இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 115 வருட சிறைத்தண்டனையையும் ஒன்றேகால் கோடி டொலர் அபராதமும் விதித்தள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பிரமுகரும் கொழும்பு நகரசபையின் முன்னாள் மேயருமான காலஞ்சென்ற புலோலியூர் கணேசலிங்கத்தின் மருமகன் சிவேந்திரன் வெற்றிவேற்பிள்ளை என்பவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
லண்டனில் ஆறு பெரும்புள்ளிகள் இணைந்து ஆரம்பித்த நிறுவனத்தின் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட சிவேந்திரன் வெற்றிவேற்பிள்ளை, தனது குற்றங்களை ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளார். கூடவே, தனது குற்ற ஒப்புதலின் அடிப்படையில் தண்டனையை குறைக்கவேண்டும் என்றும் சமரசத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இவரைப்போலவே, இவரோடு கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் நபர் ஒருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
ஓய்வூதிய நிதி, முதலீட்டாளர்கள் நிதி போன்ற நம்பிக்கையின்; அடிப்படையில் வைப்பிடப்பட்ட அப்பாவி மக்களின் பல கோடி டொலர்களில் மோசடி செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இவர்கள், பல்வேறு நாடுகளில் பல நிறுவனங்களை ஆரம்பித்து, அவற்றின் ஊடாக பலரது பணத்தை ஏப்பமிட்டிருக்கிறார்கள் என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.
இவர்களது இந்தக்குற்றங்கள் 2014 – 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவனும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரமுகரும் 1994 – 96 காலப்பகுதியில் கொழும்பு மேயராகவும் பதவிவகித்த கனகசபாபதி கணேசலிங்கத்தின் ஒரே மகள் மேனகாவை திருமணம் செய்தவர் சிவேந்திரன் வெற்றிவேற்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.