எழுதியவர் – கவிதாயினி. சசிகலா திருமால்

மண் மணம் கமழும் கவிதைகள் வாசமதை சாமரம் வீசி செல்கிறது. வட்டார வழக்கோடு காதலும் சேருகையில் தேன் அள்ளி தெளிக்கின்றன கவிதை வரிகள்.. வாருங்கள் நாமும் சற்றே தேனமுதை சுவைத்து மகிழ்வோம்..
” அறிந்ததில்லை ஆயிரம் மொழிகள்
அறிந்தவைகள் அமிழ்தமாகவில்லை
அன்னைத்தமிழ் அல்லவே
அவையாவும்”…
அன்னைத்தமிழுக்கு எம்மொழியும் ஈடாகாதுதான். அள்ளியள்ளி பருக அமுதமாகும் மொழியாயிற்றே நம் தாய்மொழியாம் தமிழ் மொழி.
தாய்மொழியின் பெருமை கூறும் கவிதை வரிகள் சிறப்பு.
“கலவரத்தில் அடியோடு
வெட்டுப்பட்டேன்.
சாய்ந்ததில் முளைப்பதற்குச்
சாத்தியமில்லாது மிதிபட்டு
நொறுங்கியது மனம்”…
மரத்தின் மனக்கதவொன்று மனம் திறந்து தன் வேதனைகளை விளக்குகிறது. கண்ணீர் சொட்ட சொட்ட… சாதிக்கொடிகள் வேறேதையும் சாதித்து விடவில்லை மரங்களை வேறோடு சாய்த்தது ஒன்றை தவிர…
“வேனிற்காலத்தில்
வியர்வை சுரப்பிகள் வாய்க்காலாய்…
திறவுகோல் இல்லாமல்
பீய்ச்சியடித்த உப்புநீர்…
ஊன் உருகிய
தேகத்தில் ஒட்டிய
விலா எலும்புகள்…
உயிர் ஓடிக்கொண்டிருக்கிறது
வற்றியக் கூட்டினுள்”…
இப்படியாய் விவசாயிகளின் துயரங்களை விவரிக்கிறார் கவிதாயினி. ஆம்.. விவசாயிகளின் வயிற்றில் விழுகிறது இந்தியாவின் வறுமைக்கோடுகள் அனைத்தும்.
“மறுக்கப்பட்டது காதல்
புதைக்கப்பட்டது
நெஞ்சின் ஆழத்தில்…
சமூக சாக்கடைக்குள்
சாதியொன்றுதான்
சீனப்பெருஞ்சுவராய்
நிற்குதே”…
காதலுக்கு முதல் எதிரி இந்த சாதியொன்றுதானே.. சாதி ஒத்து போனால்தான் காதல் வாழும். இல்லையேல் காதல் மட்டுமல்ல காதலர்களின் தலையும் மண்ணில் வீழும்….
“காணாதக் குளங்களை
கண்டுபிடித்து தாருங்களேன்
தஞ்சமாகிவிடுகின்றோம்
பருவமழையின்
அழுக்குரல் ஆறாய்”…
மாரியின் கதறலொன்று இப்போது இப்படித்தான் இருக்கிறது. ஓடுவதற்கு வழியின்றி ஒதுங்கி ஓரிடத்தில் தேங்கி நிற்கிறது மழை.. பாவம் அதென்ன செய்யும்.. அதன் வழிகள் அனைத்தையும் நாம் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது.
“நாகரிகங் கருதியே
நடுவீதி திரியும்
நாயும் பூனையும்…
நாதியற்றுப்போனதே
நானிலம் போற்றும் பெண்மை…
ஆறறிவு கொண்டவள்
அமைதியாய் எரிந்தாள்..
பகுத்தறிவற்றவனின் பசுமாடெரிந்தால்
புனித யாத்திரை பவனி வரும்
தீ நாவுகள்”…
பெண்மையை உயர்த்தி பெருமையாய் பேச மட்டுமே செய்கிறது இச்சமூகம். செயல்களில் காட்டிட ஏனோ தயக்கம்.. என்றுமே பெண் அடிமையாகத்தான் இருக்கிறாள். சிங்கப்பெண்கள் என்று தூக்கி வைத்து பேசுவதெல்லாம் வெறும் பேச்சளவிலேயே முடிவுக்கு வந்து விடுவதென்பதுதான் உண்மை.
“வாய்க்கரிசி போடுகிறது
மலரத்துடிக்கும்
அரும்புகளின் அதரங்களில்
வன்புணர்ச்சி…
இப்பிறப்பில் பிறந்து
தொலைத்தோமே”..
ஆதங்கம் அலைபாய்கிறது. பெண்ணாய் பிறந்ததற்காய் பெருமைக்கொள்ளச் சொன்னார்கள் பெரியோர்.. ஆனால் இன்றைய சூழலில் ஏன் பெண்ணாய் பிறந்தோம் என்றுதான் யோசிக்க வைக்கிறது..
“குரல் மேடையேறவில்லை
நிரம்பி கிடக்கிறது
அவளது மூச்சில்…
ஒலி வாங்கியில் மூச்சிரைக்க
கவிதை வாசித்தேன்
யோசிக்கிறது குரல்வளை”…
தாயவள் போல் ஓர் தெய்வமில்லை… பேசும் தெய்வமாய் என்றுமே தாயவள் நிறைந்திருப்பாள் மனதினில்… தாயில்லா வேதனையில் குரல்வளையும் சிக்கி தவிக்கிறது என்பதை சிறப்பாய் எடுத்துரைத்திருக்கிறார் கவிதாயினி.
“விரல் பிடித்து நடந்தோம்
தடுமாறும் போது தாங்கிப்பிடிப்போம்
தோளில் சுமந்தவர்களைச் சுமக்க வேண்டாம்
ஆதரவாய் தோள் கொடுப்போம்”…
ஆம்.. முதுமை என்பது எல்லோருக்கும் வரும்.. ஆதலால் நாம் யாரையும் அலட்சியப்படுத்தி பார்க்க வேண்டாம். காயப்படுத்தாமல் தாங்கி பிடித்தாலே போதுமானது.
“சிரிப்பாய் வருகிறது
பதின்பருவக் காதல்
நிழலாய் வரும் போது…
தடம் புரளாமல்
தாண்டிய காதலால்
சர்க்கரையாய் இனிக்கிறது
நிகழ்காலத்தில்”..
ஆம்.. அனைவரின் வாழ்விலும் மறக்கவியலா ஓர் ஆட்டோகிராப் இருக்கத்தான் செய்கிறது. பிற்காலத்தில் நினைக்கையில் பெரும் நகைச்சுவையாய் தோன்றும். எல்லாம் இந்த காதல் படுத்தும் பாடு.
“பாலூட்டும் தாய்
பரிதவித்துப் போகிறாள்
சவலை பாய்ந்திருக்கும்
மூத்த ஆண்பிள்ளை…
மகராசன் மதுபானத்திற்காய்
காத்திருக்கிறான் கால்கடுக்க
ஒன்றிரண்டு சில்லரையும்
அரசாங்க உண்டியலில்”..
அன்றாட வாழ்வில் குடிமகன்களின் குடும்ப நிலை இதுதானே.. வறுமையின் பிடியில் வாடுவதைவிட குடியின் பிடியில் சீரழிவதுதான் அதிகம்.
” குற்றமொன்றும் செய்யாமல்
குப்பையிலே கிடக்கிறேன்…
பிறந்தது பாவமோ படைத்தவனின் பிழையோ..
வருடந்தோறும் வரித்துக் கொள்கிறேன்..
மணமகளாய்”…
என்று திருநங்கைகளின் அவல நிலையை கண்ணீர் மல்க எடுத்துரைக்கிறார் கவிதாயினி.
“தொடுதலில் இன்பங்கண்டு
சுவாசத்தில் உள்நுழைந்து
நினைக்கையில் நின்றயிடத்திலே
பிறருயிரைக் கவர்ந்து
களவாடிச் செல்வதில்
அதிசயக் கள்வனே”..
என்று பூமியை சிதைத்து நாசமாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்று பற்றி குறிப்பிடுகிறார் கவிதாயினி.
“வலிமையுள்ள எழுத்துக்களும்
வடித்து விடுகிறது
கண்ணீரைக் காதலில்…
நிர்ணயம் செய்ய
எழுதுகோலை விட
வேறு ஒன்றும் இல்லையே”..
நிதர்சனம் . பேனாமைக்கு இருக்கும் வலிமையும் ஆற்றலும் வேறெதற்க்கும் இல்லை.. தலையெழுத்தை மாற்றும் வல்லமை கொண்டது தான் மையெழுத்துக்கள்..

