எழுதியவர் –எம்.வஸீர். வாழைத்தோட்டம்.

நான்
சிறுவனாக இருந்தபோது
உங்களுக்கு
அப்படியொன்றும்
வயதில்லையே வாப்பா
மரணம்
உங்கள் முகவரியை
மாற்றி விட்டதே
எங்கள்
ஏழு உயிர்கள்
உங்கள்
ஒரு உயிரில்
வாழ்ந்து வந்தோம்
உங்கள் மரணம்
எங்கள் வயதையே
திக்கு முக்காட
வைத்தது.
எங்கள் எதிர்காலத்தை
சிறப்பாக அமைக்க
உங்கள் நிகழ்காலத்தின்
எத்தனையோ
சிறப்புக்களை
தவிர்த்துக் கொண்டீர்கள்.
எல்லா தந்தையர்களையும்
போல நீங்களும்
எங்களை கண்டித்தீர்கள்
ஒரு நாளும்
நீங்கள் எங்களை
தண்டித்தது இல்லை
எங்களுக்கு
நோய் வந்த போதெல்லாம்
நீங்கள் தான்
வேதனைப் பட்டிருக்கிறீர்கள்
எங்களை விட
கீழே விழுந்து
காயம் பட்ட போதெல்லாம்
உங்களுக்கு எப்படி
மருந்து போடுவது
என்று யோசிப்போம்
நீங்கள் எங்களுக்காக
பதறுவதைக் கண்டு
எங்களுக்கு
உடு துணிகள்
வாங்கும் போது
அளந்து அளந்து
வாங்குவீர்கள்
அதற்காக அளவின்றி
செலவு செய்தீர்கள்
நான் உங்களோடு
வாழ்ந்த காலம்
பதினைந்து ஆண்டுகள்
உங்கள்
மறைவுக்குப் பின்
ஐம்பது ஆண்டுகளில்
உங்களோடு வாழ்ந்த
அந்த நாட்களைப் போல
வாழவே இல்லை
வசந்தத்தைப் பற்றி
கேள்விப்பட்டிருக்கிறோம்
உங்களோடு
வாழ்ந்த காலத்தில்
அனுபவித்திருக்கிறோம்
என் கல்விக்காக
அதிகமாக செலவு செய்தீர்கள்
செலவு செய்ய
செலவு செய்ய
உங்கள் ஆயுளல்லவா
குறைந்து கொண்டு
வந்தது
நான்
தேர்வு எழுதும்
நேரத்தில்
நீங்கள் “Fail” ஆகி
போனீர்கள்
எனது பள்ளி வாழ்க்கையும்
திசை மாறிப் போனது
கல்வி
பாதியில் நின்றாலும்
இன்று
பல கவி மேடைகளில்
நிற்க வைத்திருக்கிறது
இதுவும்
உங்கள் முயற்சி தான்
இதை நான்
“மஹ்ஸரில்” வந்து
சொல்லவா
இல்லை இல்லை
நான்
சுவர்க்கத்திற்கு வந்தே
சொல்லுகிறேன்
இன்ஷா அல்லாஹ்
உங்களுக்கு
சுவர்க்கம் நிச்சயம்
என்றென்றும் உங்கள்
பிள்ளைகள் நாங்கள்
உங்களுக்காக தினமும்
பிரார்த்தித்துக் கொண்டே
இருக்கிறோம்.