வீதியில் நடந்துவந்த பாமா, பக்கத்து வீதியால் வந்த அனுவைக் கண்டதும்
நடையின் வேகத்தைக் குறைத்தாள். புன்னகை ஒன்றுடன் அனுவோடு
உரையாடத்தொடங்கினாள். அவர்களின் உரையாடல் எம்
வாசகர்களுக்காகவும்.

பாமா : என்ன அனு முகமெல்லாம் ஒரு மாதிரிக்கிடக்கு, ஏதேனும்
பிரச்சனையே ?

அனு : பிரச்சனை இல்லாம கிடக்கே, எங்க பாத்தாலும் பிரச்சனையாத்தானே
கிடக்கு.

பாமா : அது சரி, அதை ஆர் இல்லையெண்டு சொன்னது, இப்ப உனக்கு
என்ன பிரச்சனை, அதைச்சொல்லு.

அனு : எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, போன இடத்தில கண்ட காட்சி
மனசைக் குழப்பிப்போட்டுது.

பாமா ; அப்பிடி என்னத்தைக் கண்டனியப்பா?

அனு : எங்கட ராசம்மா வீட்ட மகனும் மருமகளும் பிள்ளையளும்
வந்திருக்கினம் எல்லே,

பாமா: ஓமோம், அதுக்கென்ன?

அனு : பாவம் ராசம்மாவும், ஐயாவும்.

பாமா : ஏனடி, என்ன நடந்தது?

அனு : ரெண்டும் ஏலாம கிடக்குதுகள், பேரப்பிள்ளையள பாக்க எண்டு
கேட்டுத்தான், வீடெல்லாம் உடைச்சுக்கட்டி அவையள வரவைச்சினம்,
அந்தப்பிள்ளையள் ரெண்டுக்கும் தமிழில ஒரு வார்த்தை கூட தெரியேல்ல,

பாமா : ஏன்னடி சொல்லறாய், அப்பிடியெண்டா என்னண்டுதான் தாத்தா
பாட்டீயோட கதைக்குதுகள்?

அனு : அதுதான் பெரிய பிரச்சனை, பாவம் அப்புவும் ஆச்சியும், பாசத்தை
கூட பகிரத்தெரியாம நிக்குதுகள். அழுகையைத் தவிர வேற ஒண்டும்
கதைக்காமல் இருக்குதுகள். வந்த பெடி ரெண்டும் கஸ்புஸ் எண்டதில
மௌனமாவே இருக்கினம்.

பாமா : வெளிநாட்டால வாற சில பேரின்ர
பிள்ளையள் நல்லா தமிழ் கதைக்கிதுகள், சில பேர்தான் இப்பிடி.

அனு : தாங்கள் வாழுற நாடுதான் தங்கட சொந்த நாடெண்டும், அதுதான்
தங்கட மொழியெண்டும் சிலபேர் நினைக்கினம் போல, எனக்கு சரியான
கவலையா கிடக்கிது.

பாமா : அதுசரிதான், மனசுக்குள் கொப்பளிக்கிற பாசத்தை கூட வெளிய
காட்டமுடியாம வார்த்தைகள் புரியாத தருணங்களில் வேற என்னதான்
செய்யுறது?

அனு : யாரைச்சொல்லி என்ன, எங்கட சில சனங்கள் ஏன் தான் இப்பிடி
இருக்குதுகளோ, எங்கட மொழியை சொல்லிக் குடுக்கிறதில
பின்னிற்கலாமோ, எங்களுக்குப் பிறகு இருக்கப்போறது எங்கட சந்ததிதானே,
அதுகள் தானே நிலைமையைப் புரியவேணும்.

பாமா : நீ சொன்னது சரிதான், உதுகளைப்பாத்து மனம் வலிக்கிறதைவிட
வேற என்ன செய்யமுடியும், காலம் பதில் சொல்லட்டும், வா போவம்.

பெருமூச்சொன்றை வெளிவிட்டபடி இணைந்து நடந்தாள் அனு.

கோபிகை

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal