
அதிகாலையில் வீசுகின்ற காற்றும் சூரியோதய வாசனையும் உடம்பிற்கு புத்துணர்ச்சி தருவது என அம்மா அடிக்கடி சொல்வார். அந்த நேரத்தில் கற்கின்ற பாடங்கள் மனதில் பதியும் என்றும் சிறப்பான சிந்தனைகள் மனதில் உதயமாகும் என்றும் அப்பா சொல்வார்.
நானும் எப்போதாவது அதிகாலையில் சில கவிதைகளை கோர்த்ததுண்டு….
அம்மா, அதிகாலை ஐந்து மணிக்கு முன்னரே தானும் எழுந்து எங்களையும் எழுப்பிவிடுவா,
தங்கை குயிலி மட்டும் அம்மா எழுப்ப, மெல்ல எழுந்து அப்பாவிடம் சென்று மீண்டும் படுத்துவிடுவாள். அம்மா சத்தம்போட்டு உலுக்கினால் ‘சரி அவள் படுக்கட்டும் விடு’ என்றுவிடுவார் அப்பா.
“நல்லா செல்லம் குடுத்து உதவாமல் ஆக்குங்கோ” என்றபடி நகர்ந்துவிடுவார் அம்மா. அண்ணாவிற்கும் எனக்கும் பிறகு கடைக்குட்டியாய் பிறந்தவள் அவள். எட்டு வயதான அவளிடம் யாருமே கோபத்தைக் காட்டியதில்லை, எல்லோரிடமும் ஒதுங்கி நடக்கும் நான் கூட அவளிடம் அப்படி நடப்பதில்லை. அம்மா மட்டும்தான் அவளிடம் கண்டிப்பு காட்டுவது, அதுவும் எல்லோருமே செல்லம் குடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே……
அன்று சனிக்கிழமை, சீராளனும் வானகனும் கோமகனும் காலையிலேயே வீட்டிற்கு வந்துவிட, நால்வருமாக பின்பக்கம் இருந்த கொய்யா மரத்தின் கிளைகளில் ஏறியிருந்து கதைத்துக் கொண்டிருந்தோம்.
கொய்யா காய்த்துச் சொரிந்திருந்தது. கொய்யாப்பழங்களின் மெல்லிய வாசனை இதமாய் பரவியிருந்தது அவ்விடத்தில். ஆளுக்கொரு செங்காய் பதமான கொய்யாக்காய்களைப் பிடுங்கி சாப்பிட்டபடி கதைத்துக் கொண்டிருந்தோம்.
சிறிது நேரத்தில் எங்களருகில் ஓடிவந்த தங்கை, ‘அம்மா தேத்தண்ணி குடிக்க வரட்டாம்’ என்றாள்.
இஞ்சியும் ஏலக்காயும் சேர்த்த அம்மா போடும் தேநீர் என்றால் எங்கள் எல்லோருக்கும் விருப்பம்தான். அவசரமாய் மூவரும் மரத்தைவிட்டு இறங்கி வீட்டுக்குள் வந்தோம். அம்மா தேநீரோடு தட்டைவடையும் தர,
‘பாட்டு கேட்டுக்கொண்டு சாப்பிடுவமடா’ என்றான் சீராளன்.
சரி என்றபடி சைக்கிளை தலைகீழாக நிறுத்திவிட்டு வானகன், சுற்றத் தொடங்கினான். ரேப்பில் பாட்டை ஓடவிட்டேன்.
சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா…ஆ…ஆ…ஆ…
என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கியது…..மௌனமாய் கேட்டுக் கொண்டிருந்தோம்.
இளையராஜாவின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், எனக்கு பிடித்த எதையும் தமக்குப் பிடித்ததாக மாற்றிக்கொள்வது என் நண்பர்களின் குணம், அதனால்தான் என் நண்பர்களின் யாருக்காவது ஏதாவது துன்பம் என்றால் நான் எதைப்பற்றியும் யோசிக்காமல் முரட்டுத்தனமாக மாறிவிடுவேன்.
அப்படி மாறிமாறி சைக்கிளை சுற்றி பாட்டுக் கேட்பதில் இருந்த ஆனந்தம் இப்போது எந்த கோம் தியேட்டரிலும் கிடைப்பதில்லை.
தொடரும்….
கோபிகை.