எழுதியவர் – சசிகலா திருமால்

பொதுவாகவே நாம் எந்த துறையில் வேலை செய்பவர்களாக இருந்தாலும் கிண்டல் செய்து மீம்ஸ் வருவதை பார்த்திருக்கிறோம். ஆனால் உண்மையில் எல்லா துறைகளிலும் கஷ்டங்கள் இருக்கதான் செய்யும்.. வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு அது தெரிய வாய்ப்பில்லை தான்.
அதிலும் காவல்துறை மற்றும் மருத்துவர்களைப் பற்றி நிறையவே வந்திருக்கிறது. யாரோ ஒரு சிலர் செய்யும் தவறிற்காக ஒட்டு மொத்த துறையையும் குற்றம் சாட்டுவது தவறு. இந்த கொரோனா காலத்தில் இவர்களின் பணி அளப்பறியது என்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
சென்ற மாதம் குலதெய்வ வழிபாட்டிற்காக சென்னை சென்று விட்டு திரும்பி வந்துக்கொண்டு இருந்தோம் இரயிலில். சென்னையில் ஒரு ஹோட்டலில் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு அடுத்த ஒரு மணிநேரம் கழித்து இரயில் ஏறினோம். ஏறி அமர்ந்து இதமான தென்றலோடு இயற்கையை இரசித்தபடியே பயணம் தொடர்ந்தது. அடுத்த ஒரு மணிநேரத்தில் என் இதயத்துடிப்பின் எண்ணிக்கை இருமடங்காய் எகிற இதமான பயணம் இறுக்கமாய் மாறியது.
தொடர்ந்து மூச்சு தடைபடத் தவித்து போனேன் நான். என்னவரிடம் சொல்ல என்ன செய்வதென்றறியாமல் அவரும் பரிதவித்துப் போனார். சரியாக விழுப்புரம் சந்திப்பு வந்தது. எங்களின் நிலைக்கண்டு சக பயணி ஒருவர் இங்கே சந்திப்பில் உதவி கோருங்கள் என்று கூறினார். அவரது அறிவுரைப்படி எனது கணவரும் அங்குள்ள காவல்துறையினரிடம் உதவி கேட்க.. காவல்துறை நண்பர்கள் உடனடியாக உதவிட முன்வந்தனர்.
நிலமை மிகவும் மோசமாக உள்ளது.. ஆகவே அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்வோம் என்றனர்.
“நானோ… இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர் மிகவும் சிரமப்படுவார். நான் கொஞ்சம் அனுசரித்து ஊருக்கே போய்விடுகிறேன் என்றேன்”.
காவல்துறை நண்பர்கள் அதை செவிமடுக்கவில்லை.
“இல்லை நிலமை மோசமாக உள்ளது. மருத்துவமனைக்கு செல்வதுதான் உகந்தது என்று கூறி.. உடனே ஆட்டோவிற்கு சொல்லிவிட்டனர். என்னை பிளாட்பார இருக்கையில் அமர வைத்து குடிக்க தண்ணீர் தந்து.. கையிலிருந்த புத்தகங்களைக் கொண்டு சுவாசிக்க ஏதுவாக விசிறியும் விட்டார்கள். என்னால் எழுந்து நடக்க கூட முடியாத சூழ்நிலை என்பதால் ஆட்டோவை பிளாட்பாரத்திற்கே எடுத்து வருமாறு அறிவுறித்தினர்”.
ஒரு ஆண் காவலர், ஒரு பெண் காவலரிடம் , பாவம் அவர் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்படுவார் நீங்களும் துணைக்கு சென்று உதவுங்கள் என்று துணைக்கு அனுப்பி வைத்தார். என் கணவரின் பெயர் மற்றும் அலைபேசி எண்ணையும் வாங்கிக் கொண்டார்.
மருத்துவமனைக்கு சென்றவுடன் எனக்கு முதலுதவிகள் செய்யும் வரை அந்த பெண் காவலர் என் பிள்ளைகளுக்கு துணையாக இருந்தார். என் கணவரோ எனக்கு மருந்துகள் வாங்க அலைந்துக்கொண்டிருக்க என் பிள்ளைகள் அந்த பெண் காவலரிடம் மிகவும் பாதுகாப்பாக இருந்தனர். அந்த பதட்டத்திலும் பிள்ளைகளை நினைத்து வருந்தினேன்.. பிள்ளைகள் காவலரிடம் பாதுகாப்பாக உள்ளார்கள் பயப்பட தேவையில்லை என்று என்னவர் சொல்லவும் தான் மனம் கொஞ்சம் தெளிவடைந்தது.
