சந்து பொந்தெல்லாம் கொரேனாவின் பேச்சொலிதான். மக்கள் மரண பயத்தில் அல்லாடிக்கொண்டிருந்தனர். வைத்தியர்களும் தாதியர்களும் காலில் இறக்கை கட்டிக்கொண்டது போல பறந்து கொண்டிருந்தனர்.
வைத்தியசாலைகளே கோயில்களாகவும் வைத்தியரும் தாதியரும் தெய்வங்களாகவும் நோக்கப்பட்டுக்கொண்டிருந்தனர். கையெடுத்து வணங்கியவர்களின் கரங்களை பற்றி ஆறுதல் கூற முடியாதபடி தள்ளி நிற்கவேண்டிய நிர்ப்பந்தம்.

உலகமே அழுது புரண்டது, துடித்து துவண்டது, அறிவியல் உலகில் ஆர்ப்பரித்து மார்தட்டிக்கொண்ட மனிதனின் மமதையை அடக்காமல் விடுவேனோ என கொக்கரித்தது கொரோனா.

பொருளதாரம், வல்லரசு எனவும் ஆயுதவிற்பனையில் விற்பன்னர் எனவும் கொடிகட்டிப் பறந்த நாடுகள் அத்தனையும் முடங்கிக்கிடந்தன கொரோனாவின் பேயாட்டத்தால், பழமைகளையும் பாரம்பரியங்களையும் விட்டு சுலபமாக புதுமைக்குள் புகுந்துவிட்ட மக்கள் அந்த புதுமையின் விளைவால் இத்தகையதொரு கொடிய தாக்கம் ஏற்படும் என கனவிலும் எண்ணியிருக்கவில்லை.

அதிகாலை விடியலும் அழுகையோடு உதித்தது, உலக நாடுகளை ஆக்கிரமித்திருந்த கொடிய வைரஸின் பிடிக்குள் சிக்கிக்கொண்டிருந்தது அந்த சிறிய நாடும்.

வைத்தியசாலையின் நீண்ட வராண்டாவில் பாதம் பதித்து நடந்து கொண்டிருந்தாள் சின்ற்றெல்லா. அவளது அழகிய பழுப்பு நிற விழிகள் காய்ந்து கிடந்தன. கடந்த இரண்டு மாதங்களாக ஒரு வைத்தியராக கொரோனாவோடு போராடிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான வைத்தியர்களில் அவளும் ஒருத்தி. சற்றேனும் அசந்து அமரமுடியாதபடி அவளது நாடு கொடிய நோய்த்தாக்கத்தில் அகப்பட்டுக்கொண்டிருந்தது.

இறப்புகளின் எண்ணிக்கையோ நாளுக்கு நாள் அதிகரித்ததேயன்றி குறைவதாக இல்லை. மக்கள் உயிர்காக்கும் பயத்தில் உருக்குலைந்தனர். நாட்டு தலைவர் கண்ணீருக்கும் கலக்கத்திற்கும் இடையில் தவித்துக்கொண்டிருந்தார்.

அவளது குடும்பம் வைத்திய குடும்பம்தான். அப்பா, அம்மா இருவரும் வைத்தியர்கள், அவள் ஒரே பெண், அவளும் விருப்பப்பட்டு வைத்திய தொழிலையே கற்றாள். அது மட்டும் அல்லாது, அவள், சிறுவயதிலேயே மிகத்திறமையான வைத்தியர் எனப் பெயர் எடுத்தவளும் கூட. சட்டென்று எதற்கும் கலங்கிவிடாத அவள், தைரியத்தை, மனவலிமையை உடைத்துக்கொண்டிருந்தது கொரோனா.

‘இப்படியே போனால் நாட்டு நிலை மிகமோசமாகிவிடுமே’ என்ற எண்ணத்தில் உடல் ஒருமுறை சிலிர்த்தது அவளுக்கு. ‘என்ன செய்து எங்கள் மக்களை காக்கப்போகிறோம்’ என்ற எண்ணம் அவளது மனதில் புளுவாய் அரித்துக்கொண்டிருந்தது, அதோடு கூடவே சாங்கோவின் நினைவுகளும் அவளுக்குள் அசைந்தாடியது.

பெற்றவர்களை இழந்து சிறுவர் பராமரிப்பகத்தில் வளர்ந்ததாலோ என்னவோ அவளைவிட சாங்கோ மிக மென்மையான சுபாவம் கொண்டவனாக இருந்தான்.’அவன் எப்படி இந்த மரணங்களை சகித்துக்கொண்டிருக்கிறானோ,’

அவளது மனநிலை இப்படி என்றால், வைத்தியர் சாங்கோவின் மனமோ அன்றாடம் வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் மனித உடல்களின் எண்ணிக்கையைக் கண்டு வெந்து வெதும்பியது. சாங்கோ வேறு யாருமல்ல, சின்றல்லாவிற்காக கடவுள் நிச்சயித்த வாழ்க்கைத் துணையாக வரப்போகின்றவன் தான். இருவரும் ஒரே கல்லூரியில் கற்று ஒரே வைத்தியசாலையில் பணிசெய்தவர்கள்.

உறவென்று சொல்லிக்கொள்ள யாருமில்லாத சாங்கோவிற்கு நண்பியாக, காதலியாக, தாயாக எல்லாமாக இருப்பவள் சின்ற்றெல்லாதான். அவளது உறவுகளையே அவனுக்கும் உறவாகத் தந்து, நொடி நேரமேனும் அவன் கலங்கிவிடாதபடி பார்த்துக்கொள்பவள்.
அவளது பெற்றவர்கள் மட்டுமென்ன, அவர்களுக்கும் சாங்கோ என்றால் கொள்ளை பிரியம்தான்.

ஆனந்தம் அவர்களின் வாழ்க்கையில் இனி அழியவே அழியாது என எண்ணிக்கொண்டிருந்த வேளையில்தான், திருமண நிச்சயமும் நடந்துமுடிந்தது.
ஆனால், விதி வலியது போலும், சாங்கோவை அது துரத்தி துரத்தி அடித்தது. திருமணம் உறுதிசெய்யப்பட்ட அன்றுதான் சின்ற்றெல்லாவை கடைசியாக பார்த்தது,
அன்றே, அவனது நாட்டின் எல்லைக் கிராமம் ஒன்றில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட உடனடியாக புறப்பட்டுவிட்டான். தொலைபேசி வழித் தொடர்பு கூட சரியாக இல்லை அந்த மலைக்கிராமத்தில். அதனால் அவளோடு பேசுவது கூட அரிதாகப் போயிற்று,

தவிர, நோயின் வேகம் அசாத்திய துரிதமாய் இருக்கையில் ஒரு வைத்தியராய் சொந்த சுக, துக்கங்களை அவர்களால் நினைக்ககூட முடியவில்லை.

அன்றாடம் வந்து குவிந்த நோயாளர்களிடம் கண்ட மரணபயம், அவசரமாய் எடுத்துச்செல்லப்படும் வெற்றுடல்கள் இவை எல்லாம் சாங்கோவிற்கு மற்ற எதையும் நினைக்கவிடாமல் செய்துவிட்டது.

ஆனால், எப்போதாவது ஒய்ந்து சரியும் போது, அவனது உதடுகள் சின்றெல்லா என உச்சரிக்க மறப்பதில்லை, அவன் புறப்பட்டபோது அவளது கண்ணில் தெரிந்த அன்பும் கரிசனையும் மட்டும் அவன் நினைவில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.

நாட்கள் நகர்ந்தன, பலரைக் குணப்படுத்த ஓயாது போராடிய வைத்தியர் சாங்கோ, கொடிய வைரஸினால் தானும் தாக்கப்பட்டுள்ளேன் என்பதை உணர்ந்தபோது அதிர்ந்து போனான்.
அவன் தனிமைப்படுத்தப்பட்டான், மெல்ல மெல்ல மரண வாயிலை தான் நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது புரிய மனம் ஓலமிட்டு அழுத்து சாங்கோவிற்கு…
மரணத்தை குறித்து அவன் பயப்படவில்லை, ‘அவனை நம்பி எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சின்றெல்லாவிற்கு அவன் என்ன பதில் சொல்லப்போகிறான்,’

ஓ….என் வாகியே….
மதத்தாலும் சாதியாலும்
புரிதலின்மையாலும்
காதல்கள் பல
பிரிந்திருக்கின்றனதான்,…..
ஆனால் நம் காதல்
கொரோனாவால்
பிரியப்போகிறதா……,,,??????
சட்டென்று அவனுக்குள் ஒரு எண்ணம் தோன்றியது, தனது முடிவு அவளுக்கு தெரியாமல் போனால் நல்லது என எண்ணினான், ஆனால் தற்போதைய சூழலில் அது சாத்தியமற்றதே…..மனம் முரண்டியது.

எண்ணங்கள் தாறுமாறாய் ஓட…, அவனுக்காக ஒரு அழைப்பு, “சாங்கோ, உங்கள் மனைவி உங்களிடம் பேசவேண்டும் என்கிறார்”
“இல்லை…வேண்டாம்…” சொல்ல நினைத்தவன், மனதிற்குள் விழுங்கிக்கொண்டான்.
அவசர இணைப்பில் மறுமுனையில் சின்றெல்லா,
“சாங்கோ……..எப்படியிருக்கிறாய்”
“ம்…..நீ எப்படி சின்றெல்லா”
“உண்மை சொல்லட்டுமா, பொய் சொல்லட்டுமா” வழமையான குறும்பு அவளிடம்.
“சின்றெல்லா……உண்மை சொல்”
“சாங்கோ, நாங்கள் வைத்தியர்கள், எங்கள் பணியில் எது வந்தாலும் ஏற்கவேண்டியவர்கள்”
தெரிந்துவிட்டதா சின்றெல்லாவிற்கு….பொறிதட்டியது சாங்கோவிற்கு.
“என்ன சொல்கிறாய் சின்றெல்லா…”
“எனக்கு கொரோனா தொற்றிவிட்டது, எம் கனவுகளை கொரோனா காவுகொண்டவிட்டது சாங்கோ”
“சின்றெல்லா…..”
“ம்……..என்னால் பேசமுடியவில்லை….சாங்கோ…..நான் ….நான்….உன்னிடம் பேசிக்கொண்டே….இறந்துவிடவேண்டும்.”
“இல்லை….சின்றெல்லா…..நான் வந்துவிடுவேன்…..நான் வரும் வரை நீ காத்துக்கொண்டிரு…..மரணம் கூட நம்மை பிரிக்கமுடியாது.”
“சாங்கோ…. “
“சின்றெல்லா….”
திக்கித் திக்கி விடயத்தை வெளிப்படுத்திய சாங்கோவை அவசரமாய் தனி வாகனத்தில் அனுப்பிவைத்தனர்.
வாகனச்சாரதிக்கு பலத்த தொற்று நீக்கி பாதுகாப்புடன்.
ஒரு முழுநாள் பயணம்……உயிரைக் கையில் பிடித்தபடி சாங்கோ பயணப்பட்டான்.
மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தாள் சின்றெல்லா. பெற்றவர்கள் இருவரும் தள்ளி நின்று தவித்தனர்.
சாங்கோவின் தனி வாகனம் வந்துவிட்டது, இயலாமையிலும் எழுந்துவிடத் துடித்த சாங்கோவை அவசரமாய் வந்த பணியாளர்கள் சுமந்து கொண்டனர்,
அதுவரை அவனைப்பற்றிய விடயம் தெரியாத சின்றெல்லாவின் பெற்றோர் சாங்கோவை கண்டதும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

சின்றெல்லாவின் அருகில் கிடத்தப்பட்டான் சாங்கோ…..
“சின்றெல்லா…..”
உருகி ஒலித்த அந்த குரலில் விழி மீட்டினாள் சின்றெல்லா…
“சாங்கோ….வந்துவிட்டாயா…….”
ஆமாம்…..சின்றெல்லா…..உன்னை நீங்கி நான் வாழ்வது எப்படி”
“எதுவரை என்னோடு வருவாய் சாங்கோ”
“மரணம் வரை வருவேன் சின்றெல்லா……”
“கொரோனா…….உனக்குமா சாங்கோ…”
“இல்லாவிட்டாலும் வந்திருப்பேன்……உன்னைத் தொட்டது எப்படி என்னைத் தொடாமல் விட்டுவிடும்….”
“சாங்கோ……”
“சின்றெல்லா…..”
இரண்டு உயிர்கள் கொரோனாவின் கொடிய பேயாட்டத்தில் உலகை விட்டு விடைபெற்றுக்கொண்டிருந்தன.
ஒரு காதலை பறித்துவிட்ட வேதனையில் கொரோனாகூட ஒருநொடி கூனிக்குறுகி நின்றிருக்கும்……

முற்றும்.

கோபிகை.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal