முனைவர் மா. பத்மபிரியாஉதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை,
எஸ். எஃப். ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி..

குடும்பம் என்னும் நிறுவனம் உலகில் சமுதாயம் தோன்றிய காலத்திலிருந்தே உள்ளது. மானுடவியல் அறிஞர்கள், “குடும்பம் என்பதனை மரபணு தொடர்புகளுடைய உறுப்பினர்களின் கூட்டுச் சேர்க்கையிலான குழுக்கள்” என்கின்றனர். ஆதலால், உறவுமுறைகளாகத் தமக்குள் பகிர்ந்து கொள்ளும் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவாகக் குடும்பம் வரையறுக்கப்படுகிறது. சொத்துகளைப் பராமரித்தல், குழந்தைகளை வளர்த்தல் போன்ற விதிகள் குடும்பத்தின் உரிமைகளுக்குள் அடங்கும். இத்தகையக் குடும்பம் பெண்களை இனப்பெருக்க மையங்களாக மட்டுமேப் பயன்படுத்துகின்றன என்பது பெண்ணியவாதிகளின் எதிர்வாதமாகும். இக்கட்டுரை மகளிர் கவிதைகள் முன்னெடுக்கும் குடும்பமரபின் மீதான மாற்றுக்கருத்துக்களின் விவாதவுரையாகும்.
குடும்பத்தின் முக்கிய அலகு – தாய்
குழந்தை வளர்ப்பின் முக்கியத் தேவையான தாய், குடும்பத்தின் முக்கிய அலகு ஆவாள். “ஒரு குடும்பத்தின் முக்கிய அலகு, ஒரு தாய் மற்றும் அவரது குழந்தைகளால் ஆனது” (1) என்று மானுடவியலாளர் யானகிசாகோ என்பாரின் கருத்து இங்கு ஒப்புநோக்கத்தக்கது. முக்கிய அலகு என்னும் முதன்மைப்படுத்தலில் பெண்குல வீழ்ச்சியும் இடம்பெற்றுள்ளதாகப் பெண்ணிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில், குடும்பத்தில் பெண்களின் பங்குநிலைகள் ஆணாதிக்கக் கட்டமைவால் வடிவமைக்கப்பட்டன என்று அவர்கள் எதிர்வாதம் செய்கின்றனர்.
குடும்பமும் மகளிர் பங்கு நிலையும்
பெண் என்பவள் குழந்தைகளுக்கு இடையிலான உறவுகளைப் பேணுவதில் முதன்மைப்படுத்தப்பட்டாலும், உணர்வு ஒடுக்குதல், சமவாய்ப்பு மறுப்பு ஆகிய பின்தள்ளப்படுதலும், அவர்களுக்கு நிகழ்ந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆதலால், மகளிர் கவிதைகள் குடும்ப மரபுகளைப் பின்வரும் காரணங்களை முன்னிறுத்தி எதிர்வாதம் செய்துள்ளன.
- குடும்பத்தின் சுமை தாங்கி
- சந்ததி உருவாக்கம்
- செயலற்ற நிலை
குடும்பத்தின் சுமை தாங்கி
பெண்ணியவாதிகள் கருத்துப்படி, பெண்கள் இல்லறத்திற்கு உரியவர்கள் என்ற கோட்பாடு அவர்களின் இயங்கு தளத்திற்குப் போடபட்ட கடிவாளமாகும். “இல்லாள், இல்லத்தரசி, மனைக்கிழத்தி, மணவாட்டி, மனையாள், மனைவி என்ற சொற்கள் அதன் அடிப்படையில் பிறந்தவைகளே. இல்லறத்திற்குள்ளும் பெண்கள் எல்லா இடங்களிலும் தன்னிச்சையாக இயங்க இயலாது. முன்கட்டு ஆண்களுக்கும், பின்கட்டு பெண்களுக்கும் உரியதாக இருந்தது. பின்கட்டில் குறிப்பாக, சமையலறையே பெண்களின் அதிகபட்ச இருப்பிடமாக இருந்திருக்கிறது” (2) இதனால், பெண்களைக் குடும்ப வலையில் சிக்குண்ட மீனாக கவிஞர். செல்வகுமாரி கூறியுள்ளார்.
