
இறைவன் படைப்பில் ஜீவ ராசிகள் அனைத்துமே நால்வகை யோனியில்-புழுக்கம்- வித்து- அண்டம்- சினை எனும் பிறப்பிடம் வழியாகப் பிறக்கின்றன.
அவற்றின் தோற்றத்தை வைத்து ஏழுவகையாகப் பிரித்தனர்.அவை தருக்கினம்-நீர் வாழினம்- ஊர்வன- பறப்பன-விலங்கினம் இவற்றோடு மனிதர் அமரர் (தேவர்) என எழுவகைத் தோற்றத்தைக் குறிப்பிட்டு முன் பதிவில் ஆறு வகைத் தோற்றம் வரை அதாவது மனிதர் வரை விரிவாகப் பார்த்தோம்.
ஏழாவது தோற்றமாகக் குறிப்பிடும் அமரர் -தேவர் என்பவர் யார்?
மற்ற ஆறுவகைத் தோற்றங்களையும் நாம் அனைவரும் பார்க்கும் போது ஏழாவது தோற்றமாகக் குறிப்பிடும் அமரர் -தேவர் வானத்திலா இருப்பார்? அல்லது புராணங்கள் கூறுகின்ற கற்பனைக் கதையா?
” மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்றுயிர் உள்ளனவும் அல்லவும் அஃறிணை”
என பவணந்தி முனிவரின் நன்னூலில் உலகப் படைப்புகளை உயர்திணை, அஃறிணை என இருவகைப்படுத்தி மனிதனை உயர் திணை எனப் பொதுவாகக் குறிப்பிட்டாலும் அத்துடன் நரர்-தேவர் என்றும் நாம் காணாத இருவரையும் சேர்த்துப் பேசுகிறார்.
” மனிதரிலும் மனிதருண்டு
வானவரும்
மனிதர்போல் வருவதுண்டு”
என்கிறது சிவானந்த போதம்.
அதாவது வானவரான தேவர்களும் மனிதர் உருவில் தான் வருகின்றனர் என்ற உண்மையை சிவானந்த போதம் தெளிவுபடுத்துகிறது.
ஆம்! மனித தேகத்தில் இருப்பவர்களே மக்களாகவும்- நரர்களாகவும்-
தேவர்களாகவும் இருக்கின்றனர்.
மனிதப் பிறவியென்பது நாற்சந்தியில் நிற்பது போன்றதாகும். மிருகமாக- மனிதனாக- தேவனாக எப்படி வேண்டுமானாலும் மனிதனிலிருந்தே யாத்திரை தொடங்கலாம்.
எப்போதுமே உண்பது- போகிப்பது- உறங்குவது என புலன் நுகர்ச்சியிலேயே சதாகாலமும் வாழ்பவன் மனித ரூபத்தில் இருந்தாலும் மிருகங்களைப் போன்றே வாழ்பவன்- அவன் நரன்.
இந்த உலக வாழ்க்கையோடு நான் ஏன் பிறந்தேன்? என் கதி முடிவில் என்னவாகும்? என்று ஆய்ந்து தேடுகிற தேட்டமுடையவனே மனிதன்.
ஒரு மெய்ஞானியைத் தேடியடைந்து அவர் முகத்தில்- திருஆலவாய்ச் சூலில் மறுபிறப்பு- புனல் ஜென்மம் எடுத்து தன் ஜீவநிலையாகிய தேவ நிலையைத் தெரிந்தவன் எவனோ அதாவது மானிடத் தேகத்தில் வைத்து தேவ ரகசியங்கள் எல்லாம் உணர்ந்து கொண்டவன் எவனோ, அவனே அமரன்- தேவன்- த்விஜன்- பிராமணன்- இருபிறப்பாளன் என்று நம் வேதாந்த சாத்திரங்களில் குறிக்கப் பெற்றுள்ளனர்.
பிராம்மணீயம் என்பதே அகத்தே ஒரு புனர்ஜென்மம் எடுப்பது. அதாவது ஒரு பிரம்ம நிஷ்டரின் முகத்தில் பிறப்பது ஆகும்.
அதனால் தான் இந்து மதம் பிராமணர்களை உச்சியில் வைத்து கொண்டாடுகிறது.
ஆதியில் இது ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறித்ததல்ல.பிரம்மத்தை அறிந்த பெரியோர்களையே குறிப்பிட்டது.
இங்ஙனம் ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு ஜீவர்களும் அறுதி உண்மையாகிய பிரம்மத்தை அதாவது கடவுள் தன்மையைக் கண்டடைவதையே வாழ்க்கையின் இலட்சியமென எல்லா மதங்களும் போதிக்கின்றன.
இதனையே,வள்ளற்பெருமானார் தமது உபதேசப் பகுதியில் இரத்தினச் சுருக்கமாக, ” அறிவின் உயர்ச்சி தாழ்ச்சியால் தேவரென்றும், மனிதரென்றும் சொல்லப்பட்டதே தவிர வேறு எந்த காரணத்தாலும் அல்ல” என்றார்கள்.