எழுதியவர் -கா.ரஹ்மத்துல்லாஹ்…

இந்த வீட்டுக்கு நானும் மருமகளாத்தான
வந்துருக்கேன். ஒரு வார்த்தக் கூடப்பேச எனக்கு உரிமையில்லையா?
–அத உம்புருசங்கிட்ட பேசிக்கடி.எங்கிட்ட ஏன் பேசற
–எம்புருசன் என்ன இருபத்துநாலு மணிநேரமும்
எங்கூடவா இருக்காரு.வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரமும்
உங்க பேச்சக் கேட்டுத்தான ஆடறாரு.தாலிய அவரு
கட்டிட்டு உங்ககிட்ட கத்திச்சாவுன்னுதான வீட்ல விட்டுட்டு
போறாரு அந்த மனுசன்.
–எது?எம்பேச்சக் கேட்கறானா?விடிஞ்சு வெளிய வந்தா
என்ன விரோதி மாதிரி பாக்கறான்.விடிய விடிய
என்னத்தச் சொல்லிக்குடுத்தியோ
–புதுசா என்னத்த சொல்லிக்குடுக்கப் போறேன்.
நீங்க உங்க புருசனுக்கு என்னச் சொல்லிக்குடுத்தீங்களோ
அதத்தான் நானுஞ்சொல்லிக் குடுக்கறேன்.
இப்படியாக நீண்டுகொண்டிருந்த மாமியார் மருமகள் சண்டை
சற்று நேரத்திற்குப் பிறகு கொட்டித்தீர்த்த மழையாய்
ஓய்ந்து போனது.இத்தனையையும் அண்டை வீட்டிலிருந்தபடி
சோமசுந்தரும் அவரது மனைவி கயல்விழியும் கேட்டுக்கொண்டே
அவர்களது வேலையில் குறியாயிருந்தனர்.மாதத்தில் ஓரிரு
வாரங்கள் இது வழக்கமென்பதால்
அவர்களுக்கது இயல்பாகிப் போயிருந்தது.
சிறது நேரத்தில் அழுது வீங்கிய முகத்தோடு மருமகள்
மலர் அங்கு வந்தாள்.
–அக்கா கொஞ்சம் தயிர் கொடுங்கக்கா.
பால் காய்ச்சிட்டுப் பாக்கறேன்.ஓறைக்கு ஊத்த தயிர் இல்ல.
–ஏன்டி…பச்ச ஒடம்ப வச்சிக்கிட்டு தயிர் ஊத்திச்
சாப்பிட்றயா?கொழந்தைக்கு எதுவும் ஆகாது?
உண்மையானக் கரிசனத்தோடு கேட்டாள் கயல்விழி.
–எனக்கில்லக்கா…எங்க அத்தைக்கு. அது தெனமும்
தயிரில்லாமச் சாப்பிடாது.என்ன ருசியா கொழம்பு வச்சிருந்தாலும் கடைசியா தயிர் ஊத்திச் சாப்புடும்.
–உங்களுக்கு இதே பொழப்பாப் போச்சுடி.குடுமிப்பிடிச்சு
சண்ட போடவேண்டியது.அப்பறும் வந்து அக்கறை காட்ட வேண்டியது. மெல்லிய நகைப்போடு குத்திக்காட்டினாள்.
சோமசுந்தரம் இடைப்புகுந்து சொன்னார்.
–கயலு…அதெல்லாம் அப்படித்தான். நீ பேசாமக் குடுத்துவிடு
பதிலேதும் பேசவில்லை.சமையலறைக்குள் சென்று
ஒரு சில்வர் டம்ளரில் தயிர் எடுத்துவந்து கொடுத்தாள்.
–டம்ளர் அப்பறந் தர்றேங்க்கா” என்று எழுந்து
வீடுநோக்கி நடந்தாள்.இவள் வாசலுக்குள் நுழையும் சமயம்
மாமியார் திலகவதி வெளியில் வந்துகொண்டிருந்தாள்.
எதிரெராய் முகம் பார்க்க விரும்பவில்லை.
விருட்டென்று உள்ளே போய்விட்டாள் மலர்.
கயல்விழி சோமசுந்தரத்தை மெதுவானக் குரலில் அழைத்துச்
சொன்னாள்.
–இந்தாங்க…மருமக இப்பதான் வந்துட்டுப் போறா.
பின்னாடியே மாமியார் வருது.
–அதுவந்து மட்டும் என்ன சொல்லப்போகுது?
நீ பேசாம அது சொல்றத மட்டும் கேளு.எதுவும் நீ புத்தி
சொல்லிக்கிட்டு இருக்காத.
மனைவியின் ஆர்வக்கோளாறை உணர்ந்து அதைக்
கட்டுப்படுத்தினார்.
