தாலிபான் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து நாட்டைவிட்டு தப்பிய ஆப்கானியர்கள், விமானத்தில் இருந்து தவறி விழுந்த சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கண்கலங்கியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தற்போதைய சூழலில் நானும் இருந்திருந்தால், அவர்களில் ஒருவனாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார் இளைஞர் Mohammed Surab Noorse.
ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் இருந்து கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வருகிறார் 27 வயதான சுராப்.
ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், நாட்டின் நிலை குறித்து கலக்கமடைந்துள்ளார். விமான சேவைகள் மொத்தமாக முடக்கப்பட்ட நிலையில், திரும்பி செல்லவும் முடியாமல், இந்தியாவில் தங்கவும் முடியாத சூழலை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காபூல் செல்லும் பொருட்டு டெல்லிக்கு சென்றுள்ள சுராப் தற்போது இக்கட்டான சூழலில் சிக்கிக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தாயார் தம்மை அழைத்ததாகவும், பயத்தில் அவர் குடியிருப்பில் இருந்து வெளியேறவில்லை எனவும், வீட்டுக்குள்ளேயே இருப்பதாகவும் தெரிவித்துள்ளதை சுராப் கவலையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

மட்டுமின்றி, தெருவில் நடமாடும் பெண்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தாக்குதலுக்கு இலக்காவதாகவும் தாயார் தெரிவித்துள்ளதாக சுராப் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுராபின் சகோதரியும் தாயாரும் ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். ஆனால் அவர்கள் தற்போது பள்ளிக்கு செல்ல முடியாத சூழல். பெண் பிள்ளைகளை பள்ளிக்கு செல்ல அனுமதிப்பதாக தாலிபான் வாக்குறுதி அளித்துள்ளார்கள்.
ஆனால் மனிதப்பற்று இல்லாதவர்களின் வாக்குறுதிக்கு ஆயுள் குறைவு என்பதை அவர்கள் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அவர்களே நிருப்பித்துள்ளதையும் சுராப் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்தியாவில் இருந்து இனி ஆப்கான் வரவேண்டாம் எனவும், வேறு நாடுகள் ஏதேனும் தெரிவு செய்து அங்கே செல்லவும் கட்டாயப்படுத்துவதாக சுராப் கண் கலங்கியுள்ளார்.