊண்ட ஆரம்பிச்சுட்டிங்க’
ஹாலினுள் நுழையவும். அவரும் உடன் வந்து, சோபாவில் அமர்ந்து, எனக்கும் சைகைத்தார். இன்றைய, நகரவாசிகளின் வரிசையாய் முதல் வேலையாய் கதவு சாத்தி விடுவார் இன்றென்ன…யோசித்த தருணம்,
“இந்தாங்கையா தண்ணீர்… பேசிட்டு இருங்க காபி கலந்து வாறேன்” சொன்னதும், மின் விசிறிக்கான பட்டனை அழுத்திவிட்டுச் சென்றாள்.
இதென்ன ஆச்சிரியத்தின் மேல் ஆச்சரியம்… பரமு சார் வீடுதானா..?
முன்னெல்லாம் இங்க வரும்போது இந்த மகராசி நடந்துகொள்ளும் விதமே… வேண்டா வெறுப்பின் உச்சமாய் இருக்கும். சார், அதைச் சமாளிக்க, அதிகம் மெனக்கிடுவாறே… அதையெல்லாம் கவனிக்காத மாதிரியே… நான் கூட வந்த காரிமாயிருப்பேனே, இன்றென்ன?
“இதுல யோசிக்கவோ ஆச்சிரியப்படவோ ஒன்னுமில்ல சோமு”
என் பெயர் சோமசுந்தரம். உதவி தாசில்தாரா இருந்து… ம், இப்ப அந்த, புராணமெல்லாம் வேண்டாமே, இன்னைக்கு நிலமையில் சமூக அக்கரையுள்ள ஒரு பொறுப்பான விவசாயிணு நெஞ்சு புடைச்சு, கையத்தூக்கி சொல்லிக்கிறதுலதாங்க பெருமையே…
உங்களுக்குள்ள,‘க்ளுக்’ ங்கறது, எனக்கு புரியாம இல்ல, ஆனாலும் அடிச்சுச் சொல்றேன், எதிர்காலத்தோட பூமியில் இந்த விவசாயம்தான் மனித சமுதாயத்துக்கு பிரதானமானதாக இருக்கப்போகுதுன்னு நம்பலாம். அதுக்கு இப்பவே அறிகுறி தெரியுதுல்ல… அதாங்க, அது பிளாஸ்டிக்… இது பிளாஸ்டிக் செய்திகள்.
என்ன… கண்ணுப்பட்டைக விரியுதோ… சனக்கூட்டம் நாளுக்கு நாள்… பெருகிக்கிட்டேப் போகுது, உணவு உற்பத்திக்கான விவசாயம்?
தேய்மானத்த நோக்கியேதான இருக்கு… அரிசி, பருப்பு, காய்கனின்னு அனைத்தும் பிளாஸ்டிக்காக வந்தாலும் வரலாம், மனுசன் என்ன பண்ணுவான்… ஒரு கட்டத்துல இயற்கை சார்ந்திருந்த நமது முன்னோர் நடைமுறைக்கு மாறப்போறான்… கட்டிடங்கள் இருப்பையும், கணிணிபொழப்பையும் ‘போதும்டா சாமி…’ ன்னு விட்டுட்டு வரப்போறான்.
அதுக்கு முன்னோட்டமாத்தாங்க பரமு சாரை பாக்க, வந்திருக்கேன்.
“அரசு வேலையில் உள்ளவங்க பதவிக்காலத்தில் தங்களுடைய சுயநலத்துக்கு என்னனமோ பண்ணிக்குவாங்க. நீங்க நேர்மையான அதிகாரினு பேர் எடுத்தும், பொது நோக்கத்துக்காக அந்தப் பதவியை வேணாம்னு போனதுமில்லாம, சமுதாயத்துல பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த முனைப்புக்காட்டி இங்கே வந்து, பேசுனதில். முதல்வெற்றி இந்த குடும்பம் பக்குவப்பட்டுப்போயிருக்கு. எந்தவொரு நல்ல, காரியத்துக்கும் மனசுகள் ஈர்க்கப்படணும், வீட்டுக்கு வந்ததும், கதவை பூட்டிவச்சிக்கிட்டு சிறை வாழ்க்கை… நானொரு பக்கம், மகன், மருமக ஒரு பக்கம், பேத்தி ஒரு பக்கம் அவங்க, அவங்க தேவைக்கு எல்லா வசதிகள் இருந்தும் சொல்ல முடியாத தனிமைப்படுத்தப்பட்டவொரு இறுக்கமிருக்கும். அந்த, முடிச்சை சோமு… வருகைதான் அவிழ்த்து விட்டுருச்சு” நெகிழ்ந்து போய் பரமு, சொல்லிக் கொண்டிருக்கையில், காபி ‘கப்’கள் தாங்கிய தட்டுடன் வந்து நின்றாள், மருமகள். முகத்தில் மலர்ச்சியும், கூடவே சார் மகன்.
“ஆமாம் சார்… அப்பாவிடம் நீங்க வந்துகிட்டு இருக்க விசயம்,பேசுற நலன்கள் ரொம்ப பிடிச்சுருக்கு, நாட்டுல மனுசங்க எதுக்குனே தெரியாம அசுரமா ஓட ஆரம்பிச்சுட்டாங்க. இதைப் பயன்படுத்தியேச் சமுதாய சீரழிவுவாதிகள் பணம் பண்ணவேண்டி சூழ்ச்சியில் மனித தேவைகளைச் சாதகமாக்கி, சந்தைக்குள் வந்து விட்டார்கள். அவர்களை ஒழிக்கிறது போல் நாம மாறலாம் சார்… மத்தவங்களும் இதப்பாத்து மாறட்டும்ணுங்ற தொலைதூரமான உங்கள் சிந்தனை… செயலுக்கும் வாழ்த்துக்கள். அப்பா… நாங்களும் ஏதாவதொரு வகையில துணையா இருப்போம்” என்றான் மகன்.
எனக்குள் நம்பிக்கை ‘விதை’ பதியமாகிவிட்டது.
என் தந்தைக்கு நான் மட்டும்தான் வாரிசு. எனக்கு ஒரு மகன், மகள்.
சொந்த ஊர் சோழவந்தான் அருகே, ஆறை ஒட்டியது போல் ஒரு, தென்னந்தோப்பும், இரண்டு வயல்வெளி, ஒரு ஏக்கர் நிலம் எல்லாம் பூர்வீக சொத்து. முன்னோர்களின் உழைப்பில் செழித்த விவசாயம்… தந்தைக்குப் பிறகான எனது வழியில், படிப்பு, உத்தியோகம், வெளியூர் இருப்பு… அப்பா, இறந்த சில நாட்களிலேயே சொத்துக்களை எனது பெயருக்கு மாற்றிய கையோடு அம்மாவும் இறந்துபோனாள்.
சொந்த ஊர் தொடர்பும், விவசாயமும் சுருங்கியது.
என் மனைவி, தனத்திற்கு கிராம வாழ்க்கையில் அளவில்லாத ஆசை. அதிலும், விவசாயம் சார்ந்த குடியிருப்பில் ஈடுபாடாய்ப் பேசுவாள். மாடித்தோட்டம், கிராமப்புறம்… பசுமைவெளிக் காட்சி… இவைகளை பார்த்து விட்டால் போதும், ‘இப்படித்தாங்க…இப்படித்தாங்க…’ சின்னவளாட்டம் துள்ளுவாள்.
விருதுநகர், திருமங்கலத்தில் பணியில் இருக்கையில் ஒவ்வொரு ஞாயிறு விடுமுறையின் போதும்… அதிகாலையில் எழுந்து சாப்பாடு கட்டிவிடுவாள்.
பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சுற்றுலா போவதுபோல் சொந்த ஊர் சென்று விடுவோம். பகல் பொழுது, அங்கேதான் தங்கல். அதிலொரு பூரிப்பு மனைவி தனத்திற்கு. பதிவு செய்து வைத்த மாதிரி ‘என்னங்க… உங்களுக்கு வேலை முடியவும் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் பண்ணிட்டு, அப்பாடான்னு இங்கதாங்க வரனும். இந்த தென்ன தோப்புக்குள்ள சின்னதா குடிசைவீடு போட்டுத் தங்கிறணும், ரசாயணம் கலந்ததுகளாத் திண்னது போதும்னு நம்ம நிலத்துல இயற்கை உரமெல்லாம் போட்டு… தேவையானதை வெளைய வச்சு அதுலதாங்க உணவு சமைச்சுச் சாப்பிடண்ணும். ஊருக்குள்ள அதையெல்லாம் பாக்குற மத்த சம்சாரிகளும், ‘இது நல்லாயிருக்கே’ ன்னு, சுயமாக இயற்கை விவசாயத்துக்கு மாறனும்’ என்று உணர்வுப்பூர்வமாகக் கூறி, ‘அப்படியொரு வாழ்க்கைய கொஞ்சம் நெனச்சுப்பாருங்க…’ என்று சொல்லி இமைகள் சிமிட்டிக் கொண்டு இரு தோள்களையும் உலுக்கிச் சிலிர்ப்பாள்…
இன்றைய துரிதத்தில் தனம்… எனக்குள்ளே தீர்க்கதரிசியாகவே நிற்கிறாள், விவசாயம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. காரணங்கள் தெளிவாவேத் தெரிகிறது. பூமியில், இயற்கை வளங்கள் குறைந்து வருகிறது. மனித நலத்துக்காக வளரப்பட்ட, வளர்க்கப்பட்ட பசுமை… மனிதனின் தேவைகளுக்காக அழிக்கப்படுகிறது. பதிலாக, வளர்கப்படுவதில் ஆர்வமில்லை.
எனக்குள்ள அந்த வீரியம்… தனத்தின் எண்ணங்கள் கூடவேப் பயணித்திருந்தது.
அதற்கும் காலம்தான் ‘விதை’ ஊண்றியது…
காய்ச்சல் என்று தனம் படுத்தாள். வைத்தியத்தில் நாட்கள் நகர்ந்தன, வியாதிக்கு விடிவு இல்லை. உறக்கத்திலேயே உயிர் பிரிந்து போயிருந்தது. எல்லாமுமாய் எனக்குள் இருந்த மனைவியோட இழப்பு மொத்தமாய் என்னை முடக்கிக்கொண்டிருந்தபோதுதான், மகன், மகளின் சுயநலப்போக்கை அறியமுடிந்தது.
சென்னைவாசியாகிவிட்ட அவர்களுக்கு, எனது பூர்வீக சொத்து பணம்காய்ச்சியாகத் தெரிந்திருக்கிறது. ஏதேதோ ஆசை வார்த்தைகள் பேசி, சென்னைக்கு மாற்றல் வாங்கி வரும்படியும், அந்தச் சொத்தை விற்று, அதில் வரும் பணத்தில் தாம்பரத்தில் ஒரு தனி வீடு வாங்கி வசதியாய் இருக்கலாம் என்றனர்.
அந்த நிலப்பகுதி என் மனைவியின் கனவு… எனது, ஓய்வு நாளுக்கு பின்னான லட்சியம்! விட்டுவிடுவேணா… பிறந்தோம், வளர்ந்து வாழ்ந்தோம், முடிந்தோம் என்ற சராசரிக்குள் புதைந்து விடுவதில் விருப்பமில்லாது, ‘முடியாது…’ என்று, ஒற்றைச் சொல்லில் உறுதியாயிருந்தேன்.
நிறைய வாதத்தின் கடைசியாக, ‘நீங்க தகப்பனா…’ என்ற தடித்த வார்த்தையை வீசிக் கிளம்பிவிட்டனர்.
என் மனசாட்சிக்கு சரியாய், பெற்றதன் கடமை செய்தலில் கடுகளவும் குறையே வைக்கவில்லை. உயர்வாய்ப் படிக்க வைத்து… வேலையும் வாங்கிக்கொடுத்து, அவர்களுக்கான வாழ்வாதாரத்தையும் மேன்மைப்படுத்தியே வைத்துள்ளேன். இருந்தும், இதையும் விட்டு விடக்கூடாது என்ற குறுகிய எண்ணம். தங்களின் சிறுவயது முதலே அப்பா, அம்மா விருப்மிய ஆசைக்கானதெனத் தெரிந்திருந்தும், அதைக் கலைக்கும்படி எண்ணுகிறோமே… என்று அவர்களுக்குத் தோண்றவில்லை. வருத்தம் சூழ்ந்த நொடிப்பொழுதில் தீர்க்கம் போல் ஒரு நிலைபாட்டுக்கு வந்து விட்டேன்.
ஆமாம்… கடந்த ஆண்டே வேலையைத் துறந்துவிட்டிருந்தேன். அடிக்கடி சோழவந்தான் சென்று வந்தேன்… நிலங்களை சீர்செய்தேன். கிணற்றை தூர் எடுத்தேன், ஈசான்யத்தில் ஆழ்துளையிட்டு, நீர் மூழ்கி இணைத்து தண்ணீர் எடுக்க ஏற்பாடு செய்தேன்.
தனம்… கனவு, பிள்ளையார் சுழியாய், வாஸ்து நாளில் தென்னகீற்றால் செட் அமைத்தேன். தோப்பின் ஒருபகுதி வெற்றிடத்தில் மல்லி விதை தூவினேன். தேக்கு, சவுக்கு, வேம்பு, தென்னை, சில மரக்கன்றுகள்… வைத்தேன். மாதத்தின் முதல் ஞாயிறு, அந்த வழியாகப்போகும் சிலரை அழைத்து, ஏதாவது கன்று கொடுத்து அனுப்பினேன். விஷேச வீடுகளுக்குச் சென்றால் கன்றையே அன்பளிப்பு செய்தேன். அடுத்தடுத்த நாட்களில் ஊர் சம்சாரிகளின் யோசனைப்படி விவசாய முனைப்பு காட்டியபோதுதான், சட்டென அந்த உறுத்தல் எழுந்தது. ஞாபகத்தில் வந்தார், பரமு சார். அவரின் இருப்பை விசாரிக்க, மதுரை என்றதும், நேரில் சென்றேன். அறிமுகத்தை தொடர்ந்து விசயத்தை எடுத்து சொன்னேன், ஆக்கபூர்வமான தேவை டாக்குமெண்ட் நகல்களை கொடுத்தேன்.
சட்டதிட்ட அனுபவமிக்கவர். உடனடியாகவேக் களத்தில் இறங்கினார்.
அவருக்குத் தெரிந்த, நகரின் பெரிய வக்கீலை பார்த்தார்… என்னுடைய நோக்கத்தின் திசை சரியென்றதில் அவரும் சில ஆலோசனைகள் கூறி, செயல்முறைக்கு ஆவணம் செய்தார்.
மனைவி ஒருநாள், சொன்னாளே… ‘அப்படியொரு வாழ்க்கைய கொஞ்சம் நெனச்சுப்பாருங்க…’
அது ஞாபகத்தில் வர, நெகிழ்ந்துபோனேன்.
காபி, அருந்திய கப்பை தட்டில் வைத்ததும், “இந்த வார தகவல் என்ன சார்? அய்யாவ பார்த்துப் பேசுனீங்களா..? தனியா இதையெல்லாம் சாதிக்கிறது கஷ்டம், கூட்டா இருந்தாத்தான் சாத்தியமாகுமென யோசிக்கிறார்…” ஆரம்பித்தேன்.
“கிட்டத்தட்ட அனைத்து பேப்பர் வேலையும் முடிந்தமாதிரிதான் சோமு, ‘தனம் முதியோர் மறுவாழ்வு விவசாய மையம்’ இதை அவர் கூறிய நொடிப்பொழுதில் சோழவந்தான் கருப்பட்டி சாலை, தனது நிலமுகப்பில் பெயர் பலகை கம்பீரமாக நிற்பதாகவே பூரித்தேன்.
மேலும் பரமன் சார், “வக்கீல், என்ன சொல்றார்னா…உங்களுடைய இப்போதைய சொத்து, வங்கி ரொக்கம் அனைத்தையும் ‘தனம் முதியோர் மறுவாழ்வு விவசாய மையம்’ அறக்கட்டளையின் கீழ் கொண்டு வந்துரலாம். இதன் அடுத்த கட்டமாய் நம்ம மாதிரி உத்தியோகம் முடிந்தவங்க, தங்களோட வாரிசுகளுக்குக் கடமையை முடித்தவங்க விருப்பப்பட்டு இந்த அறக்கட்டளைக்குள் வரலாம். உறுப்பினர்… அடிப்படையில். அதுவும் சும்மா கிடையாது அவர்களால் ஆன ஒரு தொகையை கண்டிப்பாகக் கட்டி வர வேண்டும். மேலும், முக்கிய கண்டிசன் என்னன்னா… இந்த அறக்கட்டளை கட்டமைப்புக்குள் உறுப்பினர் அனைவருமே தன்னார்வத்தோடு இயற்கை சார்ந்த சுதேசி முறை விவசாயம் பண்ணனும்… இதுவொரு கூட்டு முயற்சி. நமக்கானது நமக்கே…
மையத்தோட நோக்கமே இயற்கை விவசாயத்தை தன்நிலைப்படுத்த வேண்டும், ‘இதுபோல் நாமும் நம் பகுதியில் முயற்சித்தால் என்ன?’ என மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும், எதிர்காலப் பூமியில் விவசாயத்தொழிலே முன்னோடியாக இருத்தல் வேண்டும் என்பதுதான். அறக்கட்டளை வருமானம் விரிவாகும்போது, வாரம் ஒருநாள் சுற்று வட்டாரப் பள்ளி ஒன்றுக்குக் குழுவாக சொல்வோம், இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு, அதன் பயன்கள் பற்றியெல்லாம் எடுத்துக் கூறி , கன்றுகள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். அனுபவ ரீதியாக் கேட்கும், பார்க்கும்… வளரும் தலைமுறை நிச்சியம் மாற்றத்தின் நிலப்பரப்புக்கு வருவாங்க, இன்னிக்கு ஒரு விதை… நாளைக்கு ரெண்டு விதை… நாளை மறுநாள் நான்கு விதை… அடுத்து எட்டு, பதினாறு விதை… இதன் எண்ணிக்கைகள் உயர்கையில் பசுமைப்புரட்சி செழித்தோங்கும்…” அவர், முடிக்கவில்லை… சின்னதாகத் தயங்கினார்.
