எழுதியவர்- சுப்ரமணியம் ஜெயச்சந்திரன்.

எழுபத்தொன்பதாம் நாள்
” கண்ணொடு கண்ணினை நோக்கு ஒக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல”
அகிலத்தின் நிஜ அவலங்கள்
அகவெளியில் பாரதியின்
‘ தனிமை இரக்கத்’தின்
துயர் வாழ்வை நினைவுறுத்திய படியே
நிற்க…..
வித்தியாலயத்தின் முகவாயில் தெரிய
உட்புகுந்தேன்.
என்னை எவரும் வரவேற்கவில்லை
என்றே புலப்பாடு தோன்றிற்று.
அதிபர் முகக்கவசம்
ஆசிரியர்களின் முகத்திலும் முழுக் கவசம்
ஆதியாள் பிள்ளைகள் முகத்திலும்
முழுதாய் அதுவே…
அவர்களில் பலர்
என்னை மனதால் வரவேற்றிருப்பார்கள்
சிலர் மனதால் திட்டி வரவேற்றிருப்பார்கள்
வேறு சிலர்
மனதால் வார்த்தையால் நோக்கால்
திட்டியே தீர்த்திருப்பார்கள்.
பாடைக்குத் தீ மூட்ட முடியாமல்
சுவாசத்திற்குப் பிராணவாயு இல்லாமல்
மனித வாழ்வே போயிடுமோ என
ஏங்கி நிற்க…
இவனுகளுக்கு
அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சி அறிக்கை
வகுப்புப் பாடப் பதிவுப் புத்தகம்
வாரமே இல்லாதிருக்க வாரமிடல்
வகுப்பறையில் காட்சிப்படுத்தல்…
என
அழிவானுகள்….
வந்திட்டாங்கள்..
எல்லாமே
மௌனமாய்
காற்றின் மொழியாய்
என்னுள்ளே தெறித்தது.
இழிசெயல் எனினும்
எள்ளி நகையாடும் மொழியெனினும்
கணக்கிடல் தத்துவத்தை நினைத்து
உள் நகர்ந்தேன்.
உயிராய் உறவாய்
காதலாய் சிருங்காரமாய்
அது என்னை வாவென்றது.
இராமனை அயோத்தி வரவேற்றது போல்
என்னுள் உணர்வு.
மங்களகரமாய்
மங்கலமாய்
மஞ்சல் உடுத்தி
வாயில் செவ்வாயாய்
என்னை வாவென்றது
வாசலின் ஓரத்தில் இருந்து.
ஓராயிரம் வினாவுக்கான விடை
அந்த ஒன்றில் தெரிந்தது.
நானே உன் உயிர்
நானே உன் பிராணன்
நீ தானே
என்னை மறந்து
பன்னெடுங் காலமாயிற்றே.
என்று மீளவும் என்னை
எக்காளமாய் வாவென்று
அழகாய்ச் சிரித்தது
அந்தச் செவ்வரத்தம் மலர்.