  • மொழிகள் மௌனமாய்
  • நானும் கவிஞனே
  • உன் பார்வை ஒரு வரம்
  • தேவதையின் பாதங்கள்
  • சிற்றிதயம்…
    போன்ற பல கவிதைகளில் காதல் மனதை வெளிப்படுத்தியுள்ளார். காதல் பற்றிய தன் எண்ணங்களை வண்ணங்களாகத் தூவியுள்ளார். மிகவும் சிறப்பாக..
  • பொங்க வைக்கணும்
  • வெளஞ்ச கதிரு
  • பச்சைமலை காட்டுக்குள்ளே
  • வயலோடு விளையாடு
  • அத்தமக பூத்திருக்கேன்…
    போன்ற எண்ணற்ற கவிதைகளில் மண்வாசனையுடன் கூடிய கிராமத்து மணம் வீசுகிறது சொல்லாடலில்.. படிக்க படிக்க இனிமை சேர்க்கும் கவிதைகள்..
  • கந்தகமாகிறது வியர்வை
  • எட்டுவழிப் பாதையிலே
  • விருட்சங்கள்…
    போன்ற கவிதைகளில் விவசாயம் பற்றியும் இன்றைய விவசாயிகளின் நிலைப் பற்றியும் எடுத்தியம்பி இருக்கிறார்.. மொத்தத்தில் இவரின் அத்தனை கவிதைப்பூக்களும் மணம் சேர்கிறது.
    நன்றி. வணக்கம்.

  • வெளியீடு : கவிக்குடில் வெளியீடு
    கோவை.
    விலை : ரூபாய். 150/.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal