
அந்தச் சம்பவத்திற்கு பிறகு அதிக நாட்கள் நாங்கள் காட்டுப்பக்கம் போகவில்லை, என்னை அறியாது எனக்குள் ஒரு தவிப்பு , காட்டு மரங்களும் பறவைகளும் எனக்காக காத்திருப்பது போன்றதொரு நினைப்பில் எனக்கு உயிர் உருகும், ஆனால் நான் அதிக நாட்கள் காட்டுக்கு போகவில்லை என்பதில் அம்மாவுக்கு நிறைய சந்தோசம்,
வீட்டில் இருக்கும் நேரத்தில் அயல்வீட்டு சிறுவர்களுடன் விளையாடச் சென்று விடுவேன், நான் போகாவிட்டாலும் என்னை அழைப்பதற்காக எங்கள் தெருவிலுள்ள அத்தனை சிறார்களும் கூட்டமாக வந்து விடுவார்கள், வந்து அம்மாவிடம் இரண்டு பேச்சு வாங்கிவிட்டு என்னையும் அழைத்துக்கொண்டு போவார்கள்.
எனக்கு பதின்நான்கு வயதென்றாலும் பத்து, பதினொரு வயதான சிறார்களுடன் தான் எனது பொழுது கழியும், அது நுங்கு காலமென்பதால் பனங்கூடலுக்குச் சென்று நுங்கு வெட்டிக் குடித்துவிட்டு அதன் கோம்பையில் தடிகளைச் சொருகி வண்டில் செய்து கொடுப்பதும் தென்னை மரத்தின் குரும்பட்டியில் தேர் செய்து கொடுப்பது என நேரம் பறந்து விடும்….. செய்து கொடுப்பதோடு என் வேலை முடிந்து விடும், விளையாடுவது அவர்கள் பாடு, மீதி நேரத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த நூலகத்தில் அமர்ந்து விடுவேன்,
வானத்தைப் பற்றியும் அதன் ஆழ அகலம் பற்றியும் அதைச் சுற்றி வரும் கோள்கள் பற்றியும் பத்தகங்களில் தேடி வாசிப்பேன், பால் வீதியில் பவனி வரும் கோள்களின் மாறாத நீள்வட்ட இயங்கும் தன்மை, நட்சத்திரங்களின் ஒளி வீசும் திறன் இவை பற்றியும் அதிகம் சிந்திப்பதுண்டு.
இலக்கியத்தை வாசிக்காது சுவாசித்தவன் நான், லெனின், கார்ல்மார்க்ஸ், மாசேதுங் இவர்கள் பற்றியும் அதிகம் வாசிப்பேன், அந்த வயதில் அவர்களின் வாழ்க்கை எனக்குள் புதுவித எண்ணங்களை உதிக்கச் செய்தது,
கார்ல்மார்க்ஸின் அறிவியல் சார்ந்த பொதுவுடைமை கொள்கைகள் பற்றி அதிகம் யோசித்திருக்கிறேன், மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக இருந்த கார்ல் மார்க்ஸ் அவர்களின் காதல், மிக அற்புதமான ஒன்றாகத் தெரிந்தது.
ஒரு இளவரசியான ஜென்னிக்கு மார்க்ஸ் மீது உண்டான காதலும் அந்த காதலுக்காக அவர்களின் அர்ப்பணிப்பும் பின்னாளில் அவர்களின் இல்லற வாழ்வில் ஏற்பட்ட துயரங்களும் காதலின் மீது விருப்பையும் வெறுப்பையும் ஒரே நேரத்தில் உண்டு பண்ணியது, எனக்கு.
அந்த தேடலின் போதுதான் சேகுவேராவையும் பிடல் கஸ்ரோவையும் பற்றியும் தெரிந்து கொண்டேன், உரிமைகள் பற்றிய முதல் வித்து எனக்கு அப்புத்தகங்கள் மூலம் தான் கிட்டியது.
தொடரும்…..
கோபிகை