அர்ப்பணிப்புள்ள சேவை என்பதற்கு ஒரு சிலரே அர்த்தமாகின்றனர். அந்த வகையில் திருமறைக் கலாமன்றத்தை நிறுவி ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ் கலை, இலக்கிய பரப்பில் கோலோச்சி வந்த ஆளுமை நீ.மரியசேவியர் அடிகள் நேற்று காலமானார்.

நாடக பயிற்சிப் பாசறைகள், நூல் வெளியீடுகள், கருத்தரங்குகள், ஓவிய, சிற்ப கண்காட்சிகள், சஞ்சிகை வெளியீடு என்று பன்முக செயற்பாடுகளை அர்ப்பணிப்புடன் செயற்படுத்திவந்த மரிய சேவியர் அடிகளார் அண்மைக்காலங்களாக கடுமையான உடல் நலக் குறைவுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காலமானார்.

1939-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இளவாலையில் பிறந்த மரியசேவியர் அடிகளார் 1966ம் ஆண்டு உரும்பிராயில் ‘திருமறைக் கலாமன்றம்’ என்ற அமைப்பை நிறுவினார்.

காட்டிக்கொடுத்தவன், பலிக்களம், நல்லதங்காள், நெஞ்சக்கனல், நீ ஒரு பாதை, யூதகுமாரி முதலான பல நாடகங்களை உள்ளூரிலும் ஐரோப்பிய தேசங்களிலும் மேடையேற்றினார்.

இவ் அமைப்பினூடாக 1990 ஆம் ஆண்டு ‘கலைமுகம்’ என்னும் காலாண்டுக் கலை இலக்கிய இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராகக் கடமையாற்றியதுடன் சிறிது காலம் பாதுகாவலன் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

இவருக்கு இவரது சமய, கலைப் பணிகளைப் பாராட்டி 1997 ஆம் ஆண்டு ஜேர்மனி கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தில் அருட்தந்தை ஜெயசேகரம் அடிகளார் பொன்னாடை அணிவித்துக் ‘கலைத்தூது’ என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார்.

மேலும் இவரின் கலைச் சேவையைப் பாராட்டி யாழ். பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் விடிவுக்காக நீண்டகாலமாக குரல் கொடுத்து வந்த முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராஜப்பு யோசப் காலமான நிலையில் மற்றொரு தமிழ் கலை இலக்கிய உலக ஆளுமையான நீ.மரியசேவியர் அடிகளாரும் உயிரிழந்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் சோகத்தைக் கொடுத்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal