தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் பேசுபொருளாகியுள்ளன.
தமிழ்நாட்டின் 17ஆவது சட்டப்பேரவையின் முதல்வராக தவெக தலைவர் விஜய் நேற்று முன்தினம் (10) பதவியேற்றார்.
இதனது பதவியேற்பு விழாவின் போது, 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைத் திட்டம், போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கம் உள்ளிட்ட கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.
இதனை தொடர்ந்து, நேற்றையதினம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைத் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
அதேநேரம், இன்று வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீற்றர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு முதலமைச்சர் விஜய் உத்தவிட்டுள்ளார்.
இதுகுறித்தான, தமிழ்நாட்டு அரசின் செய்தி வெளியீட்டில், ”தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
அதில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு முதல்வர் விஜய்யால் உத்தரவிடப்பட்டது.
அதன்படி, இந்த மூன்று தினங்களில் 717 சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த 2 வாரத்திற்குள் மூடுமாறு தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பேசுபொருளாகி வருகின்றது.