எழுதியவர் -டினோஜா நவரட்ணராஜா

கல்வி என்பது ஒரு வாழ்க்கைக்கான செயல் என்றே கருதப்படுகிறது. ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுடைய வாழ்வியலில் சமூகத்திற்குள் இசைவாக்கம் அடைந்து சமூகத்துடன் சேர்ந்து வாழவும் தன் சுற்றத்திற்கு தான் நன்மை பயப்பவனாகவும் தன்னை தானே தயார் செய்து கற்றலை கல்வி எனலாம். வெறும் நூற் கல்வியை மட்டும் சிறந்த கல்வி எனக் கொள்ளலாகாது. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்பவனாகவே இருக்கின்றான். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும் சகபாடிகளிடம் இருந்தும் சமூகச் சூழல் மற்றும் பண்டிகைகள் என ஒவ்வொரு அம்சங்களில் இருந்தும் கற்றல் தொடங்குகிறது.
பாடசாலையிலோ அல்லது வீட்டிலோ ஒரு குழந்தைக்கான சிறந்த கற்றலிற்கான இடம் அமைதல் அவசியம். உதாரணமாகக் கூறின் ஒரு குழந்தை சுவரில் அல்லது வெறும் தாள்களிலும் கண்டபடி கிறுக்குதலை அனுமதிக்கும் போது அக்குழந்தை இலகுவாக எழுத்தினை கற்றுக் கொள்ள இயலும். அதேவேளை குறித்த தயார் நிலையை அடைய முன்னரே நேரடியாக ஆரம்பிக்கும் முன்னரே நேரடியாக எழுத்தினை திணித்தல் பாக்க விளைவையே தரும். அதேவேளை அக்குழந்தைக்கான இடைவெளியை தரவேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையான அனுபவக்கற்றலை சந்திப்பவரே. அதுவே ஒவ்வொருவருடைய வாழ்வியலுக்கும் அடித்தளமாக அமையும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு ஒவ்வொரு குழந்தைகளும் தமக்கென தனித்தனி ஆளுமைவிருத்தி இயல்புகள் வாய்க்கப்பெற்றவை. அவ்வியல்புகள் அனுபவக்கற்லூடாகவோ நூற்கற்றலூடாகவோ வெளிவரக்கூடியன. ஆனால் இவ்வியல்புகள் சுயமாக வெளிவரும் பட்சத்தில் தான் அது நன்மை பயப்பனவாக அமையும்.
ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்ததும் வயதுக்கேற்ற ஆளுமை விருத்தி பண்புகள் இயல்பாக அமையும். அவ்வேளையில் அதற்கான சூழலியல் காரணிகளை குழந்தை பெறுதல் அவசியமாகும். விரிவாக கூறினால் மரபியல் ரீதியான நிகழ்ச்சித் திட்டத்தின் படி நடத்தையில் ஏற்படுகின்ற மாற்றங்களை முதிர்ச்சி என்பர். சூழலின் தாக்கங்கள் இல்லாது வயது செல்லச் செல்ல சுதந்திரமாக அவயங்களில் மாற்றங்கள் விரும்பியோ விரும்பாமலோ அறிந்தோ அறியாமலோ புதிய இயல்புகளிற்குள் குழந்தை உந்தப்படும். உதாரணமாக நடத்தல் திறன் விருத்தியை குறிப்பிடமுடியும். இதேபோலவே கற்றலானது பிள்ளை குறிப்பிட்ட வயதை எழுதிய பின்னரோ அல்லது முதலோ தனது உடலுள தயார் நிலைக்கேற்ப தனது திறன்களை வளர்த்துக் கொள்ள முயலும்.
இதேவேளை கற்றலானது ஒரு பிள்ளை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் ஆயத்த நிலையில் இருக்கும்போது மட்டுமே வழங்கப்பட வேண்டும். உடல் முதிர்ச்சி அடையாமலும் உளரீதியான தயார்படுத்தல்கள் இல்லாமலும் ஒரு குழந்தைக்கு கற்றல் கற்பித்தலை திணிப்பது எதிர்மறையான விளைவுகளை வழிகோலும். அத்தோடு குறிப்பிட்ட வயதை அடையும் முன்னரே ஒரு குழந்தை கற்றலிற்கோ அல்லது பிற ஆளுமை தொடர்பான பயிற்சிகளை பெறுவதற்கோ தயார் நிலையில் இருக்கும் பட்சத்தில் பயிற்சிகளை வழங்குதல் நன்று.
உதாரணமாக நோக்கின் குழந்தை தயார் நிலையில் இருந்தும் அதற்கான கற்றல் வழிகள் கிடைக்காத போது அக்குழந்தை குறிப்பிட்ட விடயம் தொடர்பான விரக்தி நிலைக்கு தள்ளப்படும். அதேவேளை குறிப்பிட்ட முதிர்ச்சியை கடந்து காலம் கடந்தபின் வழங்கப்படும் கற்றல் கற்பித்தலும் பின்னடைவான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆக குறித்த காலத்தில் குழந்தையுடைய உடல் உள ஏற்பு நிலையை அறிந்து அதற்கேற்ற அணுகுமுறையை கையாளுதல் நன்று. இவ்வாறான நிலை மாற்றம் அடையும்போது அதை எதிர்மறையாக குறிப்பிட்ட குழந்தையில் தாக்கம் செலுத்துகிறது.
