
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை திரவ உர கொள்கலன்கள் வெடித்துச் சிதறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அநுராதபுரம் ஹொரவப்பொத்தானை பிரதேசத்தில் இருந்து இந்த அறிக்கை கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபயவின் யோசனைக்கு அமைவாக நாட்டில் பயிர்களுக்கு இரசாயன உரங்களைப் பயன்படுத்து வதைத் தடைசெய்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து பயிர்ச்செய்கைக்காக இறக்குமதி செய்யப்பட்ட திரவ உரம் அடங்கிய கொள்கலன்கள் வெடித்து தற்போது வீணாகி வருவதாக ஹொரவப்பொத்தானை பிரதேச விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
இம்முறை பயிர்ச்செய்கைக்கு விண்ணப்பிப்பதற்காக விவசாயத் திணைக்களம் சுமார் 200 திரவ உர கொள்கலன்களை தமது உழவர் அமைப்புக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்த ஹொரவப்பொத்தானை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் , ஏற்கனவே சுமார் 100 திரவ உர கொள்கலன்கள் வெடித்து வீணாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் அண்மைய நாட்களாக எரிவாயு அடுப்பு வெடிப்புச்சம்பவங்கள் அடுத்தடுத்து பதிவான நிலையில் தற்பொழுது இயற்கை திரவ உர கொள்கலன்கள் வெடித்துச் சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.