மு. சு. முத்துக்கமலம்

“நாலு பேரைப் போல நாமும் நல்லா வாழனும்” என்று பெரியோர்கள் அடிக்கடி சொல்லுவதைக் கேட்டிருப்போம். ஆமாம், அந்த நாலு பேர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?
பணம் சேர்ப்பது ஒன்றே வாழ்க்கையின் இலட்சியம் என நினைத்துக் கொண்டு வாழ்பவர்களா? தான் படித்த கல்வியால், தனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக் கொண்டு வாழ்பவர்களா? தனது உடல் பலத்தால் மற்றவர்களை அச்சுறுத்தி வாழ்பவர்களா? தன்னுடைய அரசியல் பலத்தால் எதையும் செய்ய முடியும் என்று சொல்லி வாழ்பவர்களா? இப்படியெல்லாம் தங்களது சிந்தனையைத் திசை திருப்ப வேண்டாம்.
உயிர்கள், உயிர்களின் கூடான உடல்கள், அவைகள் வாழ வாழ்வாதாரங்கள். பின்பு, உதித்த வீட்டைச் சென்றடைதல் என இந்த நான்கில் எதையும் செய்யத் தகுதியற்றவர்கள் தங்களைப் பெரியவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பொருள் எதுவுமில்லை.
இந்த உலகைக் காத்தருளும் இறைவன் சிவபெருமானைப் போற்றி வணங்கி, நாம் யார் ? நாம் ஏன் பிறந்தோம்? இனி நாம் பிறவாமல் நற்பேறு பெற்றிட என்ன செய்ய வேண்டும்? எது பாவம்? எது புண்ணியம்? பாவ, புண்ணிய செயல்களிலிருந்து விலகி நிற்பது எப்படி? என்பதை உணர்ந்து, மற்றவர்களும் உணர வழிகாட்டியாக வாழ்ந்து இன்றும் நமக்கு வழி காட்டியாக இருந்து வருபவர்கள் நான்கு பேர்.
- திருநாவுக்கரசர் – சரியை எனும் பக்தி கொண்டு அறம் செய்தல்
- திரு ஞானசம்பந்தர் – கிரியை எனும் தொண்டு செய்து பொருள் சேர்த்தல்
- சுந்தரமூர்த்தி நாயனார் – யோகம் எனும் இன்பம் வழியாக ஆத்மாவை அறிந்து உணர்தல்
- மாணிக்கவாசகர் – ஞானம் எனும் வீடு கொண்டு இறைவனுடன் கலத்தல்.
இந்த நாலுபேரைப் போல நாமும் வாழ வேண்டும் என்று சொல்லித்தான் பெரியோர்கள் வாழ்த்துகிறார்கள்.