எழுதியவர் – கா.ரஹ்மத்துல்லாஹ்…

உதவ மறுப்போரும்
வாழ்கிற தேசம்தான் இது.
ஆனால்
உழைக்க மறுப்போர்
தென்படாத தேசமிது…
உதவுதலையும்
உழைப்பாக்கியோர் உலாவும்
உன்னதம் இது…
உருவங்கள் வேறாயினும்
உள்ளங்கள் வேறாயினும்
கருப்பொருள் வேறாயினும்
காலங்கள் வேறாயினும்
உழைப்பென்னும்
ஒற்றைப் புள்ளியில்
ஓங்கி வளர்ந்த தேசமிது…
உழைத்துக் களைத்துக்
கண்கள் மூடுவதைச் சிறிது
காலம் ஒத்தி வையுங்கள்…
உழைப்பை உறிஞ்சும்
மனித வடிவமெடுத்தச் சில
கோர மிருகங்களும்
இங்குதான் பரவியுள்ளன…
வயிற்றுக்கு
உழைத்த நேரம்போக
வாழ்வுக்கு உழைக்கவும்
நேரம் ஒதுக்குவோம்…
போகட்டுமென்று
முடிவொன்று எடுத்தால்
வயிற்றுக்கான நேரத்தையும்
விழுங்கிக் கொள்ளும்
விஷம் நிரப்பி வைத்திருக்கிறது
அது…
உழைப்பில் கொஞ்சமும்
உறக்கத்தில் கொஞ்சமும்
விடுதலைக்கென
எடுத்து வையுங்கள்…
உழைத்து உழைத்தே
மண்ணை உயர்த்தியவர் நாம்.
அதை உடைக்கும்
முயற்சியில் அயர்வுற்றாலும்
துயருறும் தோல்வியடைய மாட்டோம்…
உழைப்பை
மட்டும் இழந்துவிடாதீர்.
உழைப்பதற்கு மட்டும்
மறந்துவிடாதீர்…