எழுதியர் : தமிழ்ச்செல்வன்

விளாடிமிர் நகரத்தில் அந்த கொலை நடந்தது. இறந்தவன் பெயர் ரஸ்கல்னிகோவ். அவன் அரசக் குடும்பத்தை சேர்ந்தவன். ஜார் மன்னனின் குடும்பம் மட்டும் அல்லாமல் ரஷ்ய நாடு முழுவதும் அதிர்ச்சிக்கு உள்ளானது.
ஒரு விழா மேடையில் பேசிக்கொண்டிருந்தான் ரஸ்கல்னிகோவ். பொதுமக்களின் கண்கள் முன்னே விழுந்து இறந்தான். அவன் விழுவதற்கு முன் ஒரு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. கண் இமைக்கும் நேரத்தில் ராஸ்கல்னிகோவ் ரத்தவெள்ளத்தில் சாய்ந்தான்.
கூட்டத்தில் இருந்த மக்கள் சிதறி ஓடினார்கள். கொலையாளியை யாரும் பார்க்கவில்லை.
அப்போது ஜார் வம்ச மன்னனாக இருந்த போரிஸ், மக்கார் என்ற விசாரணை அதிகாரியை நியமித்தான்.மக்கார் மிகுந்த அறிவாளி. அதற்கு முன் பல வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடித்து பாராட்டுப் பெற்றவன்.
மக்கார் விசாரணையைத் தொடங்கினான். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு நாட்டுத்துப்பாக்கி கிடைத்தது. அது ஒரு பழுதான துப்பாக்கி. அதுதான் கொலைக்கருவி என்று முடிவு செய்தான்.அதற்கு பக்கத்தில் ஒரு ஸ்க்ரூ ட்ரைவர் கிடந்தது. துப்பாக்கியின் ஸ்க்ரூக்களை டைட் செய்ய கொலையாளி வாங்கி இருக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.
ஸ்க்ரூட்ரைவருடன் பக்கத்தில் இருந்த கடைக்கு சென்றான்.
“இந்த ஸ்க்ரூ ட்ரைவர் உங்க கடையில விக்கப்பட்டதா “
“இதே மாதிரி ஒரு ஸ்க்ரூ ட்ரைவர் போன வாரம் விற்பனை ஆச்சு. அந்த மாடல்ல அது ஒன்னு தான் இருந்துச்சு. உங்களுக்கு வேற மாடல் வேணுமா ? “
” நான் ஒரு விசாரணை அதிகாரி. ரஸ்கல்னிகோவ் கொலை சம்பந்தமா விசாரிக்கறேன். நீ என்கிட்ட ஏதாவது உண்மையை மறைச்சா நீ தான் குற்றவாளின்னு ஊர்ஜிதம் ஆயிடும். உனக்கு நிச்சயம் மரண தண்டனை கிடைக்கும் “
”நான் எந்த உண்மையும் மறைக்கல. ரஸ்கல்னிக்கோவ் அழகான இளவரசன்.எனக்கு ரொம்ப விருப்பம் ஆனவன். அவன் இறந்த செய்தி கேட்டு கண்ணீர் விட்டு அழுதேன்.உங்க எல்லா கேள்விக்கும் நான் எனக்கு தெரிஞ்ச பதில் சொல்றேன். வேணும்னா என்னோட வீட்டுக்கு வாங்க. நாம ஒயின் அல்லது ஓட்கா குடிச்சுட்டே பேசலாம் “
“இந்த ஸ்க்ரூட்ரைவர் யாருக்கு வித்த. “
” எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு, அவன் ஒரு கல்லூரி மாணவன். பக்கத்து ஊர்க்காரன், இந்த மாடல் ஸ்க்ரூட்ரைவர் அவங்க ஊர்ல கிடைக்கவே இல்லேனு சொன்னான். அவனோட பொம்மைகளை திறந்து ஆராய்ச்சி செய்ய ஸ்க்ரூட்ரைவர் வேணும்னு சொன்னான் ”
“அவனோட பேர் என்ன “
” நான் அவன்கிட்ட பேர் கேக்கல “
“அவனோட அடையாளம் சொல்லு. “
“சராசரி உயரம். சராசரி ரஷ்ய நிறம். வேற எதுவும் சரியா கவனிக்கல “
“தழும்பு , மச்சம் , ஏதாவது அவன் முகத்துல ,கைகள்ல இருந்ததா.என்ன நிறத்துல உடை அணிஞ்சு இருந்தான்”
” அது எனக்கு சரியா ஞாபகம் வரலை “
“நல்லா யோசிச்சு சொல்லு. அவனை பாக்க பணக்காரன், மாதிரி தெரிஞ்சுதா ? ஏழை மாதிரி தெரிஞ்சுதா ?”
