எழுதியவர் – சசிகலா திருமால்

நாளை விடியலும்
நம் சொல் கேட்கும் என்ற நம்பிக்கையில்தான்
உயிர்த்தெழுகிறது இன்றைய இரவும்…
அப்படியிருக்க…
கடவுளைக் குட்டுவதற்கோ திட்டுவதற்கோ
சொற்கள் தேடி தொலைய
விரும்பவில்லை நான்…
கடவுள் நிசப்தமாய் புன்னகைக்கிறார்
அப்பூவிதழ் புன்னகைக் கண்டு
குழம்பித் தவிக்கிறது இப்பிரபஞ்சம்….
அப்புன்னகையின் ஆழ்ந்த அர்த்தம்
எதுவென்றறிய முடியாமல்
வெறித்துக் கொண்டிருக்கிறது…
ஒரு மழலையின் அழுகையை
வேடிக்கை பார்ப்பது போல
ஓர் இலை உதிர்தலை கவனிப்பது போல
காற்றில் நகரும் சருகை கண்ணிமைக்காமல் காண்பது போல…
சலனமற்றக் குளத்து நீரை
உற்று நோக்குவதை போல
யாருமற்ற கடற்கரையில்
கால் நனைத்துச் செல்லும்
அலைகளை பார்ப்பது போல…
கொரோனாவின் கோரப்பிடியில்
தானும் தனிமைப்படுத்தப்பட்டதை உணர்ந்த கடவுள்….
பரிதவித்துக் கொண்டிருக்கிறான்
கையறுநிலையில்…
பக்தனை காப்பாற்றும்
கடவுச்சொல் மறந்து….