
கொரோனா தொற்றினால் நாள் ஒன்றில் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகின்றது.
அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 802 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனளர். இது கடந்த சில நாட்களில் பாதிக்கப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 59 இலட்சத்து 24 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே 34 இலட்சத்து 49 ஆயிரத்து 406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் 2 இலட்சத்து 29 ஆயிரத்து 728 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் ஒரு சில நாட்களில் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
அதேநேரம் நேற்று ஒரேநாளில் 2 ஆயிரத்து 102 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 84 ஆயிரத்து 672 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் ஒக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக பெருமளவான கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அதிகளவானோர் மரணத்தின் விழிம்பில் நிற்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது.