இறைவனின் படைப்பில் உன்னதமும் அற்புதமும் கொண்டவா் மனிதா். மனிதனுக்கான வாழ்க்கை மகிழ்வோடு வாழ்தலே ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒருமுறை தான் வாழ்க்கை கிடைக்கிறது. மறுஜென்மம் என்பது ஒரு நம்பிக்கை மட்டுமே.
மனிதா்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு உடல் உள அமைப்புகளோடு படைக்கப்பட்டிருக்கிறோம். அதனை நல்லதென்றும் கெட்டதென்றும் மாற்றும் வகை நம்மிடமே உள்ளது. நல்ல எண்ணங்களே நல்ல செயல்களாகின்றது. நல்ல செயல்களே நல்ல பழக்கங்களாகவும் நல்ல வாழ்க்கையாகவும் மாறுகின்றது.
நாம் ஆழமாக நோக்கினால் அந்த வாழ்க்கையில் பளிங்கென மிளிர்வது அடங்குவது மனம் என்ற மகத்துவமே. வாழ்க்கைப் பாதையை தேரோடும் வீதியாகவும் சாக்கடை நாற்றமாகவும் நாம் தான் மாற்றிக்கொள்கின்றோம். மனதை செலுத்தும் பாதையை இரம்மியமானதாய் ஆக்கிவிட்டால் சாக்கடை எப்படி வரும்?
உதாரணத்திற்கு, ஒரு கதை இருக்கிறது. ஒரு முன்பள்ளியில், சிறார்களுக்குப் போட்டி வைத்தார்களாம். பல மலா்ச்செடிகள் வைக்கப்பட்டு, மழலைகள் ஓடிச்சென்று எந்த மலா்ச்செடியை எடுத்துவந்து தன் அம்மாவிடம் கொடுக்கின்றனரோ அது அவா்களுக்கானது என அறிவித்தனராம். எல்லா குழந்தைகளும் அழகான செடிகளையே பார்த்துப் பார்த்து எடுத்துவர ஒரே ஒரு குழந்தை மட்டும், இலைகள் உதிர்ந்து வாடிப்போயிருந்த செடியைக் கொண்டுவந்ததாம்.
அந்த தாய் எதுவுமே சொல்லாது, தன் மகவையே உற்றுப் பார்த்தாராம். அந்தச் சுட்டிக் குழந்தை ” அம்மா அம்மா, எல்லாச் செடியும் அழகா இருக்கு, பாவம் இந்தச் செடிக்கு மட்டும் தண்ணியும் சாப்பாடும் கிடைக்கல போல, இப்பிடி இருக்கு, அதனால தான் நான் எடுத்து வந்தேன், நாங்கள் வீட்டில்வைத்து அழகா கவனமா பராமரிக்கலாம்” என்றதாம். தாயின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.
பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு புன்னகைக்கவும் மற்றவா்களுக்காய் இரக்கப்படவும் அடுத்தவா் துன்பத்தில் பங்கெடுக்கவும் சொல்லிக் கொடுங்கள். இழப்புகளைக் கண்டு துவண்டுபோகாதிருக்கவும் சந்தோசத்தின் போது மனம் விட்டுச் சிரிக்கவும் கையேந்துதல் என்பது அடிமைத்தனத்திற்கான அத்திவாரம் என்பதையும் புகட்டுங்கள்.
பயத்தை அகற்றவும் தன்னம்பிக்கையை வளா்க்கவும் தைரியத்தோடு வாழவும் கற்பியுங்கள். வேகம் என்பது தனித்துவம் எனினும் சில இடங்களில் வேகம் விவேகமல்ல என்பதையும் நிதானமே நித்தியம் என்பதையும் அன்பில்லா வாழ்க்கை, ஆளில்லாத கடையைப் போன்றது என்பதையும் வறண்ட நிலத்தில் பயிர்கள் வாழ்வது சாத்தியமற்றது போலவே பாசம் காட்டாதவர்களால் இனிமையான உலகில் சஞ்சரிக்கமுடியாது என்பதையும் கற்றுக்கொடுங்கள்.
தனிமையை விரும்பும் இளம் பராயத்தினா் அதிகளவில் உள்ளனா். தனிமையை நேசித்தல் என்பது முதுமையின் திறவுகோல் என்பதையும் நளைய தீராதவலி என்பதையும் உணரச்செய்யுங்கள். அனுபவம் என்பது ஒப்பற்ற பொக்கிசம் என்பதையும் வாழ்க்கையில் காணும் ஒவ்வொரு சம்பவங்களிலும் படிப்பினை பெறுவது அவசியம் என்பதையும் சொல்லிக்கொடுங்கள்.
அனைத்துச் செயலுக்கும் எதிரான விளைவு உண்டு. கஷ்டங்களைத் தருகின்ற கடவுள் தீா்வையும் எழுதிவைப்பார் என்னும் உண்மையை உணரவையுங்கள். இத்தனையையும் சொல்லிக்கொடுத்தால் நிச்சயம் உங்கள் குழந்தை நாளைய உலகின் நல்லதொரு வரமே.
கோபிகை.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal