எழுதியவர் – தமிழ் செல்வன்

ஒரு கல்யாண மண்டபத்தின் உற்சாகத்தை அந்த சிறுவனின் அழுகை சோகமயமாக்கியது. 10 வயதான சிறுவனின் பெயர் வருண். மனவளர்ச்சி குறைபாடு உடையவன்.
சத்தமாக அழுது கொண்டு, அவனை ஆறுதல் படுத்த முயன்ற அம்மா அப்பாவை அடித்துக்கொண்டிருந்தான்.
கையில் கிடைத்த பொருட்களை மற்றவர்கள் மேலும் வீசினான் .
அவன் அப்பா மோகன் அவர்களிடம் ” சாரிங்க ” என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தார்
சிலர் ” பரவாயில்லைங்க ” என்று சொன்னார்கள்.
சிலர் முறைத்தபடி முணுமுணுப்பாக திட்டினார்கள்.
” பையனை வீட்டுல விட்டு வந்திருக்கலாமே சார் ” கூட்டத்தில் `ஒருவர் கேட்டார்.
” எப்பவும் சாதுவா இருப்பான், சில சமயம் இந்த மாதிரி நடந்துக்கறான். மாப்பிளையோட அப்பா
என்னோட ஃபிரென்ட். ரொம்ப வற்புறுத்தி குடும்பத்தோட வரணும்னு சொன்னதால கூட்டிட்டு வந்தோம் ” என்றார் மோகன் .
” சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிட்டு போயி சமாதானப் படுத்துங்க ” வேறு ஒருவர் அறிவுரை சொன்னார்.
” ஆட்டோக்கு போன் பண்ணி இருக்கேங்க. இப்போ வந்துடும் ”
” தம்பி ,ஐஸ்க்ரீம் சாப்பிடறியப்பா ” ராஜன் என்பவர் சிறுவனிடம் ஐஸ்க்ரீம் நீட்ட வாங்கி அவர் சட்டையில் கொட்டினான்.
” மன்னிச்சுடுங்க ராஜன் சார் ”
”பரவால்லீங்க . ஒன்னும் பிரச்சனை இல்ல. இந்த மாதிரி குழந்தைங்களை வளக்கறதுக்கு ரொம்ப பொறுமை வேணும்ல. உங்களை தான் பாராட்டணும் . மோகன் ”
” பொறுமையா இருந்தா தான் சமாளிக்க முடியும். வேற வழி இல்ல ”
” கடவுள் ஏன் தான் இப்படி குறையோட குழந்தைகளை படைக்கிறான். வருத்தமா இருக்கு மோகன் ”
” என்ன சார் பெரிய குறை ? இவங்க குழந்தைங்க . நமக்கு கொஞ்ச வருசத்துல குழந்தைப் பருவம் முடிஞ்சுடும் . இவங்க ஆயுசு முழுக்க குழந்தைங்க. அவ்வளவு தானே ”
”வருண் ரொம்ப கொடுத்து வச்சவன் , மோகன் நீங்க அப்பாவா கிடைச்சதுக்கு. ”
” இதுல என்னங்க இருக்கு. எனக்கு அவன் மேல உயிர் சார் ”
” என்ன இருந்தாலும் இது கஷ்டம் தானே. மோகன் ”
” இல்ல சார் , ஒருநாளும் அப்படி நினைச்சது இல்லை . எல்லாரும் கடைசி காலத்துல கஞ்சி ஊத்த பிள்ளை வேணும் , ஆஸ்திய பாத்துக்க பிள்ளை வேணும் , காரியம் பண்ண பிள்ளை வேணும்னு, வம்சம் விருத்தியாக பிள்ளைவேணும் தான் பிள்ளைங்க கிட்ட எதிர்பார்ப்போட குழந்தையை வளப்பாங்க .
எங்களுக்கு அப்படி இல்ல சார். இவன் எங்க வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தவன்.இவன் எப்படி இருந்தாலும் இவன் தான் சார் எங்க வாழ்க்கை ”
அப்போது ஆட்டோ வந்தது . அவன் அம்மா .அப்பா, ராஜன் , மூவரும் முயற்சி செய்து அவனை ஆட்டோ உள்ளே உட்கார வைத்தனர் . வருண் சமாதானமாகி சிரிக்கத் தொடங்கினான்.
” அங்கிளுக்கு டாட்டா சொல்லு ”
வருண் கை ஆட்டினான் .
” மோகன் . இவன் பாரமா இருக்கான் . ஏதாவது ஆஸ்ரமத்துல இல்ல ஆஸ்பிடல்ல சேத்து விட்டுடலாம்னு ஒரு நாள் கூட உங்க மனசுல எண்ணம் வந்ததே இல்லியா”
”இல்ல சார். அப்படி எல்லாம் யோசிச்சதே இல்ல. அப்புறம் வருணை பெத்து போட்டு போனவங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும் சார் ”
” என்ன மோகன் சொல்றீங்க , வருண் உங்க சொந்த மகன் இல்லியா ”
”இல்ல சார் . எங்களுக்கு அஞ்சாறு வருஷமா குழந்தையே இல்லை. எங்கே எப்படி தத்து எடுக்கலாம்னு யோசிச்சுட்டு இருந்தோம். ஜாதி பாத்து தத்து எடுன்னு என்னோட சொந்தக்காரங்க பிரச்சனை பண்ணாங்க.
ஒரு நாள் பஸ் ஸ்டாண்ட்ல ஒரு பழக்கூடைக்குள்ள குழந்தை அழற சத்தம். நான் தான் எடுத்துட்டு ஹாஸ்பிடல் தூக்கிட்டு போயி காட்டினேன். அங்க டாக்டர் கொடுத்த அட்வைஸ்படி முனிசிபாலிட்டில பதிவு பண்ணி தத்து எடுத்து வளக்கறேன் சார் . போய்ட்டு வரோம் சார்”
ஆட்டோ கிளம்பிச்சென்றது. உள்ளே வருண் சிரித்துக்கொண்டிருந்தான்.
[ முற்றும் ]