
இன்று அதிகரித்துள்ள நவநாகரீக போக்கு பற்றி இங்கு கூற விரும்புகிறேன். பேஸ்புக் விருந்து என்ற பெயரில் ஆண்களும் பெண்களுமாக இணைந்து போடுகின்ற ஆட்டம், பாட்டு கொண்டாட்டமானது அளவற்றதாக உயர்ந்து செல்கின்றது.
மிகப்பெரிய உணவகங்களில் இந்த விருந்து உபசரிப்புகள் தாராளமாக நடந்தேறுகின்றன. போதைப்பொருள் பாவனை இங்கு காணப்படுவதாகவும் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகளைப் பார்க்கின்றோம். இந்த உபசரிப்புகளில் நல்ல தமிழ் உணவுகளைத் தவிர்த்து பிட்சா, பர்கர் என்று உடலுக்கு ஊறு விளைவிக்கும் உணவுகளும் பரிமாறப்படுகின்றன.
நடனம் வேறு. அதாவது எந்த ஒரு ஆணும் எந்த ஒரு பெண்ணுடனும் சேர்ந்து ஆடலாம்.
இந்த நிகழ்வுகளின் போது இவர்களின் ஆடை பற்றி சொல்வதற்கே இல்லை.
நாளைய தேசம் நம் கையில் என்று சொல்லிப் பெருமை கொள்ளும் இவர்கள் இப்படி தடம் மாறி செல்வதை யாரும் கண்டு கொள்வதாகவும் தெரியவில்லை.
அப்படியே யாரேனும் கூறினால் உடனடி பதில் என்ன என்றால்… இதெல்லாம் GENERATION GAP… அதாவது, தலைமுறை இடைவெளி.
எத்தனை தலைமுறை போனாலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் பண்பாடு மாறாது.
ஆணுக்கு பெண் சரிநிகர் சமானமாய் வாழ்வோம் என்று பாரதி அன்று சொன்னதை யாரும் இன்று மறுக்கவில்லை, மறக்கவும் இல்லை. ஆனால்..அதன் அர்த்தத்தை தவறாக பொருள்கொண்டு இன்றைய இளைய சமூகம் நடந்துகொள்வது வேதனை தரும் ஒன்று.
இப்படி செலவு செய்யும் பணத்தை உங்கள் குடும்பத்திற்கோ அல்லது இந்தச் சமுதாயத்திற்கோ பயனுள்ள வழியில் செலவிடுங்கள்.
நாகரீகம் என்ற பெயரில் நாசமாகிவிடாமல் உங்கள் எதிர்காலம் குறித்து அக்கறையோடு செயற்படுங்கள்…இளைஞர் யுவதிகளே!!