
அழகாக நோட்டமிட்டு
அம்சமாக இலக்கை எட்டும்
அச்சு அசல் பிசகாது
காரியத்தில் கண்ணாயிருக்கும்
திட்டம் வகுப்பதில்
நேர்தியான வியூகமும் அமைக்கும்
துணிச்சலாக முடிவெடுத்து
வெற்றிக்கனி பறித்திடும்
கொண்ட கொள்கையிலே
என்றும் உறுதியாக இருக்கும்
கொட்டும் மழையிலும்
சளைக்காமல் நாளும் உழைத்திடும்
வெற்றியின் இரகசியத்தைப்
பகிராமலே வீறுநடை போடும்
விவேகமே வெற்றியின் மகுடமாக
வரலாற்றில் இடமும்பிடிக்கும்
அடக்கியாளும் எவரையும்
துவம்சம் செய்யும்
அடக்குமுறைக்கு எதிராகவே
புத்தியையுந்தீட்டும்
அச்சமென்ற உணர்வை விட்டால்
வாழ்க்கையே மாறும்
ஆக்கமெனும் செயலின் எண்ணம்
உச்சத்தில் நின்றாடும்
அடையாளம் காண்பதில்
கண்ணும் கருத்துமாக இருக்கும்
ஆட்டந்தொடங்கும் போது
இலக்கிலே உறுதி பூண்டிருக்கும்
தனி ஒருவனாகவே
களத்தில் வாய்ப்பையே பயன்படுத்தும்
தடைகள் எது வந்தாலும்
தகர்த்து வெற்றியில் தானே குளிக்கும்
இலக்கைத் தாக்கி அழிப்பதில்
கைதேர்ந்ததே வல்லூறு
இருட்டிலும் ஈரூடக வாழ்க்கை
வாழ்வதில் அதற்கிணையேது
இலட்சியப் பயணத்திலே
வெற்றியை நோக்கியே நகர்வது
இலக்கியம் சொல்வது போன்றே
செயலில் முயலுந்துணிவது
சண்முகநாதன் சின்னராஜா…