” இப்போ ஞாபகம் வருது . அவன் கருப்பு நிற கம்பளி சட்டை போட்டிருந்தான். அப்போ ஒரு பிச்சைக்காரி கடைக்கு வந்து பிச்சைக் கேட்டா . ரொம்ப வயசான பிச்சைக்காரி , அந்த இளைஞன் அவன்கிட்ட இருந்த 5 ரூபிள்களை அவளுக்கு கொடுத்தான். ஒரு ரூபிள் கொடு போதும்னு நான் சொன்னேன். அவன் நான் சொன்னதை கேக்காம 5 ரூபிள்களை அவளுக்கு கொடுத்தான் “
“அப்படீன்னா அவன் ஒரு பணக்காரனா இருக்கனும் “
“நிச்சயம் அவன் பணக்காரன் இல்லை “
“அதை எப்படி நீ உறுதியா சொல்ற “
“அவனோட கருப்பு கம்பளி சட்டைல சில கிழிசல் இருந்ததை பார்த்தேன். பணக்காரன் அவ்வளவு பழைய சட்டை அணியவேமாட்டான் “
மக்கார் மேலும் பல இடங்களில் அந்த இளைஞனை பற்றி விசாரித்தான். குறிப்பாக பிச்சைக்காரர்களிடம் அதிகமாக விசாரித்தான்.
கடைத்தெருவில் ஒரு நிகழ்வை பார்த்தான். ஒரு சிறுவன் அழுதுக் கொண்டிருந்தான். பசிக்கிறது என்று அங்கு இருந்தவர்களிடம் சொல்லி அழுதான். அங்கிருந்த எல்லாரும் சிறுவனைத் திட்டி விரட்டினார்கள்.
ஒரு பெண்மணி சிறுவன் அருகில் சென்றாள். அவளுடைய கைக்குட்டையால் அவன் கண்ணீரைத் துடைத்தாள் . அவனுக்கு கோழிக்கறி வறுவல் வாங்கிக்கொடுத்தாள். மக்கார் முக்கியமாக கவனித்த விஷயம் அவள் உடை கிழிந்து இருந்தது .
மக்கார் அவள் அருகில் சென்றான்.
” வணக்கம் நீங்க மரியா தானே.. நான் பொம்மைக்கடை வச்சிருக்கேன் உங்க மகன் என் தோழன் “
” இல்ல , என்னோட பேர் அஞ்செலினா டிமிட்ரி. யுவான் சொல்லி இருக்கான் அவன் நண்பன் பொம்மைக்கடை வச்சிருக்கான்னு. நான் நேர்ல பாத்தது இல்லை”
” ஆமா , ஒரு நாள் தேவாலயத்துல அவனை சந்திச்சேன். அவங்க அம்மா அஞ்செலினா பத்தி தான் யுவான் நிறைய சொன்னான். நான் தான் உங்க பேரை மறந்துட்டேன் “
” நீ தப்பா வேற ஒருத்தரை சொல்றேன்னு நினைக்கிறன். எங்க குடும்பத்துல தேவாலயம் போகற வழக்கம் இல்லை . ஏழைகளுக்கு உதவறது தான் சிறந்த வழிபாடுனு என்னோட கணவர் அடிக்கடி சொல்லுவார் . அவர் இறந்த பிறகும் நானும் என் மகன் யுவானும் அதை கடைப்பிடிக்கிறோம் ”
“யுவான் இதை அடிக்கடி என்கிட்டயும் சொல்லுவான். நான் தேவாலயத்துல பிராத்தனை முடிச்சுட்டு வெளிய வரும்போது தான் அவனை சந்திச்சு பேசினேன் . வீட்டுக்கு கூப்பிட்டான். இன்னொரு நாள் வரேன்னு சொன்னேன் ,முகவரி எழுதிக்கொடுத்தான். நானே ஒருநாள் வந்து பாக்கறேன் “
.
மக்கார் காலவர்களிடம் சொல்லி அஞ்செலினாவை பின்தொடர்ந்தார்கள். அவர்களின் வீடு ரகசியமாக சுற்றிவளைக்கப் பட்டது .
மக்கார் நுழைந்த போது அங்கே ஒரு இளைஞன் புத்தகம் படித்துக்கொண்டிருந்தான்.
”நீ யுவான் தானே . “
“ஆமாம் . நீங்க யாரு ” யுவான் அணிந்து இருந்த கருப்பு கம்பளி சட்டையில் இருந்த கிழிசல்களை மக்கார் கவனித்தான்.யுவான் கையில் இருந்த புத்தகத்தின் பெயரை வாசித்தான் ‘ஏழைகளை சுரண்டும் முதலாளிகள் ‘
“நீ படிச்சுட்டு இருக்கறது தடை செய்யப்பட்ட புத்தகம். அது உனக்கு எங்கே கிடைச்சது? “
” அது எனக்கு தெரியாது. எங்கள் வகுப்பறையில் தனியாகக் கிடந்தது. இதை தவறவிட்டவங்க திரும்ப வந்து கேக்கும்போது திரும்பக் கொடுக்கணும்னு எடுத்து வந்தேன். நீங்க யாரு “
“நான் மக்கார் செமியோனோவ். விசாரணை அதிகாரி. இந்த ஸ்க்ரூட்ரைவர் உன்னுடையதா ?”
“இதே நிறத்தில் இதே மாடல் ஸ்க்ரூட்ரைவர் ஒன்னு போன வாரம் வாங்கினேன் “
“அது இப்போ எங்கே ?”
“நான் கல்லூரியில் இருந்து வர வழியில ஒருத்தர் கடன் வாங்கினார். அதுக்கு நிகரான பணம் கொடுக்கறேன்னு சொன்னார். நான் வேண்டாம்னு சொல்லிட்டேன் . அடுத்த நாள் திருப்பி தருவதா சொன்னார். அவர் இன்னும் வந்து கொடுக்கல “
யுவானின் அம்மா அஞ்செலினா அங்கே வந்தாள்.
“ஓ .பொம்மைக்கடை நண்பனா? இரு தம்பி, உணவு சமைச்சுட்டு இருக்கேன். ஒயின் கொண்டு வரேன்”
“அது உண்மை இல்லை. நான் ஒரு விசாரணை அதிகாரி. உங்க கிட்ட விசாரிக்க வந்தேன் “
“என்ன விசாரிக்கணும் “
“உங்க மகன் கிட்ட தனிமையில் விசாரிக்கணும். அவனை காவல் நிலையம் கூட்டிட்டு போறேன் “
“சரி ,கூட்டிட்டு போங்க. அவன் நிச்சயம் அவனுக்கு தெரிஞ்சதை எல்லாம் சொல்லுவான். நானும் வரலாமா ?”
“இப்போ வேண்டாம். தேவைப்பட்டா கூப்பிடறோம் “
“யுவானை ,வீட்டுக்கு எப்போ திரும்ப அனுப்புவீங்க “
மக்கார் பதில் சொல்லவில்லை. அஞ்செலினாவின் முகத்தை உற்றுப் பார்த்தான். எந்த பதிலும் சொல்லாமல்
குதிரை வண்டியில் ஏறிச் சென்றார்கள் .
விசாரணை சில மாதங்கள். நடந்தது சிறப்பு நீதி மன்றம் அமைக்கப்பட்டது. பீட்டர் அதில் நீதிபதியாக நியமிக்கபட்டான்.
யுவான் மீது கொலைக்குற்றம் சுமத்தினார்கள். பொது மக்கள் பார்வையில் யுவான் மீது கோபம் உண்டானது.
மக்கார் சமர்ப்பித்த விசாரணை அறிக்கையை படித்து விட்டு நீதிபதி பீட்டர் தன் தீர்ப்பை வாசித்தான்.