“குடும்ப வலையில்
சிக்குண்ட மீன்கள்
… … … … … … … …
‘வினையே ஆடவர்க்கு உயிர்’
மனையுறை மகளிர்க்கு
ஆடவர் உயிர்
சொல்வது இலக்கியம்
… … … … … … … …
இல்லறப் பயணத்தில்
இரு பிரயாணிகளில்
ஒருவனுக்கு ஒரு சுமை
ஒருத்திக்கு இரு சுமை ஏன்…
இன்றையப் பெண்கள்
இரட்டைச் சுமைதாங்கிகள்” (ஜெ. செல்வகுமாரி, பெண்ணியம் பேசுகிறேன். பக்- 17 -19)
‘சிக்குண்ட மீன்கள்’ என்னும் கவிதை பெண்களின் இரட்டைச் சுமை குறித்து எதிர்வாதம் செய்துள்ளது. இல்லறத்தில் ஆண்,பெண் என்ற இருவரில் பெண்ணுக்குண்டான இருமை நிலை ஒடுக்குமுறையாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
சந்ததி உருவாக்கம்
பெண்ணின் மறுஉற்பத்தித்திறன் குடும்பத்தின் பெருக்கத்திற்கு வழிவகுத்ததால் ‘சந்ததி உருவாக்கம்’ பெண்ணின் கட்டாயக் கடமையாகக் கற்பிக்கப்பட்டது என்று மகளிர் கவிதைகள் கூறியுள்ளன. குடும்பம் என்பது பாலின உறவுக்கு மட்டுமன்று, இனப்பெருக்கத்திற்கும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது என்ற பின்வரும் கருத்து கவனிக்கத்தக்கது. “ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேப் பாலுணர்வு ஆசைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட தற்காலிக கூட்டுமுறை அன்று… குடும்பத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான பாலுணர்வு உறவு அவசியம் என்றாலும், குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கேக் குடும்பம் என்னும் சமூக அமைப்பு உள்ளது” (3) என்று வரையறை செய்துள்ளனர். இதனை அ. வெண்ணிலாவின் கவிதை பதிவுசெய்துள்ளது.
“என் உடலை விதைத்தார்கள்
பூச்செடிகளும் மரங்களும்
துளிர்விட்டு வளர்ந்து
விருட்சமாயிருந்தன
என் மார்புக் காம்புகள் நீரூற்ற
விளையாட
சிட்டுக் குருவிகளும் புறாக்களும்
போட்டியிட்டன
உழுதார்கள் விதைத்தார்கள்
அறுவடை செய்தார்கள்
காலாதீதத்தில்
என் உடல்
… … … … … … … …” (அ. வெண்ணிலா. ஆதியில் சொற்கள் இருந்தன.ப.72 )
பெண் உடல் விளைநிலமாக இருந்து குடும்ப நிறுவனத்தில் சந்ததி உருவாக்கம் செய்வதைக் கூறுகிறார். குடும்பம் என்னும் அகக்களத்தில் கணவனோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் உடலுக்கு என்று மரபார்ந்து கடமைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவையாவன,
“1. கணவன் என்கிற ஆண் உடலைத் தனதுதெய்வமாக ஏற்றுக் கொள்ளுதல்
- கணவனது உயிர்ச் செயல்பாட்டை (பாலியல் – காமம்) முழுமையும் ஏற்று நிறைவேற்றி அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றுத் தருதல். குறிப்பாக ஆண் மக்களைப் பெற்றுத் தருதல் பெற்ற ஆண் மகவைக் கண்ணும் கருத்துமாக காத்து சமூக உடலுக்குள் தனித்த ஆண் உடலாக (குறைந்தது 12 வயது வரை) உலவ விடுதல்.
- கணவனது உடல் நலம் வாழ்நாள் ஆகியவை மனைவியின் நன்னடத்தையின் பாற்பட்டது என்பதால் தனது நடத்தைகள் அத்தனையும் குடும்பத்துக்குள் விதிக்கப்பட்ட கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுதல்” (3)
இத்தகு விதிகளை ஏற்றுச்செயல்படும் பெண் திறமையானவள் என்றே போற்றப்படுகின்றாள். இதனை மகளிர் கவிதைகள் எதிர்வாதம் செய்துள்ளன.
இந்தக் கடமைகள் நிறைவேற்றுதல் காரணமாகத்தான் பெண் உடல் படைக்கப்பட்டதாக ஆணாதிக்கச் சமூகம் நினைத்து வருகின்றது என்று சுகந்தி சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.
“மரமாகிக் காய்க்கும் என்று தென்னங்கன்றும்
குலைகுலையாய் வாழையும்
அவ்வப்போது சமைக்கவென்று
மாவும் பலாவும்
… … … … … … … …
தன் வீட்டுத் தோட்டத்தைப் பராமரித்தான்
கூடவே
ஓடியாடி வேலை செய்ய பெண்குழந்தைகள்
ஒரு மனைவியும்
சந்ததிக்கென ஒரு ஆண் குழந்தை வேண்டும் என
ஒரு மனைவியும்
தோட்டத்துக்குக் காவலாய் வைத்திருந்தான்” (சுகந்தி சுப்பிரமணியன், மீண்டெழுதலின் ரகசியம்,ப.84 )
மேற்கண்ட ‘சந்ததி’ என்ற கவிதை குழந்தை வளர்ப்பு, வாரிசு உருவாக்கம், ஆணின் பாலுறவுத் தேவை என்ற மனைவியின் பங்குநிலையைப் பதிவு செய்துள்ளது. “கணவன், மனைவி, குடும்பம் என்றும் சமூக உடலுக்குள் பெண்ணுடலின் இயக்கம் என்பது குடும்பம் என்கிற அக்களத்திற்குள்ளேயே மேலும் உடல்களை உற்பத்தி செய்து அவற்றைப் பாதுகாத்து சமூக உடலுக்குள் இணைப்பதுடன் நிறைவடைவதாக இருக்கிறது” (4) என்ற கருத்தின் வெளிப்பாடாக மகளிர் கவிதைகளைக் காணலாம். மாலதி மைத்ரியின் கவிதை பெண்ணின் மறுஉற்பத்திதிறனை மேலான ஆளுமையாகப் பாராட்டியுள்ளது. இனப்பெருக்கம் என்பது பின்னடைவு அல்ல அது உயிர்களை எல்லாம் பிரசவிக்கும் ஆளுமை என்று கொண்டாடியுள்ளது. ஆதித்தாயின் பிம்பமாக, பெண்மையே உயிர்களின் உற்பத்தி மையம் என்று ஆணவம் கொண்டுள்ளது.
“என் பாட்டியிடம்
ஐந்து அரபு ஒட்டகங்களும்
ஆறு கிரேக்க குதிரைகளும்
ஒரு மீன் கூடையும் இருந்தன
அவள் தனது கூரை வீட்டின்
சுற்றுக் கால்களிலேயே
அவைகளைக் கட்டி வைத்திருந்தாள்
அதனால் வீடு குழந்தைகள்
கும்மாளமிடும் மைதானமாயிருந்தது
விடிவெள்ளியே எழ அஞ்சும்
கருக்கலிலே வாசல் பெருக்கி
சட்டிப்பானை கழுவி
… … … … … … … …
மாலை வீடு வந்து சேர்வாள்
இந்த ஒட்டகங்களும் குதிரைகளும்
அவளைப் பின்தொடர்ந்து வந்து விட்டன…” (மாலதி மைத்ரி, ஒட்டகங்கள் குதிரைகள் ஒரு மீன்கூடை,ப.924-25)
மகளிர் கவிதைகளைப் படைக்கும் படைப்பாளர்களிடையே சந்ததி உருவாக்கம் என்பது தாழ்நிலையாகவும், உயர்நிலையாகவும் பிம்பப்படுத்தப்பட்டுள்ளன.
செயலற்ற நிலை
இந்திய சமூக அமைப்பில் பெண் என்பவள் தாய் அல்லது மனைவி என்ற நிலையில் இயங்கின்றாள். குடும்ப வார்ப்பில் பிரித்தறிய இயலாது அவள் வாழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. “இந்திய சமூகத்தில் ‘பெண்’ குழந்தை ‘வரப்போகிற ஒரு கணவனுக்காக வாழப்போகிற ஓர் அடிமை! அதற்காகத்தான் தயாரிக்கிறோம்’ என்ற மனேபாவத்தை அப்பெண் சிறுமியாக இருக்கும் போதே அடையும் படியாகக் குடும்பத்தின் நிர்வாக அமைப்புக்கள் அமைத்துள்ளன. எனவே, ஓர் இந்தியப் பெண் முன் பின் பழக்கமில்லாத ஏதோ ஒரு ஆடவனுடன் , திருமணத்தன்றே மனைவியாக அடிமைவேலை செய்யத் தயாராகிவிடுகிறாள்” (5) என்ற கூற்றுக்கு ஆதரவாக, தமது அடக்குமுறை குறித்து குரல் கொடுத்துள்ளன. இதனை ஏற்று வாழும் பெண்ணின் மனநிலையை சுகந்தி சுப்பிரமணியனின் “வாழ்க்கை” என்னும் கவிதையின் மூலம் அறியலாம்.
