
ஓடிக்கொண்டிருந்த நதி வறண்டு கிடக்கிறது
ஏன் என்று தெரியுமா ?
ஆறாத பெண்களின் கண்ணீர் வற்றிப் போய்விட்டது
துயரங்கள் ,துக்கங்கள் ,துன்பங்கள்
இவற்றிற்கு அழுதழுது கண்களில் நீர் வற்றிப் போயிற்றாம்
கோடை காலத்து நதிகளைப் போலவே
பெண்களின் கண்ணீர் நதியும் கண்ணீரே தீர்ந்து போய் வறண்டு விட்டதாம்
ஏன் என்று கேட்பாரில்லை
எங்கு சென்றாலும் நியாமும் கிட்டவில்லை
தேர்க் காலில் மகனை பறிகொடுத்த மனுநீதி சோழன் கதையறிவோம்
மனுக் கொடுத்தாலும் மறந்து விடுகிற அரசியலாளரை
என்னென்று விழிப்பது ?
பிறந்த வீட்டிலிருந்து என்ன சீர்கொண்டு வந்தாய் பெண்ணே எனக் கேட்கும் சமூகத்தில்
புகுந்த வீட்டில் என்னென்ன இழந்தாய் எனக் கேட்க
ஒர் நாதியில்லை
கல்யாணங்கள் என்னவோ வசந்த மண்டபங்களில் தான் நடக்கின்றன
ஒருவேளை அது தான் உன் கடைசி வசந்தம் என்பதற்கான அறிவிப்போ அது
மெளனங்களை கண்ணீர் நதியா பிரசவித்த பெண்கள்
கண்ணீர் வற்றிப் போய்விட்டதால் அமைதியின் விளிம்புகளில் எரிமலை திரவமாக இரத்தத்தை மட்டும் கொண்டிருக்கின்றனர்
பாசம் என்பதும் நேசம் என்பதும்
பத்து மாதங்கள் கூட நீடிப்பதில்லை
மரித்துப்போன மனங்களுடன் எத்தனை பெண்கள் ,
எத்தனை இல்லறங்கள், யாரைக் கணக்கெடுப்பது ?
துயரத்தின் சோகத் தொடர்கதை வெளிச்சத்திற்கு வராமல் நனைந்த தலையணைகளில் உலர்ந்து கிடக்கிறது
அரசியலுக்கு வரும் பெண்கள் கூட அவமானங்களை
சந்திக்க வேண்டியிருக்கிறது
அதிகாரத்திற்கு வரும் பெண்களை அரசியில்வாதிகள்
நேர்முகமாகவும் ,மறைமுகமாகவும் பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள துடிக்கின்றனர்
நெடுகமைந்த சட்டங்களும் பெண்களுக்கு உடனே நீதியைத் தருவதில்லை
சட்ட மன்றங்களிலும் , நீதிமன்றங்களிலும் பேசுபொருளாக இருக்கும் பெண்கள் பத்தினிகள் அல்லர் என்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது
நீதி தேவதையும் ஒரு பெண் தான்
ஆனால் கண்களில் கறுப்புத் துணியுடன் அல்லவா தீர்ப்பு சொல்கிறாள்
அய்யகோ இதற்கொரு தீர்வில்லையா ?
கலா புவன் – லண்டன்