சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த இயக்குனர் வசந்தபாலன் தற்போது அதிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆகி உள்ள நிலையில் தனது முகநூல் பக்கத்தில் தனக்காக பிரார்த்தனை செய்த தனது நெருங்கிய நண்பர் குறித்து உருக்கமான ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் தனது நெருங்கிய நண்பர் யார் என்று கூறியிருப்பதை படித்தால் அனைவரும் ஆச்சரியம் அடைவீர்கள். வசந்தபாலனின் பதிவு இதுதான்:

வீரம் என்றால் என்ன ?
பயமில்லாத மாதிரி நடிக்கிறது.
பழைய வசனம்.
வீரம் என்றால் என்ன தெரியுமா ?
பேரன்பின் மிகுதியில்
நெருக்கடியான நேரத்தில்
அன்பானவர்கள் பக்கம் நிற்பது
புதிய வசனம்
போன வாரத்தில்
மருத்துவமனையின்
தீவிர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டிருந்தேன்.
இந்த செய்தி கேள்விப்பட்ட ஜீவன் ஒன்று
இரவு முழுக்க நித்திரையின்றி
இரவு மிருகமாய்
உழண்டவண்ணம் இருக்கிறது
விடிந்தும் விடியாமலும் அதன் கால்கள்
மருத்துவமனைத் தேடி விரைகிறது
எனைப் பார்க்க அனுமதிக்க வேண்டுமென மருத்துவமனை நிர்வாகத்திடம் போராடுகிறது
தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள ஒருவரைப் பார்க்க அனுமதிக்க இயலாது என்று மருத்துவமனை நிர்வாகம் மறுக்கிறது
இடையறாது சண்டக்கோழியாய் போராடுகிறது
உங்களை அனுமதித்தால் உங்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது
பரவாயில்லை சில நிமிடங்கள் அனுமதியுங்கள் என்று இறைஞ்சுகிறது
வேறு வழியின்றி
முழு மருத்துவ உடைகளுடன்
அனுமதிக்கப்படுகிறது
மெல்ல என் படுக்கையை ஒட்டி
ஒரு உருவம் நின்றபடியே
எனைப்பார்த்த வண்ணம் இருக்கிறது.
ஆண்பென்குவின் போன்று தோற்றமளிக்கிறது.
எனையே உற்றுப்பார்த்த வண்ணம் இருக்கிறது
மருத்துவரா
இல்லை
செவிலியரா
என்று
எனக்கு வித்தியாசம் தெரியவில்லை
உள்ளிருந்து “டாக்டர்” என உச்சரிக்கிறேன்
“லிங்குசாமிடா” என்றது அந்த குரல்
அத்தனை சுவாசக்கருவிகளையும் மீறி மொத்த சக்தியையும் திரட்டி
“டே! நண்பா” என்று கத்தினேன்
“பாலா” என்றான்
அவன் குரல் உடைந்திருந்தது
வந்திருவடா…
“ம்” என்றேன்
என் உடலைத் தடவிக்கொடுத்தான்
எனக்காக பிரார்த்தனை செய்தான்
என் உடையாத கண்ணீர்பாறையிலிருந்து ஒரு கண்ணீர்த்துளி கசிந்தது.
தைரியமாக இரு
என்று என்னிடம் சொல்லிவிட்டு
செல்லும் போது
யாரிந்த தேவதூதன் என்று மனசு அலட்டியது.
இந்த உயர்ந்த நட்புக்கு
நான் என்ன செய்தேன் என்று
மனம் முப்பது ஆண்டுகள்
முன்னே பின்னே ஓடியது.
“உனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா…..”
என்றேன்
நானிருக்கிறேன்
நாங்களிருக்கிறோம்
என்றபடி
ஒரு சாமி
என் அறையை விட்டு வெளியேறியது.
கோடிக்கணக்கான நட்பின் கரங்கள்
எனை அணைத்தது போன்று இருந்தது.
ஆயிரம் முத்தங்கள் லிங்கு…..
ஆயிரம் ஆண்டுகள் புகழுடன் வாழ்வாய்..

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal