
துரோணர், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் வித்தைகள் பல கற்று கொடுத்துக் கொண்டிருந்த காலம் அது.
ஒரு நாள் துரோணரைத் தன் அரண்மனைக்கு அழைத்த திருதராஷ்டிரன், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் எந்தவிதப் பாகுபாடும் இன்றிதானே பயிற்சி கொடுக்கிறீர்கள்? என்று கேட்டார்.
அதற்குத் துரோணர், ஆம் மன்னா என்று பதிலளித்தார்.
“தன் சீடர்கள் அனைவருக்கும் எந்த வித பாகுபாடும் இன்றி பயிற்சி அளிப்பதே ஒரு நல்ல ஆசானுக்கு அழகு. நீங்கள் ஒரு நல்ல ஆசானாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்றார் திருதிராஷ்டிரர்.
திருதிராஷ்டிரரின் பேச்சில் ஏதோ ஒளிந்துள்ளது என்பதை அறிந்த துரோணர்.
கௌரவர்கள் தன்னைப் பற்றித் தன் தந்தையிடம் ஏதோ குறை கூறி இருக்கிறார்கள் என்பதை யூகித்துக்கொண்டார்.
பின்னர், “மன்னா நான் அனைவரையும் சமமாகத்தான் நடத்துகிறேன். ஆனால், அவரவரின் தனிப்பட்ட முயற்சி மற்றும் ஆர்வத்தைப் பொறுத்தே ஒவ்வொருவரும் பாடத்தைக் கற்கின்றனர்” என்றார் துரோணர். அதன் பின் மன்னரிடம் விடை பெற்று தன் குடிலிற்கு திரும்பினார்.
அடுத்த நாள் எப்போதும் போல அனைவருக்கும் பயிற்சி தொடங்கியது.
இன்று கௌரவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்து அணைவரையும் ஒரு காட்டிற்குக் கூட்டிச் சென்றார் துரோணர்.
வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றங்கரையில் அனைவரையும் அமரச் சொல்லிவிட்டு, “இன்று நான் உங்களுக்கு ஒரு அஸ்திரம் மூலம் எப்படிக் காட்டை எரிப்பது என்ற வித்தையைச் சொல்லித்தரப் போகிறேன் எல்லோரும் கவனமாக கேளுங்கள்” என்று கூறினார்.
ஒரு மந்திரத்தை ஆற்று மணலில் எழுதினார்.
அப்போது திடீரெனெ அர்ஜுனனை அழைத்து, “நான் என்னுடைய கமண்டலத்தைக் குடிலிலேயே விட்டு விட்டு வந்துவிட்டேன். நீ சென்று கொண்டுவா” என்றார்.
“ஐயோ இன்றைய பாடம் மிகவும் முக்கியமானதாயிற்றே. ஆனால், குருநாதர் நம்மை கமண்டலத்தை கொண்டு வரச் சொல்கிறாரே… நாம் சென்று வருவதற்குள் பாடம் முடிந்துவிடுமே” என்று வருந்தினான் அர்ஜுனன். ஆனாலும் குரு சொல்வதை தட்டக்கூடாது என்பதற்காகக் குடிலை நோக்கி விரைந்து ஓடினான்.
கமண்டலத்தை எடுத்துக்கொண்டு வருவதற்குள் பாடம் முடிந்து எல்லோரும் காட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
ஒரு வழியாக அவன் குருநாதரை அடைந்தான்.
குருவே பாடம் முடிந்துவிட்டதா என்றான்.
“ஆம் அர்ஜுனா” என்றார் துரோணர்.
“தாமதத்திற்கு மன்னியுங்கள்” என்றான் அர்ஜுனன்.
பிறகு அங்கு இருந்த கௌரவர்களிடமும் மீதமுள்ள நான்கு பாண்டவர்களிடமும், “நான் உங்களுக்கு இன்று பயிற்றுவித்த வித்தையை வைத்து அந்தக் காட்டை எறியுங்கள்” என்றார் துரோணர்.
அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து அம்பெய்தனர். ஆனால், யாராலும் காட்டை எரிக்க முடியவில்லை.
அதனால் துரோணர் மிகுந்த கோவம் கொண்டார்.
இறுதியாக அர்ஜுனன், “குரு தேவா நான் முயற்சிக்கிறேன்” என்றான்.
அதைக் கேட்டு அங்கிருந்த கௌரவர்கள் அர்ஜுனனைப் பார்த்து நகைத்தனர். “பாடத்தை கற்ற நம்மாலே முடியவில்லை. இவன் பாடத்தை கற்கவே இல்லை இவன் எப்படி எரிக்கப் போகிறான்”” என்று கிண்டல் அடித்தனர்.
குருதேவர், அர்ஜுனனின் வேண்டுகோளுக்குச் சம்மதித்தார்.
அர்ஜுனன் ஏதோ மந்திரத்தை சொல்லிவிட்டு அம்பெய்தான் காடு திகு திகுவெனப் பற்றி எரிந்தது.
“நீ எப்படி இந்த மந்திரத்தைக் காற்றாய்” என்றார் துரோணர்.
“குரு தேவா நீங்கள் ஆற்றங்கரையில் எழுதி இருந்ததை நான் வரும் வழியில் படித்தேன். அதை அப்படியே மனதில் பதிய வைத்து கொண்டேன். அதன் மூலமே காட்டை எரித்தேன்” என்றான்.
அதைக் கேட்டுத் துரோணர் மகிழ்ந்தார். கௌரவர்கள் வெட்கித் தலை குனிந்தனர்.