“விசாரணை அறிக்கையில் யுவானின் ஒப்புதல் வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.,யுவான் மீது சுமத்தப்பட்ட குற்றம். தெளிவாக ஊர்ஜிதம் ஆகி இருக்கிறது.ஆகவே அதற்கு தண்டனையாக யுவானை தூக்கிலிட்டு கொல்வதற்கு உத்தரவிடுகிறேன் ” என்று தன் தீர்ப்பை எழுதி முடித்தான்.
நீதி மன்றத்தில் அஞ்செலினா மயங்கி விழுந்தாள். பொதுமக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டடினார்கள்.
சில நாட்களுக்கு பின் அஞ்செலினா விளாடிமிர் நகரத்தின் பெரிய தேவாலயத்திற்கு சென்றாள். தன் மகன் யுவானை நினைத்து வேண்டினாள்.
அந்தக்கூட்டத்தில் மக்காரும் இருப்பதைப்பார்த்தாள். பாதிரி அவனுக்கு ஆசி வழங்கினான். மக்கார் அவனிடம் விடைபெற்று வரும்போது அஞ்செலினாவைப் பார்த்தான்.
மிகவும் பணிவுடன் அஞ்செலினா அருகில் வந்து நின்றான்.
” யுவானுக்கு நீதிபதி கொடுத்த மரணத்தண்டனை எதிர்பாக்கவே இல்லை. ரொம்ப அதிர்ச்சியாக இருந்துது ” என்றான் .
“என் மகன் எந்த குற்றமும் செய்யலைனு எனக்கு தெரியும். கடவுளுக்கு தெரிஞ்சு இருக்கனும். அதை முறையிடத்தான் இப்போ கொஞ்ச நாளா தேவாலயம் வர ஆரம்பிச்சு இருக்கேன் “
“யுவான் குற்றம் செய்யலைனு எனக்கும் தெரியும்.அவன் எதுவும் தெரியாதுன்னு தான் என்கிட்ட சொன்னான். நான் எழுதின விசாரணை அறிக்கையை ஒப்புக்கொண்டால் குறைவான தண்டனை தான் கிடைக்கும்னு யுவான் கிட்ட சொன்னேன். நான் சொன்னதை நம்பி அவனும் ஒப்புக்கிட்டான். இப்போ என்னோட மனசே நிம்மதி இழந்துடுச்சு. அதனால தான் பாவமன்னிப்பு கேட்க வந்தேன் “
” பாவமன்னிப்பு கிடைச்சுதா “
“பாதிரி சொன்னாரு தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் இறைவன் கருணை நிறைஞ்சவன் . மனம் வருந்தறவங்களுக்கு அவன் மன்னிப்பு கொடுத்திடுவான் னு சொன்னாரு. என்னால முடிஞ்ச காணிக்கையை செலுத்தினேன். இப்பதான் என்னோட மனசு நிம்மதியா இருக்கு.”
“நீங்க தவறு செய்தது மனித இயல்பு. கருணை நிறைஞ்ச இறைவன் உங்களை மன்னிச்சுட்டான். குற்றம் செய்யாத என் மகன் தண்டனை அனுபவிப்பதற்கு யார் காரணம். இறைவனா ? இறைவன் யாரிடம் பாவமன்னிப்பு கேட்பான் “
அஞ்செலினாவின் கண்ணீரைப் பார்த்து மக்காருக்கும் கண்ணீர் வந்தது.
“அந்த வழக்கை சீக்கிரமா முடிக்க சொல்லி எனக்கு அழுத்தம் கொடுத்தாங்க. அந்த கொலையில் உண்மை தெரிஞ்ச அரச குடும்பத்தினரையும் ,பிரபுக்களையும் விசாரிக்க எனக்கு அனுமதி கிடைக்கல . அதனால் தான் யுவானை அந்த சிறு தவறை ஒப்புக்கொள்ள சொன்னேன் . என்னுடைய தவறு . சரி செய்யவேண்டியது என்னோட கடமை. யுவானை விடுதலை செய்யறதுக்கு என்னால் முடிஞ்ச உதவிகளை நான் செய்யறேன்” என்றான் மக்கார் .
அஞ்செலினா, மக்கார் இருவரும் நீதிபதியை பார்த்தார்கள் . மன்னனின் உதவியாளர்களிடம் மனு கொடுத்தார்கள் . மேல் முறையீடு செய்தார்கள். வழக்கு சில ஆண்டுகள் நடந்தது. அஞ்செலினா பல இடங்களில் போராட்டம் நடத்தினாள் . தேவாலயத்தின் வெளியே வரும் மக்களுக்கு துண்டு சீட்டில் எழுதிக்கொடுத்து ஆதரவு திரட்டினாள். சிலர் அவள் கதை தெரிந்து அனுதாபம் கொண்டார்கள் . அவள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள்
வழக்கு முடிவில் யுவானின் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டது. சிறைத்தண்டனை தொடர வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது .
அவளுக்கு வருடத்திற்கு ஒரு முறை சிறைக்குள் சென்று மகனை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. அஞ்செலினா பழங்கள்,தான் சமைத்த மாமிசம், ஒரு புது கம்பளி சட்டை எல்லாம் எடுத்துச்சென்று யுவானிடம் கொடுத்து ஆறுதல் சொல்வாள் .
“யுவான் . நான் இருக்கறவரை நீ கவலைப்படாதே. நீ விடுதலை ஆகுற வரை நான் ஓயமாட்டேன் . உன்னோட துன்பங்கள் தற்காலிகமானது . நீ சீக்கிரம் விடுதலை ஆயிடுவ . உன்னோட படிப்பை முடிச்சு .வேலைக்கு போக ஆரம்பிச்சதும் உனக்கு கல்யாணம் நடந்து என் பேரக்குழந்தைகளோடு நான் கொஞ்சி விளையாடற நாள் நிச்சயம் வரத்தான் போகுது .நீ அம்மாவை நம்பு யுவான்” என்பாள் .
“சரி அம்மா , நான் உங்களை முழுமையா நம்பறேன். எனக்கு கவலை எதுவும் இல்லை ” என்பான் யுவான்.
இந்த உரையாடல் ஒவ்வொரு வருடமும் அவர்கள் சந்திக்கும் போதெல்லாம் நிகழ்ந்தது.
விளாடிமிர் நகரில் ஒரு செல்வந்தன் இருந்தான். தன வீட்டில் வேலை செய்யும் சிறுமியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டான். குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்றான். 3 ஆண்டுகளில் விடுதலை ஆகி மீண்டும் இயல்பாக , மகிழ்ச்சியாக தன் வாழ்க்கையைத் தொடர்ந்தான் .
அஞ்செலினா நீதிமன்றம் சென்று முறையிட்டாள். கொடூர கொலை குற்றவாளிகள் 3 ஆண்டுகளில் வெளி வரும்போது தன் மகன் குற்றம் செய்யாமலே 5 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்ததால் விடுவிக்க வேண்டும் என்றும் முறையிட்டாள் .
“பணக்கார குற்றவாளிகள் ஏழைகளை கொலைசெய்வதும் ஏழை குற்றவாளிகள் பணக்காரர்களை கொலை செய்வதும் சமமாக கருத முடியாது . யுவான் கொலை செய்தது அரசகுடும்பத்தவன் என்பதால் இது பெரிய குற்றம் ஆகவே விடுதலை செய்ய முடியாது “என்று தீர்பளித்தான் நீதிபதி .
அஞ்செலினா வாழ்வில் போராட்டங்கள் வழக்கமாகி போனது. அவள் பொது மக்களிடம் துண்டு சீட்டுகளை கொடுத்தால் அவர்கள் பெரும்பாலும் அதை படிக்காமல் கசக்கி எறிவார்கள் . இவள் அதை எடுத்து மடித்து வைத்துக்கொள்வாள். அந்த துண்டு சீட்டுகள் பெரும்பாலும் கிழிந்து நிறம் மாறி இருந்தது . அஞ்செலினாவை அந்த ஊர் மக்கள் உதாசீனம் செய்தார்கள் .ஆண்டுகள் பல ஓடின.
மீண்டும் ஒரு நாள் தன் மகனை சிறையில் சந்தித்தாள். கம்பளி சட்டை , பழங்களை கொடுத்தாள்.
