நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக, சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிக நிதி நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 21 ஆம் திகதி முதல் அரசாங்கத்தினால் நாடுமுழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டுப்பாடுகள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே, அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நாளாந்தம் ஆயிரத்து 500 கோடி ரூபாவுக்கும் மேலதிகமதாக நட்டம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு உற்பத்தியின் ஊடாக, நாளாந்தம் 15 லட்சம் கோடி ரூபா கிடைக்கப் பெற்று வந்த நிலையிலேயே, தற்போது இவ்வாறான நிலைக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் இவ்வாறான நிலையில், கொரோனா தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் ஏனைய மருத்துவ உபகரணங்களை கொண்டுவர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதனால் நாட்டில் பாரிய நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.