×

தம்புள்ளையில் தாய் மற்றும் மகளை ஏமாற்றிய பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவருக்கும் போதைப்பொருள் கலக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளநீரை அருந்த கொடுத்து அவர்களை மயக்கமடைய செய்த நிலையில், 17 லட்சம் ரூபாவிற்கும் அதிக தங்கம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

பேருந்து ஒன்றில் வைத்து அறிமுகமான நபர் ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பை அடுத்து, அந்த நபர் இந்த செயலை செய்துள்ளார்.

இது தொடர்பில் கெக்கிராவ பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய கடந்த 8ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


தாயும் மகளும் பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது, அங்கு இருந்த நபர் ஒருவருடன் குறித்த யுவதி தொலைபேசி இலக்கங்களை பரிமாறிக்கொண்டு பின்னர் அவருடன் காதல் தொடர்பை பேணி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பழக்கம் முற்றிய நிலையில், குறித்த இளைஞன் தனது வீட்டில் நடைபெறவுள்ள தான நிகழ்வு ஒன்றிற்கு காதலிக்கு அழைப்பு விடுத்துள்ளார். பின்னர் அந்த இளைஞனின் தாய் மற்றும் சகோதரி எனக் கூறப்படும் இரு பெண்களும் தொலைபேசி ஊடாக இந்த யுவதியுடன் தொடர்பு கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தனது தாய்க்கு சில நோய்கள் இருப்பதால் வருவது கடினம் என யுவதி தெரிவித்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் இளைஞனின் தாய் எனக் கூறிக்கொண்ட பெண், தமக்குத் தெரிந்த பெண் துறவி ஒருவர் இருப்பதாகவும், தாய்க்கு இளநீர் சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய்களைக் குணப்படுத்த முடியும் எனவும் கூறியுள்ளார்.


காதலன், அவரது தாய் மற்றும் சகோதரி எனக் கூறப்படும் குழுவினர், குறித்த யுவதியையும் அவரது தாயையும் கெக்கிராவ நகரில் அமைந்துள்ள கும்புக்கு சிசில உயன என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு நோய்வாய்ப்பட்டிருந்த தாய்க்கும் யுவதிக்கும் சிகிச்சை அளிப்பதாகக் கூறி 2 இளநீர்களை அருந்தச் செய்துள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது யுவதியின் தாய்க்கு தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் போது யுவதிக்கும் மயக்க நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தின் பின்னர், சுயநினைவு திரும்பி விழித்துப் பார்த்தபோது தான் கெக்கிராவ வைத்தியசாலை கட்டிலில் இருந்ததாகவும், தான் அணிந்திருந்த மற்றும் வைத்திருந்த நகைகள் காணாமல் போயிருந்ததாகவும் பாதிக்கப்பட்ட யுவதி கெக்கிராவ பொலிஸில் செய்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115