
ஒருவருக்குத் தேவையான உணவை மட்டுமே உள்வாங்கிக்கொண்டிருந்த வயிறு, இன்னொரு உயிருக்கும் சேர்த்து உணவை உள்வாங்கும்; இதனாலும் இரைப்பைப் பெரிதாகும். இதன் தொடர்ச்சியாகக் குழந்தை வளர ஆரம்பிக்கும்.
ஒரு பெண் தாய்மையடையும் தருணம் என்பது மிகவும் உன்னதமானது. அதே நேரம், இயல்பான ஆரோக்கியத்துக்குச் சவாலான தருணமும் அதுதான். பெரும்பாலான பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு, உடல் எடை அதிகரிக்கும். பிரசவத்தின்போது ஏற்பட்ட பலவீனத்தைப் போக்குவதற்காக நிறைய உணவுகளைக் கொடுப்பார்கள். அதுவும் உடல் எடையை அதிகரிக்க முக்கியக் காரணமாகிறது.
பெரும்பாலான பெண்களுக்கு, பிரசவத்துக்குப் பிறகு வயிறு தளர்ந்த நிலையில் காணப்படும். தளர்ந்த தசைகள், சுருங்குவதன் மூலம் தொப்பை ஏற்படுகிறது. கருவுறும்போது குழந்தைக்கும் சேர்த்து உணவு தேவைப்படுவதால், வயிற்றில் இரைப்பை விரிந்துகொடுக்கும். இவ்வளவு காலமும் ஒருவருக்குத் தேவையான உணவை மட்டுமே உள்வாங்கிக்கொண்டிருந்த வயிறு, இன்னொரு உயிருக்கும் சேர்த்து உணவை உள்வாங்கும்; இதனாலும் இரைப்பைப் பெரிதாகும். இதன் தொடர்ச்சியாகக் குழந்தை வளர ஆரம்பிக்கும். இதனால் கர்ப்பப்பையும் இரைப்பையும் சேர்ந்து விரிவடைவதால் வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாகும்.
சிலர் பிரசவம் நிகழ்ந்த சில நாள்களிலேயே கடுமையான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையைக் குறைக்க முயல்வார்கள். இப்படியான விரைவான உடல் எடை இழப்பு, தாய்க்கும் சேய்க்கும் நல்லதல்ல. மேலும், இதன் காரணமாக வயிற்றுத் தசை தொங்கி தளர்வடைகிறது. பக்க விளைவுகள் அல்லாத, மிகவும் மெதுவான உடற்பயிற்சிகளைச் செய்வதன்மூலம் உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைக்கலாம். இத்தகைய உடற்பயிற்சிகளைக் கர்ப்ப காலங்களிலிருந்தே மேற்கொள்ளலாம். கர்ப்பகால உடற்பயிற்சிகளில் யோகா மிகவும் முக்கியமானது. உட்கார்ந்து எழுதல், படுத்திருந்தபடி காலை தூக்குதல் போன்றவை வயிற்றுத் தசைகளை இறுகச் செய்யும் உடற்பயிற்சிகளாகும்.
உடல்நிலை தேறிய பிறகு தினமும் 20 நிமிடங்கள் இந்த உடற்பயிற்சியைச் செய்தால் வயிற்றுத் தசைகள் இறுகி அழகான தோற்றம் பெறலாம். இன்றைக்குப் பெரும்பாலான பெண்கள் அறுவைசிகிச்சை மூலமே குழந்தை பெற்றெடுக்கின்றனர். அறுவைசிகிச்சை செய்தவர்களுக்குக் கர்ப்பப்பை சுருங்க அதிக நாள்களாகும். பிரசவ நேரத்தில் அதிக கொழுப்புள்ள உணவுகளையும் இனிப்பு கலந்த உணவுகளையும் சாப்பிடுவார்கள். அதனால் உடல் எடை கூடிவிடும்; தொப்பையும் வந்துவிடும். இதனால் மனதளவில் பாதிப்புக்குள்ளாவர். சிலருக்கு அதிக மனஉளைச்சல் ஏற்பட்டு, பசி தூண்டப்படுவதால் அதிகமாக உணவு எடுத்துக்கொள்வார்கள். இதனாலும் உடல் எடை அதிகரிக்கும்.
தொப்பையைக் கரைக்க இயற்கை வழிமுறைகள் நிறைய உள்ளன. காலை உணவை மட்டும் பழங்களாகச் சாப்பிட்டுப் பாருங்கள்; கொழுப்பும் தொப்பையும் காணாமல் போய்விடும். அன்னாசி, பப்பாளி, மாதுளை போன்ற பழங்களைக் காலை உணவாகச் சாப்பிடுவது நல்லது. உணவு எனும்போது, புரோட்டீன் உணவுகள், நீர்ச்சத்துள்ள உணவுகள், சோயா வகைகள், சிவப்புநிற பழங்கள், பச்சை நிறக் கீரைகள், கேரட், பீட்ரூட் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.
தொப்பை குறையவும் உடல் அழகாகவும் இருக்க வேண்டுமானால், 100 மில்லி வெதுவெதுப்பான நீருடன் 100 மில்லி இஞ்சிச்சாறு, இரண்டு டீஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். நாம் சாப்பிடும் உணவில் சீரகம், கடுகு, மஞ்சள், வெந்தயம், துளசி, லவங்கம் (கிராம்பு), பூண்டு ஆகியவற்றை அதிகமாகச் சேர்க்க வேண்டும். டீ, காபி அருந்துவதை நிறுத்துவது நல்லது. கேரட், பீட்ரூட், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்களைச் சாப்பிடலாம். இது, உடலிலுள்ள கொழுப்புகளைக் கரைக்கும்.
நம் முன்னோர், தொப்பை விழுந்த வயிற்றைப் பழைய நிலைக்குக் கொண்டுவர பருத்தித் துணியால் வயிற்றை நன்றாகக் கட்டி விடுவார்கள். தொடர்ந்து மூன்று மாதங்கள் இப்படிச் செய்வதால் இடுப்பு வலி குறைவதுடன் எடையும் குறையும். இவற்றுடன் எடை குறைக்கும் மருந்துகளையும் சேர்த்துச் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும். கர்ப்பப்பை சுருங்கவும் பழைய வடிவத்தை அடையவும் இது உதவும். அறுவைசிகிச்சைக்குப் பிறகு காயங்கள் ஆற சில நாள்களாகும். எனவே, ஆறு மாதங்களுக்குப் பிறகு யோகா செய்யலாம்.
தாய்ப்பால் கொடுப்பதன்மூலமும் தொப்பை குறையும். தாய்ப்பால் கொடுப்பதால் 500 கலோரிகள் எரிக்கப்படும் என்பதால் மிக எளிதாகத் தொப்பை குறையும். இயற்கை ஏற்படுத்திக் கொடுத்த வழிமுறை இது. பெண்களின் உடல்நலத்துக்கு இது மிகவும் நல்லது. மேலும், கர்ப்பப்பை சுருங்க `ஆக்சிடோசின்’ (Oxytocin) என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் இந்த ஹார்மோனின் அளவு அதிகரிப்பதுடன், கர்ப்பப்பை பழைய நிலைக்குத் திரும்ப உதவும்.
எலுமிச்சைத் தோலைச் சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள். சிறிதளவு இஞ்சியையும் பொடியாக நறுக்கி, இரண்டையும் சேர்த்து ஒன்றரை டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது முக்கால் டம்ளராக வற்றி இளஞ்சூடாக இருக்கும்போது ஒரு சிட்டிகை இந்துப்பு கலந்து பருகினால் கொழுப்பு மற்றும் அடைப்புகள் நீங்கிக் கழிவுகள் வெளியேறும். அத்துடன் ரத்தம் சுத்திகரிக்கப்படும். தொப்பை குறையும். தொப்பை உள்ள பெண்கள் வாரத்தில் இரண்டு நாள் கருணைக் கிழங்கு சாப்பிட வேண்டும். கொள்ளுப் பயற்றில் துவையல், ரசம், சுண்டல் செய்து சாப்பிட்டாலும் தொப்பை குறையும். மாதவிடாய்த் தொந்தரவு உள்ள பெண்கள் மருத்துவர் அனுமதியுடன் கொள்ளு சாப்பிடலாம்.
பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். பசி இல்லை என்றால் பசிக்கும்வரை காத்திருங்கள். மைதா, அயோடின் உப்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், குளிர்ந்த நீர், பாக்கெட் உணவுகள், செயற்கை பழச்சாறுகள், ரெடிமேடு உணவுகளையும் தவிர்க்க வேண்டும். தினமும் காலை, மாலை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை, வெறும் வயிற்றில் அருந்துவது நல்லது. நாள் முழுவதும் சீரகத் தண்ணீர் குடித்தால் தொப்பைக் குறையும். நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்ற இனிப்புகளைச் சேர்த்துக் கொள்ளலாம்; வெள்ளைச் சர்க்கரை வேண்டாம்.
நிறைய தண்ணீர் அருந்துவது, அவகேடோ, கிர்ணிப் பழம், பப்பாளி, தர்பூசணி போன்ற நீர்ச்சத்துள்ள பழங்களைச் சாப்பிடுவது அடிவயிற்று சதையைக் குறைக்கும். மேலும், வயிற்றுக் கொழுப்பு குறையவும் உதவும். காய்கறிகள், காலிஃபிளவர், காளான், அவரைக்காய், பீன்ஸ், முட்டைகோஸ், புரோக்கோலி போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.
எலுமிச்சை, புதினா ஜூஸ், வெள்ளரிக்காய், கிரீன் டீ அருந்துவதும் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தும். இதனால் வயிற்றிலுள்ள கொழுப்பு குறையும். வயிற்றுப் பகுதிக்கு வாரம் ஒருமுறை மசாஜ் கொடுப்பதால் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தும். அதுமட்டுமல்லாமல் தேங்கியிருக்கும் கழிவுப்பொருள்களை வெளியேற்றும். இதன்மூலம் நம் வயிற்றுத் தொப்பையைக் குறைக்கலாம். பிரசவத்துக்குப் பிறகு, அடி வயிற்றில் ஏற்படும் கோடுகள் மறைய கோகோ பட்டர் தடவலாம்.
பிராணயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி செய்வதும் நல்லது. அதில் குறிப்பாக அனுலோமா, விலோமா, நாடி சுத்தி போன்ற பயிற்சிகளை காலை, மாலை இருவேளை தொடர்ந்து செய்தால் வயிற்றுப்பகுதி தசைநார்கள் வலுப்பெறும். அத்துடன் செரிமானத்தைத் தூண்டி, பெருங்குடல் இயக்கத்தை அதிகப்படுத்தி மலச்சிக்கலைப் போக்கும். உடலுக்குத் தேவையான அளவு ஓய்வு தர வேண்டும். ஓய்வு இல்லாவிட்டால் உடலில் நச்சுப்பொருள்கள், கொழுப்புப் படிவங்கள் வயிற்றுப் பகுதியில் தேங்கிவிடும்.
தொப்பையைக் குறைக்க யோகா செய்வது நல்லது. முக்கியமாகச் சூரிய நமஸ்காரம், பாத ஹஸ்தாசனம், வீர பத்ராசனம், திரிகோண ஆசனம், யோக முத்ரா, பட்சிமோத்தாசனம், சக்கி சாலனாசனம், புஜங்காசனம், தனுராசனம், உஷ்ட்ராசனம், பவனமுக்தாசனம், நவ்காசனம், உத்தன்பாதாசனம் போன்ற ஆசனங்களைச் செய்யலாம்.
மற்றபடி, எந்த உணவைச் சாப்பிட்டாலும் உதடுகள் மூடி இருக்க வேண்டும். பற்கள் மட்டும் உணவை அரைத்து உள்ளே தள்ள வேண்டும். அதாவது, மிக்ஸியில் ஜாரை மூடி அரைப்பதுபோல உதடுகளை மூடி நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அப்படிச் செய்தால் தொப்பை வரவே வராது. வழிகள் பல இருந்தாலும் இயற்கையான பக்கவிளைவுகள் இல்லாத சிறந்த இயற்கைவழிகளைக் கடைப்பிடித்து நம் நோய்களைத் தீர்ப்போம்.