யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை நிலையத்திற்குள் பியர் போத்தல்களுடன் புகுந்த இருவர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை மையத்தில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களுக்கு வழங்கவென பியர் ரின்களுடன் பருத்தித்துறை வாசிகள் இருவர் சிகிச்சை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்,இதையடுத்து அவர்களை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

அவர்களை பொலிசாரிடம் கையளித்துள்ளனர். எனினும் , அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கும் என அச்சம் காரணமாக பொலிஸார் அவர்களை கைது செய்வதற்கு ஆரம்பத்தில் பின்னடித்தனர்.
அதன்பின்னர் அவர்களை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதேவேளை கடந்த வாரமும் இருவர் வெற்றிலைகளுடன் சிகிச்சை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த நிலையில் , அவர்களை மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைக்க முற்பட்ட போது பொலிஸார் கைது செய்ய பின்னடித்தமையால் , அவர்கள் அன்றைய தினம் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் குறித்த இருவரும் அன்றைய தினம் வெற்றிலைகளுடன் கஞ்சா போதை பொருளை கொண்டு வந்திருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.