
தென்னங்கன்றுகள் நம் மண்ணிலே நன்கு வளரக்கூடியன. தமிழர்களின் கலாசாரப் பாரம்பரியங்களுடன் தென்னை பின்னிப்பிணைந்திருக்கிறது. தோரணம் கட்டுவது, நிறைகும்பம் வைப்பது, இளநீர் வெட்டுவது, தேங்காய் உடைப்பது, தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றுவது, கிடுகு வேலிகள், பந்தல்கள் என இந்தத் தென்னம்பிள்ளைகள் நாம் பெற்ற பிள்ளைகளிலும் பார்க்க எமது கலாசார விழுமியங்களுடன் ஒன்றிப்போய் இருக்கின்றன.
நாம் தேங்காயை எவ்வாறு பாதுகாப்பான முறையிலும் பிரயோசனமான முறையிலும் பாவிக்க முடியும் எனச் சிந்திக்க வேண்டும். ஏனெனில் தென்னம்பிள்ளைகள் நமது பிள்ளைகள்.
தென்னைகளை நன்றி உணர்வுள்ள உயிர்களுக்கு உதாரணமாகச் சொல்லுவார்கள். அவற்றுக்கு நாம் ஊற்றிய நீரைக் காலம் கடந்தேனும் இளநீராக எமக்குத் திருப்பித்தருகின்றது என்று சொல்லுவார்கள். பெற்ற பிள்ளைகளிலும் பார்க்க தென்னம் பிள்ளைகள் நன்றி உணர்ச்சி உடையன என்றுகூடச் சொல்லுவார்கள்.
முட்டுக்காய்த் தேங்காய்களில் முற்றிய தேங்காய்களிலும் பார்க்கக் கொழுப்பின் அளவு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. அதாவது நன்கு முற்றமுன்னர் பிடுங்கப்படும் தேங்காய்களிலே எண்ணெய்ப்பிடிப்பு மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. அத்துடன் ஒப்பீட்டளவில் புரதச்சத்து அதிகமாகக் காணப்படுகிறது. எனவே பிட்டு, மோதகம், சம்பல் போன்றவற்றுக்கு முட்டுக்காய்த் தேங்காய்களைப் பாவிப்பது பாதுகாப்பானதாகும். முட்டுக்காய்த் தேங்காய்களிலிருந்து கிடைக்கும் தேங்காய்ப்பாலின் அளவு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால் கறி சமைக்கும்பொழுது முட்டுக்காய்த் தேங்காய்த் துருவலை அரைத்து கறியில் சேர்ப்பதன் மூலம் சுவையான பாதுகாப்பான ஊட்டச்சத்துள்ள உணவுகளை நாம் தயாரித்துக்கொள்ள முடியும்.
தேங்காய்களை முட்டுக்காய்ப் பதத்தில் பிடுங்குவதன் மூலம் தென்னைகள் காய்க்கும் வீதத்தை அதிகரிக்கச் செய்ய முடியும். இதன் மூலம் தென்னையிலிருந்து அதி உச்ச பயன்களைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
சிறிய பரிசோதனை ஒன்றின் மூலம் உண்மையிலேயே முட்டுக்காய்த் தேங்காய்களில் சாதாரண தேங்காய்களிலும் பார்க்க எண்ணெய்ப் பிடிப்புக் குறைவாகத்தான் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். சம அளவான ஒரு முட்டுக்காய்த் தேங்காய்ச் சொட்டையும் சாதாரண தேங்காய்ச் சொட்டையும் எடுத்து வெய்யிலில் நன்கு உலரவிடுங்கள். அதன் பின் இரண்டு சொட்டுக்களையும் தனித்தனியாகக் கடதாசி ஒன்றில் வைத்து அம்மிக் குளவியினால் நசித்து இரண்டினதும் எண்ணெய்த் தன்மையை ஒப்பிட்டுப் பாருங்கள். முட்டுக்காயில் எண்ணெய்த் தன்மையின் அளவு மிகக் குறைவாக இருப்பதை அவதானிக்கலாம்.
முட்டுக்காய்த் தேங்காய்த் துருவல் இலகுவில் சமிபாடடையக்கூடியதாக இருக்கிறது. இதனால் இதனை நோயாளர்களும் பயன்படுத்தலாம். முட்டுக்காய்த் தேங்காய்களில் கொலஸ்ரோல் இல்லை. தாவர உணவுகளில் பொதுவாக கொலஸ்ரோல் காணப்படுவதில்லை. ஆனால், சிலவகையான தாவர உணவுகள் உடலினுள் சென்று உடலின் கொலஸ்ரோல் கொழுப்பு வீதத்தைக் கூட்டவல்லன. எனவே, கொழுப்பு அதிகமுள்ள தாவர உணவு வகையைக் குறைத்துக்கொள்வது நல்லது.
முட்டுக்காய்த் தேங்காய்களில் இளநீர் அதிகமாக இருக்கும். இது குடிப்பதற்கு ஆரோக்கியமான இயற்கையான ஒரு பானமாகும். செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு விற்பனையாகும் சோடா வகைகளுடனும் மென்பான வகைகளுடனும் ஒப்பிடும் பொழுது இளநீர் மிகவும் பாதுகாப்பானது. எனவே முட்டுக்காய்த் தேங்காய்களைப் பாவிக்கும் பொழுது ஒரு மேலதிக நன்மையாகக் குடிப்பதற்குப் போதுமான அளவு இளநீரும் கிடைக்கிறது.
எனவே, தேங்காய்களை முற்றமுன் முட்டுக்காய்களாகப் பிடுங்கிப் பயன்படுத்துவதன் மூலம் தென்னையின் பயன்களைப் பெருக்கிக்கொள்வதுடன் எமது உடற் சுகத்தையும் மேம்படுத்திக்கொள்வோம்.
பொரித்து எடுக்கும் உணவு வகைகளை தயாரிப்பதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்தது. பொரிப்பதற்கு நல்லெண்ணெய், ஒலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் எண்ணெய் வகைகள் சிறந்தவை அல்ல. இந்த எண்ணெய் வகைகளை கொதிக்க வைக்கும் பொழுது அவை ‘ராண்ஸ்’ கொழுப்பாக மாற்றமடைகின்றன. இந்த ‘ராண்ஸ்’ கொழுப்பு உடல் நலத்துக்கு பாதுகாப்பானது அல்ல. தேங்காய் எண்ணெயை கொதிக்க வைக்கும் பொழுதும் அது ‘ராண்ஸ்’ கொழுப்பாக மாற்றமடையாது. இதனால் பொரித்த தேங்காய் எண்ணெயை 2ஆம் முறை பொரிப்பதற்கு பாவிப்பதும் பெரிய பாதிப்பு எதனையும் ஏற்படுத்த மாட்டாது.
பொதுவாக எல்லாவகையான எண்ணெய் களையும் அளவுடன் பாவிப்பது நல்லது..
எண்ணெய் சேர்த்து வதக்கி எடுக்கும் சமையலுக்கு நல்லெண்ணெய், ஒலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் என்பன சிறந்தவை. பொரித்து எடுக்கும் உணவு வகைகளை தயாரிப்பதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்தது
சி.சிவன்சுதன்
மருத்துவ நிபுணர்.