எழுதியவர் – கா.ரஹ்மத்துல்லாஹ்…

-உங்க பேர் என்னம்மா?
–மீனாட்சி
–உங்களுக்கு என்ன வேணும்?
–எப்பவும் நீங்க ஸ்கூல் வரும்போது நான்தான் வாசல் கதவத் திறந்துவிடுவேன்.இன்னிக்கு நான் வர லேட்டாயிருச்சு.
உங்களப் பாக்க முடியல. உங்க முகத்தைப் பார்த்துட்டுப்
போலாம்னு வந்தேன்.
காயத்ரிக்கு வியப்பாக இருந்தது. பள்ளி வளாகத்தைக்
கூட்டிப் பெருக்குபவள்.அவள் சொன்னது மாதிரி
தினமும் நுழைவாயிலில் அவள்தான் கதவைத் திறந்துவிடுவாள்.
அது சாதாரணம் என்றுதான் நினைத்திருந்தாள்.ஆனால்
தன் முகத்தைப் பார்ப்பதற்காகத்தான் அன்றாடம் அந்தப்
பணியைச் செய்கிறாள் என்பது பல கேள்விகளைத் தோற்றுவித்தது.
மதிய உணவு வேளையில் சந்திப்பதாகச் சொல்லி கனிவு
நிறைந்த முகத்தோடு அனுப்பி வைத்தாள்.
நாற்காலியில் அமர்ந்திருந்த போதும் மீனாட்சி குழந்தைத்
தனத்தோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
–தாயி உங்க முகத்தைப் பார்த்தாப் போதும்னு இருந்தேன்.
உங்க கையால சாப்பாடு வாங்கிக் குடுப்பீங்கனு நான்
நெனச்சே பாக்கல.ரொம்ப சந்தோசமா இருக்குது.
–மீனாட்சிமா என் முகத்துல அப்படி என்ன இருக்கு?
இதப் பாக்கவா தினமும் கதவு திறந்துவிட்டீங்க?
–அதெல்லாம் தெரியாதுமா. எனக்கு கண்ணாடி பாக்கனும்னு
தோணும்போதெல்லாம் உங்களப் பாக்கனும்னு நெனப்பேன்.
நீங்க எவ்ளோ பெரிய டீச்சர்.?நெனச்சப்போ எல்லாம்
பாக்கமுடியுமா? அதான் காலையில மட்டுமாச்சும் பாத்துக்கறேன்.
மீனாட்சியின் பதில்கள் எல்லாமும் காயத்ரிக்குத்
தூக்கிவாரிப் போடுவதாயிருந்தது.அவளின் தோற்றத்திற்கும்
அவள் பேச்சிற்கும் மிகப்பெரிய முரண்பாடு இருந்தது.
அவளைப் பற்றி அவளால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.
நேரடியாகவே கேட்டுவிட முடிவு செய்தாள்.
–உங்களை ஏம்மா எல்லாரும் பைத்தியம்னு சொல்றாங்க?…தப்பா எடுத்துக்காதீங்க.
உங்களைப் பார்த்தா எனக்கு அப்படித் தோணலை.
–அதுவாம்மா…நடக்கற ரோட்ல எங்க குப்பையிருந்தாலும்
எடுத்து குப்பைத்தொட்டியில போட்ருவேன்.நாயி பூனை இப்படி
எது செத்துக்கெடந்தாலும் எடுத்துப் பொதைச்சிட்டு
அந்த எடத்தச் சுத்தம் பண்ணிடுவேன்.அதனாலதான் அப்படி
கூப்பிட்றாங்க.
காயத்ரி வாயில் வைத்த உணவை விழுங்க மறந்திருந்தாள்.இப்படிப் பட்டவளையா பைத்தியம்
என்கின்றனர் இந்த மனிதர்கள்?
–நீங்க இதை எவ்ளே நாளாச் செய்றீங்க?
–நீங்க கொழந்தையா இருக்கும்போதுல இருந்து.
–என்ன? ஆச்சர்யத்தில் சாப்பிடுவதையும் மறந்து
எழுந்துவிட்டாள்.
–ஆமா தாயி…நீங்க சின்னப்புள்ளையா இருக்கையில
உங்க அப்பா கையப் புடிச்சிக்கிட்டு ஸ்கூல் போவீங்க
அப்பலாம் நீங்க மிட்டாய் சாப்பிட்டு அந்தக் காயிதத்த உங்க
பேக்குலயே வச்சுப்பீங்க.அப்பவே உங்க மனசு சுத்தந்தாயி.
அப்படி உங்களப் பார்த்ததுல இருந்தே நான் ஊரச் சுத்தம் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.அப்ப இருந்தே நான் பைத்தியமாயிட்டேன்.
அதிர்ச்சியில் கண்களில் நீர் துளிர்த்தது. மனம் கசிந்தது.
என்ன அறிந்த,நான் சந்திக்காத ஒருத்தியா?
குப்பையிடும் பைத்தியங்கள்தான் இவளைப் பைத்தியம்
என்கின்றனர்.
யாருடைய இகழ்ச்சிக்கும் சரியாதது அவளுக்கென்று இருக்கும் ஒரு மனம்.சத்தியமாய் அது எனக்கானது.
என்னுடைய மனம் அவளுக்கானது.
–தாயி கைய எங்க கழுவறது.?அச்சச்சோ நீங்க இன்னும்
சாப்பிடவே இல்லையா? மணியடிச்சுருவாங்கமா…
மீனாட்சியின் வார்த்தைகள் எதுவும் காயத்ரிக்கு இப்போது
கேட்கவில்லை…
முற்றும்.