×

நாட்டில் ஒகஸ்ட் மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், இந்த ஆண்டின் வரவிருக்கும் மாதங்களுக்குத் தேவையான எரிபொருளும் கோரப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

பொதுச் சேவையின் சுமூகமான செயல்பாட்டைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட குழுவின் ஆறாவது கூட்டம் நேற்று  (15) பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்றதாகவும், அதில் அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டதாகவும் பிரதமர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்போது, எதிர்காலத்தில் எரிபொருள் சலுகைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள், எரிபொருள் வழங்கப் பயன்படுத்தப்படும் ஒற்றை மற்றும் இரட்டை எண் முறையை நீக்குதல், கியூஆர் குறியீடுகளின் கீழ் எரிபொருள் வழங்குதல் மற்றும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், தூய்மையான இலங்கைத் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்குக் கல்வி அளித்தல், மின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் குடும்பங்களை முறையாகத் தேர்ந்தெடுத்தல், பாடசாலை மாணவர்களை மதிப்பீடு செய்தல், மற்றும் மின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து அவர்களுக்குப் பயிற்றுவித்தல் போன்ற வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால கட்டுமானத் திட்டங்களில் பசுமைக் கட்டிடக் கருத்தை அறிமுகப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அரசாங்கத்தின் முறையான எரிசக்தி மேலாண்மையின் காரணமாக, தற்போதைய நெருக்கடிக்கு பொதுமக்கள் அதிக கவனம் செலுத்தவில்லை என்று ஹரினி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

மற்ற நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு ஏற்பட்டபோதிலும், தனது அரசாங்கம் இந்த நெருக்கடியை முறையாகக் கையாண்டதாக அவர் வலியுறுத்தியுள்ளார். 

இந்த நெருக்கடி இன்னும் முடிவடையாததால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். நிலையான எரிசக்தி மேலாண்மை மற்றும் பொது விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார். 

வெசாக் வாரத்தில் தேவைக்கேற்ப மின்சாரம் வழங்குவது அவசியம் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.  


×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115