
இருண்ட கண்டம் என்று சொல்லப்பட்ட ஆபிரிக்க வாழ்வின் முதல் ஜன்னல் இந்த நாவல். ஆபிரிக்க வாழ்வின் தொன்மையை, நூதனங்களை,பழம் பாரம்பரியங்களின் படிமங்களை உலகத்துக்கு சொன்ன நாவல்.சினுவா ஆச்சிபி யால் 1958 ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் 50 மொழிகளிலே மொழியாக்கம் பெற்றிருக்கிறது.N. K. மகாலிங்கம் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டு 1998 இல் ‘காலம்’ வெளியீடாக தமிழில் வந்திருப்பது அருமை.
நாவலில் ஆபிரிக்க கிராமங்கள் எப்படி வாழ்ந்தன ? அவற்றின் வாழ்வை ஒர் கிராம மனிதர்கள் மூலம் சொல்லி அங்கு வெள்ளையர்கள் வருகைதந்து புதுமையான மதத்தை பரப்புவதோடு முடிகிறது.இந்த நாவலை படித்தபோது அசலான ஒரு பழைமைவாழ்வை வைத்திருக்கும் தமிழ் கிராமத்தை பார்த்ததுபோல் இருந்தது. கிராமத்தலைமை, மானம், குலசாமி, செய்வினை, கள்ளு, திருமணப்பேச்சு, பலியிடல், கௌரவ கொலைகள். கள்ளுப்பானை என எண்ணற்ற சேதிகள்.கண்ட நகர்வுக்கொள்கையை இந்த நாவலும் உறுதிப்படுத்துகிறது.நாவலில் வரும் ஒரு சம்பவம் மனதை வாழ்வு பூராயும் வதைக்கும் என்று நினைக்கிறேன்.
கிராமங்களுக்கு இடையில் நடக்கும் ஒர் பிணக்கால் ஒர் மூன்று வயதுச்சிறுவனை ஒக்கொங்கோவோ வளர்க்கிறான். அச்சிறுவன் சொந்த மகன் போல் வளர்ந்திருந்த ஒருநாள் அவனை பலியிடும் சடங்கு ஏற்பாடாகிறது.அது அந்தசிறுவனுக்கு தெரியாது. உன் அம்விடம் அழைத்துச்செல்கிறோம் என்றுஅழைத்துச் செல்கிறார்கள். ஒருவன் கழுத்தில் கள்ளுப்பானை, மற்றவர் கைகளில் வாள்.சிறுவன் இகெமெஃபுனா வை ‘முன்னால் செல் !’ என ஒருவன் கட்டளையிடுகிறான். பயத்தில் தாயை நினைத்தபடி அவன் முன்னால் செல்ல பின்னால் சென்ற பெரிய மனிதன் வாளால் சிறுவனை வெட்டினான்.வளர்ப்பு தந்தை ஒகொங்கோ வேறுபக்கம் தலையை திருப்பிக்கொண்டான். வெட்டு அவனுக்கு கேட்டது. பானை விழுந்து மண்ணில் உடைந்தது. ‘’ என் அப்பா ! என்னை கொன்னுட்டாங்க ‘’ என்று அழுதுகொண்டு சிறுவன் ஓடிவந்நான்.பயத்தால் அலமந்து ஒக்கொங்கோவோ வும் தன் வாளால் சிறுவனை வெட்டி வீழ்த்தினான். ‘’தான் பலவீனமானவன் என்று மற்றவர் நினைத்துவிடுவார்களோ என்று பயந்து !
எனக்கு யூலியஸ் சீசரும், இன்னும் நம்பிக்கைத்துரோகங்களின் கதைகளும் மனதுக்குள் நிறைய ஆரம்பித்தது.‘’ என் அப்பா என்னை கொன்னுட்டாங்க..’’ என்ற கடைசிக்குரல் 2009 நந்திக்கடல் குழந்தையின் கறலாக என்னுள் ஒலித்தது. அதை கேட்க யாருமே இல்லை.குழந்தைகளின்அவலக்குரல்களால்சபிக்கப்படுகிறதுஉலகம் !