
வாழ்க்கையின் மிகப்பெரிய மறுக்க முடியாத உண்மை என்னவென்றால் அது மரணம்தான். மரணத்தையே கையில் எடுக்கத் துணிந்தவர்கள், அனைத்திற்கும் தயாராகத்தான் இருப்பார்கள். மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரின் உறவுக்கும் இடையில் பல்வேறு வலிகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அந்தக் கருத்து வேறுபாடுகளை எவ்வாறு அணுகிச் செல்கின்றோம் என்பதே வாழ்க்கையில் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பரீட்சை.
முக்கியமாகப் புரிதல் இல்லாமல் ஒருவரின் பிரச்னையை மட்டும் பெரிதாக எடுத்துக்கொண்டு மற்றவரின் மனநிலையை அறியாமல் தானாக முன்வந்து எடுக்கும் எல்லா வித முடிவும் மற்றவரை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதை அறியாததே. உதாரணமாக, மற்றவரின் உணர்வைப் புரிந்து கொள்ளாமல் நாமாக எடுக்கும் முடிவு எந்த ஓர் உறவுக்கும் சரியான தீர்வாக இருக்க முடியாது. சாதாரணமாகவே ஒருவர் எடுக்கும் முடிவுகளுக்கு, மற்றவர்கள்தான் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். அவன் கெட்டவன், நடத்தை சரியில்லை என்பதே பலரின் வார்த்தையாக இருக்கும். பல்வேறு விதமான வார்த்தையை மட்டுமே நம்பி இருக்கும் பலர், அந்த வார்த்தைகள் உண்மைதானா என்பதை அறிவதில்லை. பழகிய நாள்களில் நல்லவராகத் தெரிந்த அவர்கள் அனைவரும், இனி கெட்டவர்களாக மட்டுமே தெரிவர். இவ்வளவு நாள் பழகிய, வாழ்ந்த அனைத்தும் ஒரு நொடியில் காணாமல் போகும். எதாவது சிறிய பிரச்சினை என்றாலும், அதன் உண்மை என்ன என்பதை உணர எடுக்கும் நேரத்தை விட, அவற்றில் உள்ள தவறுகள் என்ன என்பதை யோசிக்க மட்டும்தான் நம்முடைய முழு நேரத்தையும் செலவிடுகிறோம். அவரைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்து ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என்று பல்வேறு சோசியல் மீடியாக்களில் பிளாக் (Block) செய்து விட முடியும். ஆனால் உண்மையான அன்பை வெளிப்படுத்திய ஒருவரின் மனதிலிருந்து அவரை எப்போதும் தவிர்த்து விட முடியாது.
என்னுடைய வாழ்க்கை முடியும் கட்டத்தில் நீ எனக்குத் தெரிந்தாய், இப்போது எனக்குத் திருமணம் நடந்தாலும், நான் உன்னுடையவன்/உன்னுடையவள் என்ற பல்வேறு ஆசை வார்த்தைகளை நம்பித்தான் பலர், தங்கள் கனவையும், வாழ்க்கையும் இழந்து தவிக்கின்றனர். மற்றவரோ அவரின் வாழ்க்கையை வாழச் சென்று விடுகின்றனர். அதன்பின், இதுநாள் வரை மனிதனாகத் தெரிந்த ஒருவர், இன்றுமுதல் வெறுக்கப்பட்டவனாக, சாத்தானாகத் தோன்றுகிறான்.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வாழ்க்கையில் நிறைய ரகசியங்கள் இருக்கும்… தனக்கு மட்டுமே தெரிந்த அந்த ரகசியங்கள் எல்லாம் நினைக்கும்போது ஒவ்வொரு முறையும் நிறைய வலி கொடுக்கும்.., அதீத பயம் கொடுக்கும்… ஆனால் அந்த பயத்தை எல்லாம் எங்கோ தொலைத்து விட்டு சாதாரண வாழ்வைத் தேடிச் சென்று விடுவோம். மன வேதனையிலும், மன கஷ்டத்திலும், பாதிக்கப்பட்டவர்கள் நொறுங்கிப் போய் தன்னுடைய வாழ்க்கையையும், கனவையும் கொன்று கொடூரமான அந்தச் சாவை கையில் எடுத்த பின்னர், அதன் பிறகு பலர் புலம்புவர். இவன் என்னிடம் பேசியிருக்கலாமே., கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமே. கொஞ்ச நேரத்துக்கு முன் வந்து பேசியிருந்தா சமாதானம் ஆக்கிருக்கலாமே…, இப்போது இப்படி நடந்துடுச்சே என்று பிறகு வருத்தப்படுவது போல சில நேரம் நடிப்பர். இவ்வளவும் நடந்து முடிந்த பிறகு இப்படிப் புலம்பி என்ன பயன்…
