எழுதியவர் -பொள்ளாச்சிமுருகானந்தம்.

அர்த்த சாமத்தில்
கெட்ட கனவில் நல்லதாகவே நடந்தால்
கெட்டதாக நடக்குமென
எங்க ஆத்தாகிழவி
நிறைய சொல்லியிருக்கிறது…..
இந்த அதிகாலை
போன வருடம் பிரிந்து போன
ஆத்தா பெரும் ஞாபகத்திற்குள்
நுழைந்து கிடந்தது……
மிதமிஞ்சிய உறுத்தல்……….
வீட்டுக் கொல்லையில்
பதியம் போட்ட
முல்லைப்பூச்செடியை போய் பார்த்தேன்……
நெடுநேர இரவில்
மகளுக்காய் செய்து வைத்த
அட்டை வீட்டைப் போய்பார்த்தேன்……
ப்ரிட்ஜில் இருக்கும்
பழுத்த முலாம் பழத்தைப்போய் பார்த்தேன்……
வடக்கு வாசலில்
கட்டி வைத்திருக்கும்
நாய்குட்டியைப் போய் பார்த்தேன்……….
மாடியில் காயப்போட்டிருக்கும்
பழைய சோறு வடகத்தைப் போய்பார்த்தேன்…..
எதிர்வீட்டு பக்கத்து வீட்டு
எல்லா அருகாமையையும்
ஒரு எட்டு நலம் விசாரித்து வந்தேன்……
ஆன் லைன் தேர்வுக்கு
இரவு முழுக்க தேடிக்கொண்டிருக்கும்
மகன் யஷ்வந்துக்கு
ஒரு முத்தம் கொடுத்தேன்…….
நாலு தெரு தள்ளியிருக்கும்
என் அம்மாவிற்கு காரணமில்லாமல்
ஒரு போன் போட்டு உளறினேன்…………..
என் சுவாசத்தின் பெரும்பகுதியாய் இருக்கும்
அவளைக் கொஞ்சம்
சுவாசித்துப் பார்த்தேன்……………
இன்னும் போய்பார்க்காத-
கொரனா தொற்று தீண்டிய
என் தோழி புவனாவின் அம்மாவை
அவசரமாய் நினைத்துப் பார்த்தேன்………
ப்ச்………………
ஒட்டுமொத்தமாய்
அத்தனை பேருக்கும்
ஒரு பிரார்த்தனை செய்து-
அந்த கனவை முடித்து வைத்தேன்……………