நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

உணவில் மதம் பார்ப்பவனை விட்டுச்
சற்று விலகியே இருங்கள்
அவன் ஒவ்வொரு விஷயத்தையுமே
அரசியல்தான் ஆக்குவான்.
உன் தட்டு
உன் உணவு
உன் விருப்பம்
உன் சோற்றில் இடப்பட்டதை
இங்கு தீர்மானிக்க எவனடா ?
கடுகு, நெய்யிட்டுத் தாளித்தத்
தயிர் சாதத்தின் வாசனை
என்னை ஏதோ செய்தது…
அவள் மொட்டை மாடியில் காயப் போட்ட
வடகத்தைக் களவாடி
குழம்பு வைக்க
திருட்டுக் காக்கா மனசு ஏங்கியது
மஸ்ரூம் பிரியாணியில் தொட்டுக்க வைத்த
மாவடு பிரிந்து போன
முதல் காதலியின் நினைவுகளை
அப்பப்பக் கிளறிவிட்டுச் சென்றது
சுட்ட அப்பளத்தில் இட்ட பாயசத்தில் எல்லாம்
அவள் வாசனை இனித்துக் கொண்டேதான் இருக்கிறது
இவன் பேசும் உணவில் எல்லாம்
சைவம் இருக்கிறது
அப்ப அவன் நூல் போட்டவன்தான் என்றனர் – ஏனோ
அவன் குல்லா போடாத முல்லா என்பதை அறியாதவர்கள்
அங்கேப் பக்கத்துத் தெரு
முனியாண்டி விலாஸில்
கருவேப்பிலை போட்டு ப்ரை செய்த
கறி வாசனையைக்
காற்றிலேயே உணர்ந்தாராம்
கூட்ட நெரிசலையும்
கண்டு கொள்ளாமல்
முண்டியடித்து முன்னேறுகிறான் !!