ஒரு மனிதன் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தால், அவனிடம் அவனுடைய குறைகளைக் கூறி., என்னை விட்டு போ, என்னைத் தொல்லை செய்யாதே என்று கூறியும், உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது., மனநல மருத்துவரிடம் சென்று வா என்றும் புலம்பும்போதுதான் அவன் மனதளவில் மேன்மேலும் பாதிக்கப்பட்டு., அனைவரும் சொல்வது போல, நான் செய்ய வேண்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாக யோசிக்கத் தொடங்குகிறான். அதற்கு ஏற்றார்போலவே அவனைச் சுற்றிலும் பல்வேறு நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அவன் மரணத்தின் வாசலைத் தேடி, தன்னுடைய முதல் முயற்சியை ஆரம்பிக்கிறான். இதைப் பார்த்த பலர் அவனை மேலும், மேலும் சைக்கோ என்று அடிமனதில் ஆழப்பதித்து விடுகின்றனர். அவனுடைய முதல் முயற்சியின் பாதிப்பாலும், தான் பெற்ற அவப்பெயராலும், அவன் தன் வாழ்க்கையை இழந்த அனுபவத்தைப் பெற்று விடுகிறான்.
அனைத்தும் முடிந்த பின், இந்த மன நிலையை மாற்றக் குடிக்கு அடிமையாகிறான். அதன் போதையை அதிகமாக்கப் புகையை நாடிச் செல்கிறான். தன் வாழ்க்கைக்கு மது, புகை போன்றவை கொஞ்சம் ஆறுதலாக அமைகிறதோ என்று எண்ணவும் ஆரம்பிக்கிறான். இதைப் பார்க்கும் அவருக்குத் தோன்றக்கூடிய ஒரே எண்ணம். இவன் மனிதனே இல்லை என்பதே. ஒரு மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை வெளிக்கொண்டுவர இவர்களே காரணமாக அமைகின்றனர்.
அனைத்தையும் வெறுத்த அவனுக்கு இந்த நேரத்தில் உதவக் கூடியவர் யார்?
அவன், தன் மன நிலையை நொந்து கொள்கிறான்.
நான் யார்?
தன் நிலை என்ன?
ஏன் இப்படி இருக்க வேண்டும்?
என் உலகம் எங்கே?
நான் செய்த தவறு என்ன?
என்ற எண்ணங்களுடன், அவனுடைய வாழ்க்கையை நகர்த்த முயற்சி செய்கிறான்.
தன் வாழ்க்கைக்கு உதவி செய்பவர்கள் யார் என்பதைத் தேடிச் செல்கிறான்., யாரும் இல்லாத நேரத்தில் தான் ஏமாந்து போனதை எண்ணி எண்ணி அடுத்த கட்ட முயற்சியை மேற்கொள்கிறான். தான் தற்போது தள்ளப்பட்ட நிலையைக் குறித்து கொஞ்சம் கவலையும்., அதிக கோபமும் கொள்கிறான். ஒவ்வொரு நொடியும் தன் நிலை குறித்து மிகுந்த வருத்தம் கொள்கிறான். அந்த வருத்தமே விரைவில் பழி வாங்கும் எண்ணத்தையும், வெறுப்புணர்ச்சியையும், கொடூரமாகச் செயல்படத்தூண்டும் இயல்புக்கும் அவனை மாற்றுகிறது. எப்போதும் உண்மையான அன்பும், அதீத பாசமும் ஒருவருக்குக் கொடுக்கும்போது இறுதியாகக் கிடைக்கும் பெயர் போலியான அன்பு, ஒரு தேவைக்காக மட்டுமே இது நாள் வரை இருந்தாய் என்பதே. உண்மைக்கு எங்கேயும் மதிப்பு கிடையாது என்பதற்குச் சான்றாகவே அனைத்தும் இருந்து விடுகிறது. அனைத்தும் நடந்த பின் என்ன செய்ய முடியும். ஒருவர் தன்னை நிராகரித்தபின்னும் அவரின் மீது உள்ள அன்பு குறைந்து போய் விடுமா என்ன?
முதலில் நடந்த அனைத்தையும் மாற்ற முயற்சி செய்தாலும், அவர்களின் மீது வைத்த அன்பும், அவர்களின் மகிழ்ச்சியும் தனக்குக் கிடைக்காமல் இருப்பதாலும், தன்னை வெறுத்தவர் மற்றவர்கள் மீது வைக்கும் அதீத பாசம் தனக்குக் கிடைக்க வில்லையே என்ற அவமானத்தாலும்…, இருந்த கொஞ்சப் பாசமும் குறைந்து, கோடூர எண்ணத்தைக் கொண்டு வந்து விடுகிறது.
தனக்கென்று இருந்தவர் ஒருவர் மட்டுமே., ஆனால் அவர் இப்போது அப்படி இல்லை., நான் இல்லையென்றால் அவருக்கு வேறொருவர் இருக்கிறார் என்ற எண்ணம் மட்டுமே திரும்பத் திரும்ப மனதில் வலம் வந்து கொண்டிருக்கும். நம்மீது பாசமாகவும், நம்மை எப்போதும் கூடவே வைத்திருக்கவும் பலர் நினைப்பர். அதிலும் சிலர் நமக்காக மட்டுமே இருப்பதாகச் சொல்லுவர்., அவர்களின் பாசமும், அவர்கள் கூறிய அந்த வார்த்தைகளும் ஒரு சில நாள்களுக்கு மட்டுமே. தன்னுடன் உறவிலிருந்தபோது பயன்படுத்திய அனைத்து வார்த்தைகளும் தற்போது வேறு ஒருவரிடம் பயன்படுத்திக் கொண்டிருப்பர். தனிமையை அனுபவிக்கும்போது தனக்கு மிகவும் பிடித்தவரைத் துன்புறுத்தக் கூடாது., அவரை பகைத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்து, தன் மீதுள்ள கோபம் தணிந்ததும் மீண்டும் தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்றும் தான் பலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையான பாசமின்றி போலியாக இருக்கும் பலர் மீண்டும் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. ஒருவழியாக, அவர் தன் வாழ்க்கையை விட்டுப் போய்விட்டார்கள் என நிம்மதியுடன்தான் இருக்கிறார்கள். தான் நினைத்தால் உடனடியாக அவர்களைத் துன்புறுத்தலாம். அவர்களை வெறுத்து அவர்களுக்குத் தீங்குகளைச் செய்ய முடியும். ஆனால், அவர்கள்தான் போலியான அன்புடன் இருக்கின்றனர். ஆனால், நாம் அவ்வாறா இருந்தோம். அவர்கள் விட்டுச் சென்றாலும் அவர்கள் மீது இருந்த அன்பு குறையாமல் அவர்கள் மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருப்போம்.
காத்திருப்பதும் ஒரு வித சுகமான வலிதான் என்று நினைத்து நமக்கு நாமேதான் ஆறுதலாக இருக்கிறோம். தன் நிலைக்குக் காரணமானவர்களுக்கு முன், மதிப்பு மிக்கவனாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் தனக்கென ஒரு புதிய உலகை உருவாக்க வேண்டும். அதுவும் அவர்கள் உருவாக்கிய உலகத்திலிருந்தே புதிய உலகை உருவாக்க வேண்டும். இதயம் தரையில் விழுந்து சிதறிப் போகும் முன், அதன் காயத்தைப் பார்க்க வேண்டும்.