ஆர்வமிகுதியால் ஆர்ப்பரித்துவிட்டேன். இப்படியொன்றைத்தான் மனதில் வகுத்து வைத்திருந்தேன். கண்கள் கசிந்துவிட்டன…
“கேட்கவேக் குளிர்ச்சியா இருக்கு சார், முறைப்படி எல்லா ஏற்பாடும் பண்ணுங்க, நான் முழு ஒத்துழைப்பு தாரேன்” என்றதும் பரமன் சாரை ஏறிட்டேன்… அருவிக்கொட்டலாய் இருந்தவர் அமைதியாகி விட்டார்.
என்னில் உறுத்திக்கொண்டே இருந்தது, சாரையும் குத்துகிறதுபோல்.
“ஆக்கப்பூர்வ சட்ட ரீதியான பதிவுக்கு எனது வாரிசுகளின் ஒப்புதல் வேணும் அவ்வளவுதானே சார்… நீங்களும், வக்கீல் சாரும் கூட வாங்க சென்னை போவோம், அம்மாவின் கனவு, அப்பாவின் லட்சியம், இன்றைய துரித சமூதாயத்தில் மனித வளத்துக்கான அவசியத் தேவையை விவரிப்போம், என் பிள்ளைகதானே அவ்வளவு மோசமா நடக்க மாட்டாங்க, மனசு மாறுவார்கள், மறுக்காம ஒப்புதல் கையெழுத்து போடுவாங்க, எனக்கு முழு நம்பிக்கை இருக்கு” இப்படி நான் உறுதிபடக் கூறவும்தான் பரமு சார் சமநிலைக்கு வந்தார், மற்ற விசயங்கள் நிறைய பேசினார்.
கனவல்ல, சாத்தியமாகும் சமுதாதத்திற்கான விருட்சம்! நம்புங்கள்…
மழையில்லை, தண்ணீர் இல்லையென வறட்சியைப் பேசிக்கொண்டே காலம் கடத்துகிறோம், பூமியின் மூலத்தை ஆகாயத்தின் தன்மையை கவனிக்காது விட்டதன் விளைவு… கொதிகலனாய் போனது அண்டம் சற்றே சிந்திப்போம்… இதுவொன்றும் வெற்று முயற்சியல்ல, நமது அப்பன், தாத்தன், பாட்டன்கள் ‘விதை’ வழி வந்த தொழில். நகர இடப்பெயர்தலில், நாகரீக மாய ஈர்பில் கிராம அடையாளம் மறந்தோம், எல்லாவற்றிலும் துரிதம் காட்டினோம், செயற்கைத்தனத்தில் சிக்கித் தவிக்கிறோம். இயற்கை வளம் ஒன்றால் மட்டுமே எதிர்காலப் பூமியை, மனித சமுதாயத்தை செம்மைப்படுத்த முடியும்.
இன்று, என் முயற்சி… நாளை நீங்களும் முயற்சிக்கலாம்…
ஒவ்வொருவரும் கனவு… லட்சியமெல்லாம் வார்க்கப்பட வேண்டும். நீங்கள் எப்போதாவது இந்தப் பகுதி வந்தால் மறக்காமல் ‘தனம் முதியோர் மறுவாழ்வு விவசாய மையம்’ வாருங்கள். சரியா…?