–கயலு…நான் குடுத்து வச்ச காசுல ஒரு முவ்வாயிரம் குடுக்கறயா?
–தர்றேன் திலகா.திடீர்னு முவ்வாயிரத்துக்கு என்ன செலவாம்?
–இவ ஒருத்தி…அவங்களுக்கு ஆயிரம் செலவு இருக்கும்.
அதையெல்லாஞ் சொன்னாத்தான் குடுப்பியா என்ன?
எடுத்துக் குடுத்துவிடும்மா…
திலகாவின் பதில் வரும் முன்னே சோமசுந்தரம் சற்று
சத்தமான குரலில் கயல்வழியிடம் பதிலளித்தார்.
உடனே லேசாகப் பதறிய திலகவதி
–ஐயோ…அதனால என்னங்க..கேட்டாத்தான்
நாஞ் சொல்லுவனா?உங்களுக்குத் தெரியாம
என்ன செய்யப்போறேன்?
இந்த…மலரு ரூம்ல பேன் சரியா ஓடமாட்டேங்குது.
மெக்கானிக் வந்து பாத்துட்டு ரொம்ப பழசாயிடுச்சு.
ஏற்கனவே நெறையத் தடவை சரிபண்ணியாச்சு.
இனி இது ஆகாது. புதுசு வாங்கி மாட்டுங்கனு சொன்னான்.
அதுக்குத்தான். என்றாள்.
–உம் பையன்கிட்டச் சொன்னா வாங்கி மாட்டப்போறான்.
நீயா அலையப் போற?
–யாரு எம் பையனா? நீ வேற கயலு.அவனுக்கு
வீட்டுக்கு எதாவது செய்யனும்னா சாகறேங்கறான்.
அம்மாவும் புள்ளையும் கொசுக்கடியில தூங்கவே மாட்டேங்குதுங்க.இவனுக்கு எப்படித்தான் தூக்கம் வருதோ.
அவன நம்பி வேலைக்காகாது.அதான் நானே
போலானு இருக்கேன்.பச்சக் கொழந்த ஒடம்புல எப்படித்
தடிச்சுக் கெடக்குது.அவளும் சொல்லிச் சொல்லி சடைஞ்சு போயிட்டா.
–மருமக மேல இப்பதா அக்கறை போல…என்று தொடங்கிய
கயல்விழியை நிறுத்தினார் சோமசுந்தரம்
–கயலூ…..
–இந்தா எடுத்துட்டு வர்றேங்க. என்று எடுத்து வந்து கொடுத்தாள்.
திலகவதி போனபின்
–கயலு…அவங்களப் பத்தித் தெரியாதா உனக்கு?
–தெரியுங்க…இவ்வளவு பாசத்த வச்சுக்கிட்டு
எதுக்குச் சண்ட போடனும்?
–அப்படித்தான்…பாசமெல்லாம் இருக்குது.இந்தக்
கருமம் புடிச்ச ஈகோவத் தூக்கிட்டுத் திரியறது. கோவம்
குறைஞ்சிருச்சின்னா வருத்தப்படவேண்டியது.
இவங்க இப்படித்தான்.யாருசொன்னாலும்
கேட்கமாட்டாங்கமா. இவங்கல்லாம் எமோசனல் அடிக்ட்.
–ஆமாங்க…ஆனா வெளியில வந்தா ஒருத்தருக்கொருத்தர்
விட்டுக்கொடுக்கவே மாட்டேங்கறாங்க…
–அவங்களுக்கு பாசத்த எப்படிக்காட்டனும்னு
தெரியல கயலு…ஆனா யோசிச்சு யோசிச்சு
பழகறவங்களுக்கு மத்தியில மனசுல பட்டத எதார்த்தமாப் பேசறவங்க
இவங்கள மாதிரி ஆளுங்கதான்.
கொஞ்சம் அனுசரிச்சுப் போகப் பழகிட்டாங்கனா
சண்டை குறைஞ்சு சந்தோசமா வாழ முடியும்.
சோமசுந்தரம் சொன்னதை ஆமோதிப்பதைப் போல்
மேலும் கீழுமாய்த் தலையாட்டிவிட்டு நிமிர்ந்தாள்.
திலகவதி புடவை மாற்றிக்கொண்டு வீட்டிலிருந்து
வெளியில் வந்தாள்.
டவுனுக்குப் போய்ட்டு வர்றேன் கயலு. மலரு
குளிக்கப் போறேனு சொன்னா.புள்ள தூங்குது.
அழுகற சத்தங் கேட்டுச்சுனா கொஞ்சம் பாத்துக்க.
–சரி நாம் பாத்துக்கறேன். நீ போய்ட்டு வா.
என்றவள் சற்றுநேரம் அங்கேயே நின்று
அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்…
…கா.ரஹ்மத்துல்லாஹ்…