எழுதியவர் – கோபிகை.

அம்மா..அற்புத வரம்,…
அம்மா …பேரன்பின் பிறப்பிடம்….
அம்மா…..உயிரின் மொழி….
அம்மா என்பவள் ஆராதிப்பிற்கு உரியவள்.
அன்னையர் அனைவருக்கும் அன்னையர்தின நல்வாழ்த்துகள்…..உரித்தாகட்டும்!!
அந்நாட்களில் தாயின் பெருமையைக் கூற ஒரு கதை சொல்வார்கள். கணவனை இழந்த தாய் ஒருவர், தன் ஒரே மகனை அரும்பாடுபட்டு, சீராட்டி வளர்த்தாராம். அந்த மகன் வளர்ந்து திருமணம் என்ற பந்தத்தில் இணைந்துகொண்டானாம். அவன் மனைவி அவனிடம் பாராமுகமாய் நடந்துகொள்ள,
அவனோ, தாங்கமுடியாமல், ‘ஏன் இப்படி நடந்துகொள்கிறாய், நான் என்னதான் செய்யவேண்டும் சொல்? என்றானாம்.
அதற்கு அவன் மனைவியோ, ‘எனக்கு உன் அம்மாவின் உயிர்தான் வேண்டும்’ என்றாளாம்.
இவன் துக்கத்தோடு வீட்டிற்குச் சென்று அமர்ந்திருக்க, அருகில் வந்த அவன் தாயோ, ‘என்னப்பா..ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்,?’ எனக்கேட்டாராம்.
மகன் சொன்னானாம், என் மனைவிக்கு உங்கள் உயிர் வேண்டுமாம் அம்மா, அப்போதுதான் அவள் சந்தோசமாக இருப்பாளாம்’
இந்த வார்த்தைகளைக் கேட்டதாய், ‘இதற்கா மகனே யோசிக்கிறாய், இதோ என் உயிரை எடுத்துச்சென்று உன் மனைவியிடம் கொடு, நீ சந்தோசமாக வாழவேண்டும், அதுதான் எனக்கு வேண்டும் என்றபடி தன் உயிரை மாய்த்துக்கொள்ள,
மகன் தாயின் இதயத்தை எடுத்துக்கொண்டு மனைவியிடம் ஓடுகிறபோது கல் தடுக்கிவிழுந்து விட்டானாம். அப்போது எகிறி விழுந்த தாயின் இருதயம், பதறிப்போய் கேட்டதாம், ‘மகனே அடிபட்டுவிட்டதா?’ என.
இது ஒரு கற்பனைக் கதையாக இருந்தாலும் இங்கு தாயின் மகத்துவம் எப்படி எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது பார்த்தீர்களா,
தாயன்பிற்கு நிகராக இந்த உலகத்தில் யாதொன்றும் கிடையாது. நிலவைக் காட்டி சோறு ஊட்டும் போதெல்லாம் தாய் தன் பிள்ளைக்கு கற்றுக் கொடுப்பது, ‘வானுயர நீ சிறக்கவேண்டும்’ என்பதைத்தான்.
அன்பு, அறம், தியாகம், மகத்துவம், உன்னதம் என அத்தனை வார்த்தைகளுக்கும் சொந்தமானவர் அம்மா. பத்து திங்கள் வயிற்றில் சுமப்பவள், ஈன்ற பொழுது முதல் மனதில் சுமக்கிறாள் தன் பிள்ளைகளை. தன் உதிரத்தைப் பாலாக்கி, அது சீரானதாக இருக்க தானே மருந்துண்டு, பிள்ளை வளரும் வரை அவள் தன் வாய்க்கு தானே கட்டுப் போட்டுவிடுகிறாள்.
ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்த கணத்தில் இருந்து தன் சுகதுக்கங்களை பெரிதுபடுத்தாமல் வாழ்வதென்பது அம்மாவிற்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.
பெற்றெடுத்த மகவுக்கு நோய் கண்டால் போதும், தான் ஊனுருக விழித்திருந்து தன் பிள்ளையின் பசிபோக்கி, பிணிபோக்கி திடமாக்கும் வரை ஓய்வதில்லை அன்னையவள்.
எந்த ஒரு மனிதனும் சரி, தாங்கமுடியாத வலியில் பெரும்பாலும் உச்சரிப்பதென்னவோ அம்மா….என்ற சொல்லைத்தான்.
அத்தனை நாளும் அன்னையின் மகத்துவத்திற்கான நாட்களே. இருப்பினும், உலகம் செதுக்கிவைத்த அழகான இந்தாளில் மனம்விட்டு தாயின் மகத்துவம் சொல்வோம்…..!!
கோபிகை.