“வாழ்க்கை பூராவும் தியாகம் செய்வதா,
நான் கேட்டேன் அந்தப் பெண்களை
இதுதான் வாழ்க்கை என்றாள் ஒருத்தி
எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும்
வாழ்கிறேன் என்றாள் மற்றவள்
… … … … … … … …
வலுவுடன் எதிர்க்க முடியாமலும் ஓய்ந்துபோன
கால்கள் நடக்கின்றன மெதுவாய்
தலைகள் நிலத்தைப் பார்த்தபடி
நிமிர முடியாமல்” (சுகந்தி சுப்பிரமணியன், மீடெழுதலின் ரகசியம்.ப.30 )
பெண்கள் இல்லம் என்ற குறுகிய வட்டத்திற்குள் சிறைப்பட்ட பின்னர், அதைச் ‘ சிறை’ என்று உணர்ந்தும். அதிலிருந்து தப்பிஓட முயற்சியின்றி முடங்கி கிடக்கின்றனர். பெண் குடும்பத்தில் உணர்வற்றப் பொருளாக செயலற்றுக் கிடத்தலைப் பின்வரும் கவிதையும் குறிப்பிடுகின்றது.
“வீடு
நாற்காலி
மேற்கூரை
சுவர்கள்
கடிகாரம்
நாள்காட்டி
இவற்றுடன் ஒரு பெண் யந்திரம்
எல்லாமும் அவளுக்கென குடும்பமும் சமூகமும்
சொல்கிறதாய் நம்பியபடி
கண்களைக் குருடாக்கி
காதுகளைச் செவிடாக்கி
சொற்களை இழந்து
மனதைப் புண்ணாக்கி
தியாகக் கடலில் மூழ்கியதால்
சந்தோஷமாய் இருக்கும்
யந்திரம்
பெண்களுக்கென சமூகம்
பிரத்யேகமாய் உருவாக்கும்
சொற்கள், நியதிகள்
உரிமைகளைப் பறித்தெடுத்து
அகதியாக்கிய பின்னும்
அவள் சலனமற்று
குடும்பத்தின் உயிர்நாடியாகிப் போனாள்” (சுகந்தி சுப்பிரமணியன், மீடெழுதலின் ரகசியம் ப-82 )
‘பெண்’ என்ற இக்கவிதை குடும்பத்திற்குள் இயங்கும் பெண்ணின் மீளாத்துயரத்தை, குடும்பம் என்ற கூட்டுக்குள் உறைந்து போன மனநிலையைச் சித்தரித்துள்ளது. பெண் என்பவள் இயந்திரமாக, உயிர் இருந்தும் உணர்வற்ற சடலமாக, உள்உணர்வுக்கு மதிப்பற்று வாழும் அடக்குமுறையை வெளிப்படுத்தியுள்ளது.
தொகுப்புரை
- மகளிர் கவிதைகள் குடும்ப நிறுவனத்தில் பெண்ணுக்கான தலைமைத்துவமே அடிமைத்தனம் தான் என்று வாதம் செய்துள்ளன. ஆளுமையைக் காட்டி பெண்ணை அடிமைநிலையில் வைத்துள்ள ஆண்களின் சாதுரியத்தைச் சுட்டிக்காட்டி அதனை மாற்றி அமைக்குமாறு எதிர்வாதமும் செய்துள்ளன.
- பெண்ணின் மறுஉற்பத்தித்திறனை உபாதையாக கருதும் பெண்களும் உவகையாக கருதும் பெண்களும் உள்ளனர்.இனப்பெருக்கம் தான் ஆளுமை என்று சிற்சில கவிஞர்கள் எதிர்வாதம் செய்துள்ளனர்.அடிமைத்தனம் என்று உறுதிபட கூறுகின்றனர்.
- குடும்ப உறுப்பினர்களில் பெண்களுக்கு மட்டுமே இரட்டைச்சுமை என்று குறிப்பிட்டு தத்தமது நிலைப்பாட்டை மாற்றவும் எதிர்வாதம் செய்துள்ளனர்.
சான்றெண் விளக்கம்
- Yanagisako, Sylvia Junko. “Family and Household: The Analysis of Domestic Groups.” Annual Review of Anthropology 8 (1979): 161–205.
- இரா. பிரேமா, பெண் எழுத்துக்களின் அரசியல் , ப .36
- க. பாஸ்கரன், சமுதாயத்தத்துவம் , ப.50
- ச. பிலவேந்திரன். தமிழ்ச்சிந்தனை மரப நாட்டுப்புறவியல் ஆய்வுகள், ப.140
- மேலது, ப.136
- க.பஞ்சாங்கம்,பெண் –மொழி –படைப்பு,ப.12