அதாவது குறித்த பாடம் அல்லது திறன்கள் மீது வெறுப்பு, ஆசிரியர் மற்றும் மாணவர் இடையிலான ஆரோக்கியமற்ற தொடர்பு. பெற்றோருடனான மனக்கசப்புகள். வகுப்பறைச் சூழல் தொடர்பான விரக்தி. ஒத்த வயதுக்குழுவினருடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் சமூகமயமாக்கல் இடர்பாடுகள் போன்ற விளைவுகளுக்கு வாய்ப்புண்டு. குழந்தைகளுக்கான கற்றல் கற்பித்தலை அவர்களை புகுவதற்கு முன் நேரம் அவர்கள் இத்தகைய நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிதல் இன்றியமையாதது.
உதாரணமாக கூறின் ஒரு குழந்தை எட்டாவது மாதம் தான் நடக்க ஆரம்பிக்கும் எனினும் பெற்றோர் தமது அபிலாசை காரணமாக ஐந்து மாதத்திலேயே நடத்தலிற்கான பயிற்சி அளிக்கும்போது உரிய பலன் கிட்டாது. அதேநேரம் குழந்தை நடக்க எத்தனிக்கும் போது அதனை தடுப்பதும் அதற்கான இடைவெளியை மறுத்தலும் நன்றல்ல. அத்தோடு குழந்தைக்கான கற்றல் கற்பித்தலில் குழந்தை தானாக முன்வரக்கூடிய நிலைக்கான சூழலை வழங்குதல் சிறந்தது. இவை தவிர குழந்தைக்கான திறமை ஒன்றாக இருக்க இன்னொரு திறனை கற்றுக் கொள்ளும் படிக்கு குழந்தையை நிர்ப்பந்தத்தில் தவறு. இவ்வாறான சூழ்நிலையில் குழந்தை தனக்கான அங்கீகாரத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல் தன் மீதான தாழ்வு மனப்பான்மைக்கும் தன்னம்பிக்கையற்ற நிலைக்கும் தன்னைத்தானே பொருத்திக்கொள்கிறது.
இவ்வாறாக காலத்திற்கு முந்திய மற்றும் பிந்திய கற்றல் பயிற்சிகள் தீங்கு விளைவிக்கக்கூடிய திருப்தியற்ற விளைவைத் தரும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்காக குழந்தையின் நடத்தை மற்றும் அறிவுசார் விருத்திகளை அவதானித்தல் முக்கியமானது. அத்தோடு பிறழ்வான நடத்தைகளிற்கு இவ்வாறான தவறான அணுகுமுறைகளே காரணமாகுகின்றன. பொருத்தமான வயதில் பிள்ளைகளுக்கான மனக்கட்டுப்பாடு பயிற்சி வழங்கல் மிகவும் அவசியம். இல்லையெனில் உடலில் குறைபாடுகள் இல்லாவிடிலும் கூட மன இறுக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.
மன இறுக்க நிலை ஏற்படும்போது திறமை உள்ள மாணவர்களும் தம்மை வெளிப்படுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
தூண்டுதலுக்கான முறையான துலங்கல்களை வெளிப்படுத்தவும் தயங்குவர். பெற்றோர் மட்டுமன்றி பாடசாலை ஆசிரியர்களும் இது தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்துதல் அவசியம். ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இடையிலான தொடர்புகள் பெரிதும் குறிப்பிட்ட குழந்தையின் ஆளுமை விருத்தியில் பெரிதும் பங்கெடுக்கின்றன. ஒரு குறிப்பிட்ட துறை தொடர்பில் குழந்தைக்கு நாட்டம் இருந்த போதிலும் ஆசிரியர் அது தொடர்பான தவறான பின்னூட்டத்தை அறிந்தோ அறியாமலோ கொடுக்கும் சந்தர்ப்பத்தில் அது குழந்தையை வெகுவாக பாதிக்கும்.
ஆக ஒவ்வொரு ஆசிரியர்களாக இருக்கட்டும் பெற்றோர்களாக இருக்கட்டும் சமூக பொருளாதார காரணிகளும் தனிப்பட்ட ஆளுமையில் பெரிதும் செல்வாக்கு செலுத்தும் என்பதை அறிந்து கொள்வதோடுவதோடு காலத்திற்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கும் தகுந்தவாறு குழந்தைகளுக்கான கற்றல் கற்பித்தல் சூழலை அமைத்துக் கொடுத்தலானது சமூகத்திற்கு பயன்மிக்க பிரஜையாக வளர ஏதுவாக அமையும். குழந்தைகளை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற வழிகளை முன்னெடுப்பதில் முயற்சிப்போம்.