எப்போதும் சொல்லும் அதே ஆறுதல் வார்த்தைகளை சொன்னாள் .
“உனக்கு சீக்கிரம் விடுதலை கிடைக்கும். நல்ல வேலைக்கு போவாய். கல்யாணம் நடக்கும் . பேரக்குழந்தைகளை நான் கொஞ்சி விளையாடப்போறேன் “என்றாள்.
யுவான் கண்ணீர் சிந்தினான். ” அம்மா . நீங்கள் உங்களை ஏமாத்திக்காதீங்க. இப்போது சிறையில் என்னோட இருக்கும் சக கைதிகள் பெரும்பாலும் நான் கைது செய்யப்பட்ட வருசத்துக்கு அப்புறம் பிறந்தவங்க .
என்னை பெரியவரேனு கூப்பிடறாங்க .சிலர் தாத்தானு கூப்பிடறாங்க .காலம் மாறிடுச்சு அம்மா. உங்க பழைய கனவுகள் நிஜமாகாது. நான் சிறைக்கு உள்ளேயே வாழ்ந்து முடிச்சிடறேன்.சிலர் விபத்தில் சாகறது இல்லியா. சில நிரபராதிகள் மரணதண்டனை கிடைச்சு சாகறது மாதிரி நினைச்சுக்கோங்க . நீங்க ஓய்வு எடுத்துக்கோங்க அம்மா . எனக்காக கஷ்டப்பட்டது போதும். ” என்று அழத்தொடங்கினான் யுவான் .
” யுவான் , என்னோட பார்வைல நீ இப்பவும்
குழந்தைதான். நீ மனசுக்குள்ளள நினைச்சு வருத்தப்படுத்திட்டு இருக்கியா . சட்டம் உன்னை கைவிட்டுடுச்சு , நீதிமன்றம் கைவிட்டுடுச்சு , மக்கள் கைவிட்டுட்டாங்க .இறைவன் கைவிட்டுட்டான் இப்படி எல்லாம் நினைச்சு வருத்தப்பட்டு இருக்கியா யுவான் “
” சில சமயம் ,நினைச்சு இருக்கேன் அம்மா “
“இதே மாதிரி உன்னை உங்க அம்மாவும் கைவிட்டுட்டாங்கனு எப்பவும் நீ நினைக்கூடாது, நினைச்சுடாதே.உலகமும் கடவுளும் உனக்கு எதிரா நின்னாலும் அம்மா உன்கூட இருப்பேன் .யுவான். எனக்காக நீ ஒரு உதவி செய் “
“ஒரு மகனா நான் உங்களுக்கு எதுவும் செஞ்சது இல்லை . நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன் அம்மா சொல்லுங்க “
“நீ நம்பிக்கையோட இருக்கணும். இந்த போராட்டத்துல உங்க அம்மா ஜெயிச்சுடுவாங்க . உனக்கு விடுதலை கிடைச்சுடும் . இது எல்லாம் நிஜம்னு நம்பனும். இது தான் நீ எனக்கு செய்யவேண்டிய உதவி யுவான் “
“நிச்சயம் செய்யறேன் அம்மா “.
அஞ்செலினா தவறாமல் தேவாலய கூட்டங்களுக்கு செல்கிறாள். இறைவனை வேண்டுகிறாள்.ஏழைகளுக்கு உதவுகிறாள் . அதன்பின் தன மகனுக்காக பிராத்தனை செய்யச் சொல்லி மக்களிடம் துண்டுச்சீட்டுகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறாள் .
ஒரு வேளை நீங்கள் விளாடிமிர் நகரவாசியாக இருந்தால், தேவாலயம் செல்லும் நேரம் அஞ்செலினா உங்களிடம் துண்டுச்சீட்டு கொடுத்தால், அவள் கண் முன்னே கசக்கி எறியாதீர்கள் .புதிய துண்டுச்சீட்டு எழுத முடியாத அளவிற்கு அவள் முதுமை அடைந்து விட்டாள்.
தயவுசெய்து அதை அவளிடம் திருப்பிக் கொடுத்து,.ஆறுதல் சொல்லிவிட்டு நகருங்கள்.
[ முற்றும் ]