மருத்துவமனைக்கு சென்ற வேகத்தில் என்ன ஏதென்று விவரம் கேட்டறிந்து சற்றும் தாமதிக்காமல் சிகிச்சை அளித்தனர் மருத்துவர்கள். மிகவும் பொறுமையாக “உங்களுக்கு ஒன்றுமில்லை மா.. நீங்கள் பயப்பட தேவையில்லை.. நாங்கள் இருக்கிறோம்.. உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்”என்று எனக்கு தேறுதல் கூறி அன்போடு பழகினார்கள். மதியம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாததால் உடல் அலர்ஜி அதிகமாகி மூச்சுவிட சிரமமாகிவிட்டது என்று மருத்துவர்கள் கூறினார்கள்.
சிகிச்சை அளித்து அடுத்த ஒரு மணிநேரத்திற்கு பின்னே நான் கொஞ்சம் சுயநினைவிற்கு வந்தேன். ஆனால்.. வலி இருந்தது. பிள்ளைகளைத் தேடினேன். அருகிலிருந்த என்னவர் கூறினார். “பயபடாதமா.. உனக்கு ஒன்னும் இல்ல. நீ சரியானத பார்த்துட்டு இப்போதான் அந்த பெண் காவலர் கிளம்பி போறாங்க. அவங்க தான் பசங்களுக்கு சாப்பாடு வாங்கி ஊட்டிவிட்டாங்க. நான் உனக்கு மருந்து வாங்கறதுக்காக அலைஞ்சுட்டு இருந்தேன். அவங்க தான் நம்ப பசங்கள பொறுப்பா பார்த்துகிட்டாங்கமா. அவங்க இல்லைனா நானும் விவரம் தெரியாத சின்ன பசங்கள வச்சிக்கிட்டு ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பேன்மா.. சும்மா சொல்லக்கூடாது இங்க இருக்குற டாக்டர்சும் ரொம்பவே பொறுப்பா உடனுக்குடன் முதலுதவி செஞ்சாங்கமா”.. என்று கூறினார்.
அதன்பின் இரண்டு மணி நேரம் கழித்து நாங்கள் வீட்டிற்கு கிளம்பினோம். அதன்பின் இரயில் இல்லாததால் பேருந்தில் பயணம் செய்யும்படி இருந்தது.பேருந்தில் ஏறிய கொஞ்ச நேரத்திற்கு எல்லாம் என் கணவரின் அலைபேசி ஒலித்தது. விழுப்புரம் சந்திப்பிலிருந்து காவல்துறை அதிகாரி பேசினார். “இப்போது தங்கள் மனைவி எப்படி இருக்கிறார்கள்?.. மருத்துவமனையிலிருந்து கிளம்பிவிட்டீர்களா?.. குழந்தைகளை அழைத்துக்கொண்டு மிகவும் பத்திரமாக வீட்டிற்கு செல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார்.
ஒருசில இடங்களில் காவல்துறையினரோ, மருத்துவர்களோ அல்லது வேறு துறையை சார்ந்தவர்களோ… யாரோ ஒருசிலர் அலட்சியமாக தவறான முறையில் நடந்துக்கொள்ள தான் செய்கின்றனர். நானும் கண்டிருக்கிறேன். அது போன்ற ஓரிருவரை வைத்து ஒட்டுமொத்தமாக அத்துறையினரையே குறை கூறுதல் என்பது தவறான செயலாகும். இது போன்ற நல்லவர்களை மனதில் நிறுத்தி அத்துறையினரை நினைத்து பெருமைக் கொள்வோம்.
அவரவர் செய்யும் பணியை மனநிறைவோடு நேர்மையான முறையில் செவ்வனே செய்தால் ..அது எந்த வேலையாக இருந்தாலும் நல்ல வேலைதான். இந்த கலிகாலத்திலும் நல்லுள்ளம் படைத்த கடவுளர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒருவரை கிண்டல் செய்யவோ அல்லது தவறாக பேசுவதற்கு முன்போ.. சற்றே சிந்திப்போம்.. எல்லா உயிர்களையும் மதிக்க கற்றுக்கொள்வோம்.
நன்றி…