×

மூன்று தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜெனிவா ஊடாகத் தீர்வுகளை வழங்குவதில் எந்தப் பயனும் இல்லை. எமது நாட்டின் பிரச்சினைகளை எமது நாட்டுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று 19.5.2026) நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, இராணுவ வெற்றியின் மூலம் மீட்டெடுக்கப்பட்ட இந்தச் சுதந்திர நாட்டில், யுத்த வெற்றிக்கு அரசியல் ரீதியாகத் தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்‌சவுக்கும், இராணுவத் தளபதியாகத் தலைமை தாங்கிய ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட முப்படைகளின் வீரர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையினருக்கு எனது விசேட மரியாதையைச் செலுத்திக் கொள்கின்றேன்.

நாட்டுக்காகத் தங்கள் உயிர்களையும், உடல் பாகங்களையும் தியாகம் செய்த வீரர்களை நாம் என்றும் மறக்க முடியாது. யுத்தத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் வேதனையை நான் அறிவேன்.

பயங்கரவாத யுத்தத்தினாலேயே நானும் எனது தந்தையை (முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ) இழந்தேன். இதனால் எனக்கும் அந்த வேதனை நன்றாகவே புரியும். 'இராணுவ வீரர்கள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்த நாம் தயங்கக் கூடாது.

அத்துடன், இனிவரும் காலங்களில் இவ்வாறானதொரு யுத்தம் நாட்டில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

நாட்டில் பல்வேறு இனப்பிரிவினர் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான தீர்வுகளை மீளக்கட்டியெழுப்புதல், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கம் மூலம் எமது நாட்டுக்குள்ளேயே வழங்க வேண்டும்.

வருடாந்தம் ஜெனிவாவுக்குச் சென்று பேசுவதை நிறுத்தும் வகையில், நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு, இறைமை மற்றும் அரசியல் சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என நான் யோசனை முன்வைக்கின்றேன்.

இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டிய உரிய இடத்தை வெறும் ரணவிரு சேவா அதிகார சபை ஊடாக மாத்திரம் பெற்றுக்கொடுக்க முடியாது.

எனவே, அமெரிக்காவைப் போன்று பிரத்தியேகமானதொரு திணைக்களத்தை நிறுவி, படை வீரர்களின் நலன்புரித் திட்டங்களை விரிவான முறையில் முன்னெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஜித் பிரேமதாச மேலும் வலியுறுத்தினார்.


×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115