நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை. ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும். மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் என்பதும் காரணமாகும். வாழைக் குலை எடுக்கலாம், வாழைப் பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால், கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு.
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம்.
அன்றாட வாழ்வில் மருத்துவத்தில் மட்டுமின்றி வாழையின் எல்லா பாகங்களும் நமது அன்றாட வாழ்வில் பல வகைகளிலும் பயன்படுபவை ஆகும். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம்.
நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த வாழை இலை. நம்முடைய பண்பாடு மற்றும் உணவு முறையில் பெரும் பங்கு வகிக்கும் இந்த வாழை இலையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது.
வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இன்றைய அசுர வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு வருகின்றது.
அதுவும் நகர்ப்புறங்களில் தட்டு அல்லது பாலிதீன் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது கால மாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம். நகர்ப்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்துக்கு விடுமுறை நாட்களில் செல்லும்போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர். அதை மாற்ற முயற்சிக்கலாம்.

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் பற்றி இனி விரிவாக காண்போம்:

சூடான உணவுகளை வாழை இலையில் வைத்து பரிமாறும்போது அதில் ஒருவித மணம்தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால்தான் நம் முன்னோர்கள் சாப்பிடுவதற்கு வாழை இலையினை தேர்ந்தெடுத்தனர்.
நாம் தினமும் வாழை இலையில் உணவுகளை உண்பதால் நமக்கு ஏராளமான ஊட்ட சத்துக்கள் எளிதில் கிடைக்கின்றன. இதற்கு காரணம் நாம் சூடாக உணவுகளை பரிமாறும் போது வாழை இலையில் உள்ள ஊட்ட சத்துக்களை உணவு பொருட்கள் உறிஞ்சுகின்றன.
வாழை இலையில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் இருப்பதால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
எனவே தினமும் வாழை இலையில் உணவு உண்பது நல்லது.
வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது.
வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால்

தோல் பளபளப்பாகும்.
முகம் பொலிவு பெறும்,
ஞாபக சக்தி அதிகரிக்கும்.
உடல் நலம் பெறும்.
மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும்.
அழல் எனப்படும் பித்தமும் தணியும்.
வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், இளம் வயதில் ஏற்படும் இளநரை பிரச்சனை நீங்கும். முடி உதிர்தலும் தடுக்கப்படும். நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

குழந்தைகள், மாணவ, மாணவிகள்
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை சிறந்தது.
வாழை இலையில் உணவுகளை கட்டி எடுத்து செல்வதால் நம்முடைய உணவு பழுதாகாமல் அப்படியே இருக்கும், மணமாகவும் இருக்கும்.
கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம், விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம். எல்லோருக்கும் சுலபம். விலையும் குறைவு.
குழந்தைகளை அதிகாலையில் உடலுக்கு எண்ணை தடவி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளி படும்படி படுக்கவைப்பதால் குழந்தைக்கு தேவையான வைட்டமின் D சத்துக்கள் கிடைக்கின்றன.
சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் Dயும், இலையில் இருந்து பெறப்படும் குளுமையையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும். எனவே இதனை தவறாமல் செய்வதால் குழந்தையின் சரும பிரச்சனைகள் நீங்கும்.
வாழை இழையில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி நம்முடைய சருமத்தில் அரிப்பு ஏற்படும் இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம் தோல் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். இதனை
தொடர்ந்து செய்வதால் நமக்கு தோல் அரிப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையில் தான் படுக்கவைப்பார்கள். அப்போதுதான் சூட்டின் தாக்கம் குறையும். இதற்கு காரணம் வாழை இலையில் உள்ள குளிர்ச்சி சக்தி தான். வாழை இலை அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். வெப்பத்தை வெளிப்படுத்தமல் இருக்கும்.

வாழை இலையில் இஞ்சி எண்ணையை தேய்த்து தீக்காயம் உள்ள இடத்தில் வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். வாழை இலைக் குருத்தைத் தீப்புண்கள் மீது வைத்து கட்டல் வேண்டும். கொப்புளங்கள் இருந்தாலும் அவற்றின் மீது வைத்துக் கட்ட அவை மறையும்.
முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.
சின்ன அம்மை, படுக்கை புண்ணுக்கு வாழைஇலையில் தேன்தடவி தினமும் சிலமணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும். சோரியாசிஸ், தோல் சுழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
குறை பிரசவத்தில் பிறந்த சிசுவை இக்காலத்தில் இன்குபேட்டரில் (ஆங்லேய மருத்துவம்) வைத்து பாதுகாத்து பிழைக்க வைக்கிறார்கள்.
அக்காலத்தில் குறைப்பிரசவ சிசுவை வாழை இலையில் வைத்து மற்றோர் வாழை இலையால் போர்த்தி பாதுகாத்தார்கள் (ஆயுள் வேதம், சித்த வைத்தியம்).
அப்படி உயிர் வாழ இலை உதவியதால் அவ்விலையை “வாழ இலை – வாழை இலை” என வழங்கலாயிற்று.

வாழை மரம் நமது சமய வழிபாடுகளின் போது கிழங்கோடு கன்றுகளை (வாழைக் குட்டிகள்) பெயர்த்தெடுத்து மங்கள காரியங்களுக்கும் ஆலய விழாக்களிலும், திருமணம், புனித காரியங்கள், புண்ணிய காரியங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் வாயிலில் கட்டப்படுகின்றது. பின்பு அதனை வீட்டிலே நாட்டி பராமரித்து வளர்த்தார்கள் எங்கள் மூதாதையர்கள்.
வாழையடி வாழையாக நம் குலம், வம்சம், தலைமுறை தழைத்தோங்க வேண்டும் என்று…
வீட்டிற்கு ஒரு வாழை வளர்ப்போம். பசுமைப்புரட்சி செய்வோம். இயற்கையான பசுமையானதோர் அழகான உலகை எங்கள் எதிர்கால சந்ததிக்கு கொடுப்போம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal