எழுதியவர் – தமிழ்செல்வன்

சுளீர் என்று சாட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்டான் ஒரு சிறுவன். அவனுக்கு 12 வயது இருக்கக்கூடும். அப்போது எனக்கும் அதே வயதுதான்,
அது ஒரு ஞாயிற்று கிழமை . அப்பாவும் நானும் வீட்டு வாசலில் உட்கார்ந்து தேநீர் குடித்துக்கொண்டிருந்தோம். அப்பா ஆங்கில தினசரியும் நான் வீட்டுப்பாடமும் படித்துக்கொண்டிருந்தோம்.
” சுண்டல் சாப்பிடுங்க ” என்று அம்மா 2 கிண்ணத்தில் சுண்டல் வைத்துச் சென்றார்கள்.
” எனக்கு சுண்டல் பிடிக்காதுமா ” என்றேன் .
” சாப்பிடு ,எவ்வளவு டேஸ்ட்டா இருக்கு ” என்றார் அப்பா .
.
அப்போது தான் ஒரு சிறுவன் எங்கள் வீட்டின் கேட் அருகே நின்று சவுக்கு கொண்டு தன்னைத்தானே அடித்துக்கொள்வதை பார்த்தேன். அதற்கு முன்பு பெரியவர்கள் சவுக்கால் அடித்து பிச்சை எடுப்பதை பார்த்திருக்கிறேன் . ஒரு சிறுவன் செய்வது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது .
அவன் சட்டை அணியவில்லை . முழங்கால் தொடும் வேட்டி உடுத்தி இருந்தான் .உடலில் சாட்டையால் அடித்துக்கொண்ட தடங்கள் இருந்தன.
அப்பா என்னிடம் 50 காசு கொடுத்து போடச்சொன்னார் .
அது 10 காசு ,20 காசு ,25 காசு எல்லாம் புழக்கத்தில் இருந்த காலம். 50 காசுகளை பிச்சைக்காரர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச்செல்வார்கள்.
அவன் இரும்பு கேட்டிற்கு வெளியே நின்று சாட்டையால் அடித்து காத்துக்கொண்டிருந்தான். நான் 50 காசை அந்த சிறுவனிடம் கொடுத்தபோது வேண்டாம் என்றான்.
”காசு வேண்டாம் , சுண்டல் வேணும் ”
” என்னோட சுண்டல் குடுக்கவா ” அப்பாவிடம் கேட்டேன் . அப்பா தலை ஆட்டினார்.
கேட்டை திறந்து என் சுண்டலை கிண்ணத்துடன் கொடுத்தேன். அவனிடம் வேறு பாத்திரம் இல்லையே எப்படி கொண்டுசெல்வான் என்று யோசித்தேன் .
அவன் இரண்டு கைகளை ஏந்தி சுண்டலை வாங்கிக்கொண்டான். கைகளை ஊதிக்கொண்டான். சுட்டிருக்கக்கூடும் .
அங்கேயே உட்கார்ந்து ஒவ்வொன்றாக ருசித்து சாப்பிட்டான்.
பின்பு மகிழ்ச்சியுடன் எழுந்து சாட்டையை உதறி சத்தம் எழுப்பினான்
அந்த சத்தத்திற்கு ” நன்றிங்க , போய்ட்டு வரேன் ” என்று அர்த்தம் இருக்கக்கூடும் .
”காசு வாங்கிக்கோ , அவன் கிட்ட காசு கொடுடா ” என்றார் அப்பா.
காசு கொடுத்தேன் , வாங்கிக்கொண்டு வேட்டியின் மடிப்பில் போட்டுக்கொண்டான்.
மீண்டும் சாட்டை எடுத்து என்னைப் பார்த்துக்கொண்டே முகத்தில் சலனம் இன்றி தன்னைத்தானே அடித்துக்கொண்டான். சுளீர் என்று கேட்டது . அங்கிருந்து நகர்ந்து அடுத்த வீட்டிற்கு சென்றான். மீண்டும் சுளீர் கேட்டது.
”’ அவனுக்கு வலிக்காதாப்பா ” அப்பாவிடம் கேட்டேன்.
” பழகி இருக்கும் ” என்றார் .
”அவன் ஏன் சுண்டல் கேட்டு வாங்கி சாப்பிட்டான் ”
”அவனுக்கு சுண்டல் ரொம்ப பிடிக்கும் போல இருக்கு. அவனுக்கு வீட்ல யாரும் செஞ்சு கொடுத்திருக்க மாட்டாங்க ”
மீண்டும் அவன் அடித்துக்கொள்ளும் காட்சியை யோசித்துப்பார்த்தேன் .அப்போது அவன் மனதில் என்ன நினைத்திருப்பான் .
உலகமே சேர்ந்து அவனை அடிப்பதாக நினைத்துக்கொண்டு அடித்திருக்கக்கூடும் .
அல்லது அந்த அடி உலகத்திற்கு விழுவதாக நினைத்துக்கொண்டு அடித்திருக்கக்கூடும் .
[முற்றும் ]