
வேறொருவரின் பெயரில் போலி அடையாள அட்டை தயாரித்து வைத்திருந்த ஒருவரை அஹங்கம பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் தொடர்பில் அஹங்கம பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, அது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 2010ஆம் ஆண்டு கடற்படையிலிருந்து தப்பிச் சென்றதாகவும், முறைப்பாட்டாளரின் உறவினர் ஒருவர் அவரது பிறப்புச் சான்றிதழைத் திருடி 2012ஆம் ஆண்டு போலியான தேசிய அடையாள அட்டையை சந்தேக நபருக்காக தயார் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
அதோடு கைதான சந்தேக நபர் மேற்படி அடையாள அட்டையை பயன்படுத்தி கடவுச்சீட்டை தயாரித்து 5 வருடங்களாக மலேசியா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் பணிபுரிந்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர் பொலன்னறுவையில் வசிக்கும் 38 வயதுடையவர் என கூறப்படும் நிலையில், சந்தேக நபர் இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.