எழுதியவர் -தமிழ்ச்செல்வன்

ஞாபகமறதி ஒருவனுடைய வாழ்க்கையில் மிக மோசமாக விளையாடியது என்றால் அதற்கு நானே உதாரணம் .
நான் பள்ளியில் எட்டாம்வகுப்பு படிக்கும் போது இருந்து இது என்னிடம் இருப்பதாக ஞாபகம் .
என் பெயர் விமல். ஆரோக்கியமான இளைஞன்.ஞாபகமறதி என் குறை அல்ல .இயல்பு.
இந்த ஞாபகம் மறதி இருப்பவர்களுக்கு அனுதாபம் கிடைக்காது . எப்போதும் ஏளனமாக பார்க்கப்படுவார்கள் .அலட்சியக்காரன் என்று முத்திரைக் குத்தி விடுவார்கள்.
8 ஆம் வகுப்பு படிக்கும்போது நோட்புக் மறந்து விட்டு அடிவாங்கியது நினைவில் இருக்கிறது . அன்றில் இருந்து தினமும் வெளியில் செல்லும்போது குறைந்தபட்சம் ஒரு பொருளை மறந்து விடுவேன் .
என்னுடைய பேனாக்கள் , கைக்குட்டைகள், அதிகபட்சம் 2 நாட்களில் தொலைந்து போகும். பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய எல்லாப் பொருள்களையும் நான் தொலைத்து இருக்கிறேன்.
எப்படியோ இந்த மறதியை வைத்துக்கொண்டு பள்ளி முடித்து கல்லூரி முடித்து வேலைக்கும் சேர்ந்துவிட்டேன் .
என் மறதிக்கு மற்றும் ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் வீட்டை விட்டு கிளம்பும்போது எடுக்க வேண்டிய பொருட்கள் என்று ஒரு பட்டியல் {Checklist] வைத்திருப்பேன்.அனுபவம் கற்றுத் தந்த பாடம்.
அந்த பட்டியல்படி எல்லாம் எடுத்துக்கொண்டு அலுவலகம் வந்து என் பேண்ட் பாக்கெட்டில் இருந்து வீட்டு சாவியை எடுத்து வெளியில் வைக்கிறேன் . அதனுடன் பூட்டும் சேர்ந்தே வருகிறது . இதை வெளியில் சொன்னால் அவமானம் என்று மறைத்து விட்டேன் .
தர்மத்தின் தலைவன் அளவிற்கு சில சம்பவங்கள் நடந்திருக்கிறன்றன. அந்த அவமானங்களை சொல்லப்போவதில்லை . என்னோடு போகட்டும் .
இந்த அலுவலகத்தில் ஆறு மாதமாக ஒரு பெண்ணை காதலித்தேன் . அவள் பெயர் நித்யா .
எப்படியோ அவளிடம் பேசத் தொடங்கிவிட்டேன். பட்டும் படாமல் ஒருவகை நட்பு .
காதலை சொல்ல இடையூறாக இருக்கக்கூடாது என்று அவளிடம் நான் நெருங்கிய நண்பனாகவில்லை .
அவளுடைய பொறுப்பு உணர்வை , அழகை , அறிவை ,பொறுமையை எப்போதும் வியப்புடன் ரசிப்பேன் .
ஒரு நாள் ” எப்படி அழகாக காதலை சொல்வது” என்று கூகிளில் தேடி , வித விதமான வழிகளை எழுதி வைத்துக்கொண்டேன்.
அவளிடம் சொல்லவேண்டும் என்று அலுவலகம் செல்வேன்.ஆனால் வேறு வேலை வரும் மறந்து விடுவேன் . சில சமயம் அவளை சந்தித்து வேறு விஷயம் பேசிக்கொண்டு இருப்பேன்.
” உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சேன் , டக்குனு ஞாபகம் வரல ” என்பேன் .
” என்ன விஷயம் ,கொஞ்சம் ஞாபகப்படுத்தி சொல்லுங்க விமல் ”
” ஞாபகம் வரல , வந்துதுன்னா சொல்றேன் ” .
உண்மையாகவே அவளிடம் காதலை சொல்லவந்து அந்த நேரத்தில் மறந்துவிடுவேன் .
வீட்டுக்கு வந்ததும் நினைவுக்கு வரும்.இது 3 முறை நிகழ்ந்தது .
இன்றும் மறந்துவிட்டேனே என்று என்னையே கடிந்து கொள்வேன் .
அடுத்த முறை நிகழக்கூடாது என்று முடிவு செய்தேன். அவளிடம் காதலைத் தவிர வேறு எந்த விஷயமும் பேசக்கூடாது என்று முடிவுசெய்தேன். கவனம் சிதறக்கூடாது .
மறுநாள் அலுவலகம் சென்றேன் . வேறு வேலையைத் தொடங்காமல் அவளுக்காக காத்திருந்தேன் . அன்று அவள் விடுப்பு எடுத்திருந்தாள் . விதியின் விளையாட்டு . இது எனக்கு ஒரு சவால் . எப்போது அவளைக் காண்கிறேனோ அப்போது சொல்லிவிடுவது என்று தீர்க்கமாக இருந்தேன் .
2 நாட்களுக்கு பிறகு அவள் வேலைக்கு வந்தாள் . தேனீர் இடைவேளையில் எப்படியும் காதலை சொல்லிவிடுவது என்று முடிவு செய்தேன் .
அவள் தனியாக தேநீர் அருந்திக்கொண்டு இருந்தாள் . சொல்லிவிடவேண்டும் நான் அன்று தேநீர் குடிக்கக்கூடாது என்று முடிவு செய்தேன் அதை பற்றி நினைத்துக்கொண்டு இதை மறந்துவிடக்கூடாது அல்லவா.
அவள் அருகில் சென்றேன். புன்னகைத்தாள். புன்னகைத்தேன் .
”காதலை சொல் , வேறு எதுவும் பேசாதே” என்று என் மனம் எனக்கு கட்டளையிட்டது .
மனதிற்குள் சில முறை சொல்லிப்பார்த்து விட்டு அவளிடம்
” ஐ லவ் யூ , திவ்யா ” என்றேன் .
” என் பேரு திவ்யா இல்லை ” என்றாள் .
கடவுளே இது என்ன சோதனை , என் ஞாபக அடுக்குகளை தீவிரமாத் தேடிப் பார்க்கிறேன் . ஆம் , அவள் பெயர் திவ்யா இல்லை , வேறு ஒரு பெயர் . ஆனால் ஞாபகத்திற்கு வரவே இல்லை .
” சாரிங்க . பேரு டக்குனு வரல , கொஞ்சம் நெர்வஸ்நெஸ். ஆனா மத்தபடி லவ் சின்சியர் தான்ங்க ”
” சாரி விமல் , எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை ” என்று நிராகரித்து விட்டாள் .
”இட்ஸ் ஓகே ” என்றேன். வருத்தமாக இருந்தது மதிய உணவு இடைவேளையில் அவள் பெயர் திடீர் என்று நினைவுக்கு வந்தது. அவள் பெயர் நித்யா . ஆனால் இனி பலனில்லை. இப்படித்தான் என் ஆறுமாதக் காதல் ஒரு முடிவுக்கு வந்தது .
நான் சில நாட்களுக்கு பிறகு வேறு அலுவலகம் மாறினேன். இங்கே மீண்டும் ஒரு காதல் ஏற்பட்டது.. அவள் பெயர் ஸ்வர்ணா .
முந்தையது வெறும் இனக்கவர்ச்சி . இதுதான் நிஜக்காதல் என்று என் ஹார்மோன்கள் என்னை ஊக்கப்படுத்தியது.
இப்போது என்னிடம் அனுபவம் இருக்கிறது , நான் முன்பை விட மேம்பட்டவன்.
இவளிடம் எப்படியும் என் காதலை சொல்லிவிடப்போகிறேன். அப்படி சொல்லும்போது வெறும் ”ஐ லவ் யு ”தான் சொல்லப்போகிறேன் . பெயரை சேர்த்து சொல்லப்போவதில்லை. எதற்கு வீண் வம்பு ..
அவள் காதலை ஏற்றுக்கொண்டபிறகும் ” டியர் ,டார்லிங் ,ஸ்வீட்டி ”’ என்று தான் கூப்பிடவேண்டும் .
இனிமேல் ரிஸ்க் எடுக்க முடியாது . எப்படியும் இந்த சவாலில் வென்றுவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது .
[ முற்றும் ]

தமிழ்ச்செல்வன்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal